ஜூலை 16 அன்று இந்து தமிழ் திசை நாளேட்டில், மகளிர் உரிமைத் தொகையா? உதவித் தொகையா? என்ற கேள்வியுடன் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரையாளர் பிருந்தா சீனிவாசன் எழுதியிருந்த அந்த கட்டுரை, திமுக ஆட்சியை பலவாறும் குறை கூறியிருந்தது. திமுக அரசை குறை கூறுவதன் மூலம் திமுக எதிர்ப்பு வெளியை விரிவுபடுத்தி பாஜக- அதிமுகவுக்கு உதவும் வேலையை இந்து தமிழ் திசை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இந்த கட்டுரை, பெண்கள் மத்தியில் திமுக ஆதரவை சரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுரையை முன்வைத்து 'மகளிர் உரிமைத் திட்டத்தை' ஆய்வு செய்வோம்.
நிதி நிலையை காரணம் காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த திட்டத்தை செயல்படுத்தாமலிருந்த திமுக அரசு, ஜூலை 25 அன்று இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கான முகாம்களை அறிவித்திருந்தது. இந்த முகாமை தருமபுரியில் துவக்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பிருந்தா சீனிவாசனுக்கு பதில் கூறுவது போல, "இது உதவித் தொகை யல்ல; உரிமைத் தொகை" யென்று கூறியிருந்தார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பெண்களுக்கு செய்த "நல்ல திட்டங்கள்", "நலத்திட்டங்களை'யெல்லாம் பட்டியலிட்டும் காட்டினார். உரிமைத் தொகை பற்றிய விளக்கத்தை விரித்துக்கூறிய முதலமைச்சர், பெண்களது விலைமதிப்பில்லாத உழைப்பை சமுதாய ரீதியாக அங்கீகரிப்பதுதான் "உரிமைத் தொகை" என்றும் கூறியிருந்தார்.
உண்மை நிலமை என்ன?
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதும் அதிமுக வசமிருந்த பெண்கள் வாக்கு வங்கி திமுக பக்கம் திரும்பியதற்கும் "பெண்கள் உரிமைத் தொகை" வாக்குறுதி முக்கிய காரணம். ஆனால், சொல்லாத வாக்குறுதியான 'மகளிர் இலவச பேருந்து பயணத்' திட்ட' ஆரவாரத்தில் உரிமைத் தொகை திட்டம் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. கட்சிகளது விமர்சனம் பெண்களது அதிருப்தி, எதிர்வரும் மக்களவைத் தேர்தல் பின்னணியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக் திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது.
இந்த உரிமைத் தொகை திட்டத்தை அரசியல் களத்தில் எழுப்பியது மக்கள் நீதி மய்யம் கட்சி. இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பின்னணியில், திமுக தேர்தல் அறிக்கை அதை தனதாக்கிக் கொண்டது. ஆனாலும் திட்டம் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பொருளாதாரச் சுமையின் காரணத்தால் பின்வாங்கியது.
39,000 முகாம்கள் சொல்லும் செய்தி என்ன?
