1992ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முதல் அனைத்து மகளிர் காவல்நிலையம் துவங்கப் பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, வரலாற்றில் இல்லாத முன்மாதிரி என்று வர்ணித்தார். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை ஆண் காவலர் களிடம் வெளிப்படுத்துவதில், காவல்நிலையத்தை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளைக் களைவதற் காகத்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். பெண் களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காகவும் திருமண உறவுப் பிரச்சனைகளை விசாரிப்பதற் காகவும் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டதென்று 2013-2014 சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. தற்போது 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், பெண்களுக்கு எதிரான (பெண்ணின் அந்தரங்கமான தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட விசாரிக்க வேண்டிய) பிரச்சனைகள் குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையம் விசாரிப்ப தில்லை. மிகப்பெரும் அளவுக்கு திருமண/குடும்பப் பிரச்சனைகளை கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாகவே மாறிவிட்டது.
சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கப் போக்கு அனைத்து மகளிர் காவல்நிலையங்களிலும் நிலவுகிறது. ஆண் காவலர்கள் பயன்படுத்தும் பெண்கள் விரோத, பெண்களை இழிவுபடுத்தும் வசவுகளும் பெண்களைத் தாக்குவதும் மகளிர் காவல்நிலையத்தில் சாதாரணமாக நடக்கின்றன. காவல்நிலையங்களில் வழக்கமாகக் காணப்படும் லஞ்ச லாவண்யத்திற்கு மகளிர் காவல்நிலையங் களும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் இன்னும் கொடூரமானதாகக் கூட இருக்கிறது. அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் அனைத்தும் பெரும் பாலும் ஆண்களுக்கு ஆதரவான காவல் நிலையங் களாகவே இருக்கின்றன. விதிவிலக்கான நிகழ்வு களில் அல்லது வழக்கத்திற்கு மாறாகச் செயல்படும் பெண்ணிய அதிகாரிகளின் செயல்பாடுகளின்போது மட்டுமே பெண்களுக்கு ஆதரவாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. சமூகத் திலும் அரசியலிலும் நிலவும் ஆணாதிக்கமும் அதற்குத் துணையாக இருக்கும் அரசின் கொள்கைகளும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் இந்தப் பெண்கள் விரோதப் போக்கிற்குக் காரணமாக இருக்கின்றன.
மதுரையில் நடந்த ஒரு வழக்கில் பாதிக்கப் பட்ட பெண்ணின் கணவன் சிவராமன் கிராம நிர்வாக அலுவலராக இருக்கிறார். காதலித்து மணந்த பெண்ணை அவர் கொடுமை செய்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி விரட்டி வந்துள்ளார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் அப் பிரச்சனையில் தலையீடு செய்தது. குற்றம் செய்த கணவன் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரினார். அனைத்து மகளிர் காவல்நிலையம் வழக்குப் பதிய மறுத்தது. இதற்கு எதிராக காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கை வேறு ஒரு அதிகாரிக்கு காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றினார். அந்த அதிகாரியும் வழக்குப் பதிவு செய்ய மறுத்தார். சமரச மையத்திற்கு அனுப்புவதாகச் சொன்னார். வழக்குப் பதிந்த பின்னர் சமரச மையத் திற்கு அனுப்பலாமே என பெண்ணின் தரப்பில் வைத்த கோரிக்கையைக் கண்டு கொள்ளவில்லை. அதனைக் கண்டித்தும் தொடர்ந்து பெண்களுக்கு எதிராகச் செயல்படும் மகளிர் காவல் நிலையங் களைக் கண்டித்தும் 18.12.23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அஇமுபெக மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் வள்ளிமயில் தலைமை தாங்கினார். தோழர் ஹில்டா மேரி, குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கத்தின் தோழர் பவானி, வழக்கறிஞர் தோழர் கோமதி, பெண்கள் கழகத்தின் மாநில குழு உறுப்பினர் தோழர் மல்லிகா, தோழர் மங்கையர்க் கரசி, இக்கமாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஈஸ்வரி ஆகியோர் உரையாற் றினர். பேசிய பெண்களின் கடுங்கோபம் பொது மக்களையும், காவலர்களையும் உலுக்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மனுநீதி நாளுக்கு வந்திருந்த பெண்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.
பின்னர், பெண்கள் கழகத் தலைவர்கள்,மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். தண்டிக்கப்படவேண்டிய குற்றமிழைத்த கிராம நிர்வாக அலுவலரின் மீது புகார் கொடுத்த பெண்ணும் அவர்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் தமிழ்நாடு அரசு சமரசத்திற்கு முதலிடம் என்று சொல்வதையும் சுட்டிக்காட்டிய மாவட்ட ஆட்சியர் குற்றவாளியான கிராம நிர்வாக அலுவலரைப் பாதுகாக்கும் தொனியிலேயே பேசினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பொதுவாக பாதிக்கப்பட்ட பெண் களே குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் பெண்களுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப் பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதாவே இருக்கின்றன. பெண்கள் அமைப்புகள் இதற்கு எதிராக களம் காண வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)