திட்டத்திற்கான பயனாளிகளை பதிவு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் 39,000 முகாம்களை ஏற்படுத்தியுள்ளது அரசு நிர்வாகம். ஆகஸ்ட் 16 வரை நான்கு கட்ட பதிவுகளை நடத்திட வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகங்களை முடுக்கி விட்டுள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணத்தை ஒரு அரசு உத்தரவு மூலம் செயல்படுத்திய முதலமைச்சர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இத்தனை விரிவான ஏற்பாட்டை செய்திருப்பது ஏன்? ஏன் என்பதை எவரும் எளிதாக புரிந்து கொள்ளமுடியும். பயனாளிகளின் எண்ணிக் கையை குறைப்பதுதான் இந்த "முகாம்களின்" நோக்கம். மேலும் திட்டத்துக்கு உள்ள கனத்த எதிர்பார்ப்பு, எதிர்ப்பாக உருவாகிவிடாமலிருக்க களமட்டத்திலேயே 'கட்டை' போடும் நோக்கம் கொண்டது. இதை அரசு அறிவித்திருக்கும் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டே புரிந்து கொள்ளலாம். இந்த நிதி ஆண்டுக்கு ரூ. 7000 கோடி ஒதுக்கியிருப்பதாக அரசு கூறுகிறது. ஏழு மாதங் களுக்கான இந்த தொகை ஒரு கோடி குடும்பங்களை சென்றடையும் என்று எதிர்பார்க் கலாம். முதலமைச்சர் சொல்வது போல் இது உதவித் தொகை அல்ல உரிமைத் தொகை என்றால் அனைத்து குடும்பங்களும் பெற தகுதி உடையவர்கள்தானே? தமிழ்நாட்டில் ஜூன் 2023 நிலவரப்படி, மொத்தம் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டைக்கு ரூ. 1000 என்றால், 15,680 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் உரிமைத் தொகை பெற தகுதி உள்ளவர்கள் என்று அரசின் வழிகாட்டுதல் கூறுகிறது. பெண்களுக்கு திருமண வயது 18 என்ற நிலையில், திருமணமாகி குடும்பத் தலைவிகளாகிவிட்ட 18 முதல் 21 வயதுவரை உள்ள பெண்கள் இந்த திட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். அனைவரையும் உள்ள டக்கிய அரசு என்று கூறிக்கொள்ளும் அரசு பெரும்பாலானவர்களை 'விலக்கி வைக்கும் அரசாக' இருக்கலாமா? ஆக அறிவிக்கப் பட்டிருக்கும் தொகையைக் கொண்டு 50% க்கும் குறைவானவர்களுக்கே "உரிமைத் தொகை" வழங்குவதற்காகவே 39,000 முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலமைச்சர் கூறியிருப்பதுபோல் பெண்களின் விலை மதிப் பில்லா உழைப்பை அங்கீகரிப்பது என்றால் ஒவ்வொரு பெண்ணினது உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டுமல்லவா? வேண்டு மானால் உயர்ந்த மேட்டுக்குடி பெண்களை, அவர்களது உழைப்பினடிப்படையில் விலக்கி வைக்கலாமே தவிர விலைமதிப்பில்லா உழைப்பைச் செலுத்தும் ஒவ்வொரு பெண்ணும் இந்த திட்டத்தில் சேர தகுதி உள்ளவர் களில்லையா? அதுதானே உழைப்பின் நீதி!
கர்நாடக தேர்தலில் அபார வெற்றி பெற்ற காங்கிரஸ், தேர்தல் வாக்குறுதிப்படி இல்லத்தரசி களுக்கு மாதம் ரூ. 2000 அளிப்பது என அறிவித்தி ருக்கிறது. இத்திட்டத்திற்கு, இந்து அடையாள மாக "கிரக லட்சுமி" என பெயர் சூட்டியிருப் பதையும் கவனிக்காமலிருக்க முடியாது. பெண்களுக்கு மாதம் ரூ. 1000 என்பதன் மூலம் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கிறது என்றால் கர்நாடகா இரண்டாவது மாநிலமாக இருக்கிறது.
எதிரும் புதிருமாக
இந்த திட்டத்தை ஒட்டி எதிரும் புதிருமான கருத்துகளும் காணக்கிடைக்கின்றன. 18 வயது வந்த அனைத்து பெண்களுக்கும் இந்த திட்டம் சென்று சேர வேண்டும். தொகையின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை களுக்கு மாறாக, இந்த அறிவிப்பு குடும்பச் சங்கிலியிலிருந்து பெண்களை விடுவிப்பதற்கு மாறாக குடும்பச் சங்கிலியை "நியாயப் படுத்துவதாக இருக்கிறது" என்ற கருத்துகளும் உள்ளன. மேலும், இலவச பேருந்து போன்ற திட்டங்களை நிறுத்திவிட்டு வேலை, வருமானம் அளிக்கும் திட்டங்களே வேண்டுமென்று கேட்க வேண்டும் என்ற கருத்துகளும் உள்ளன. பெண்கள் மத்தியில் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் செயல்படுத்தப் பட்டாலும் 'இலவச பேருந்து' பெண்களுக்கு ஒரு பயனுள்ள திட்டமே. அதிலும் கட்டுமான பெண் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புசாரா பெண்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்ட மாகும். ஆனால், குறிப்பிட்ட நிறமுள்ள பேருந்துகளில் மட்டும் என குறுக்குவதற் கெதிராக பெண்கள் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும். அனைத்து நகரப் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தக் கோர வேண்டும். மேலும் பல சமயங்களில் ஆணாதிக்க செல்வாக்கு பெற்ற ஓட்டுநர், நடத்துநர்களின் எரிச்சலான நடத்தையை (அவர்களை எதிரிகளாகக் கருதாமல், பெண் தொழிலாளர், ஆண் தொழிலாளர் இடையே மோதலை உருவாக்கும் சூழலுக்கு இரையாகாமல்) நட்புடன் சுட்டிக்காட்டி, ஆண்டிப்பட்டி லட்சுமி போல் தட்டிக் கேட்கவும் வேண்டும்.
பெண்விடுதலை அரசியலை நோக்கி...
மகளிர் உரிமைத் தொகை பற்றிய விவாதத்தை குறுகிய தளத்திலோ, வெறும் பொருளாதாரவாதத் தளத்திலோ அணுகக் கூடாது. துவக்கத்தில் சுட்டிக்காட்டிய இந்து தமிழ் திசை கட்டுரையாளர் பிருந்தா சீனிவாசன், அவரது கட்டுரையில் லெனினை மேற்கோள் காட்டுகிறார். "சலிப்பூட்டும் வீட்டு வேலையி லிருந்து பெண்கள் விடுவிக்கப்படாமல் மானுட விடுதலை சாத்தியமில்லை" என்ற லெனினது சொற்களை சுட்டிக்காட்டுகிறார். முதலாளித்துவ சமூகத்தில் பெண்களது சமூக உழைப்பு அங்கீகரிக்கப் படாதது குறித்து உலகில் முதலில் பேசியவர்கள் கம்யூனிஸ்டுகளே. எனவேதான் தவிர்க்க முடியாமல் கட்டுரையாளர் லெனினை மேற்கோள் காட்டுகிறார். முதலாளித்துவ உற்பத்தி (சுரண்டல்) முறையில் பெண்களது உழைப்பும் பொதிந்திருக்கிறது. அடுத்த நாள் உழைப்புக்கு ஆண் தொழிலாளியை தயார்படுத்தி தருவதன் உணவு சமைத்து கொடுத்து, துணிமணிகளை துவைத்துக் கொடுத்து, அவனது இதர தேவைகளையும் வழங்குவதன் வாயிலாக, உற்பத்திக்கு வீட்டிலுள்ள பெண் பங்களிக்கிறாள். எனவேதான் அந்த உற்பத்தியில், உற்பத்தியின் விளைச்சல்களில் பெண்களுக்கும் பங்கிருப்பதை, முதலாளித்துவ உற்பத்தி முறையை ஆய்வு செய்த மார்க்ஸ், எங்கல்ஸ் முதல் முறையாக பகிரங்கப்படுத்தினர். சோசலிஸ்ட் ஆட்சியில் திட்ட ரீதியாக பெண்களது உழைப்புக்கு சமூகத் தகுதி அளித்து லெனின் செய்து காட்டினார். சோவியத் ருஷ்யாவில் பொது சமையல் கூடம் கொண்டு வந்து, வீட்டிலுள்ள சமையலறைக்கு மூடுவிழா நடத்தினார். பொது சலவைக் கூடம் ஏற்படுத்தி, பெண்களை துணி துவைக்கும் இயந்திரமாக இருந்ததை தடுத்து நிறுத்தினார். குழந்தை வளர்ப்பை சமுதாயத்தின் பொறுப் பாக்கிக் காட்டினார். இவ்வாறு, முடக்கப்பட்டு கிடந்த பெண்களது அளப்பரிய சமூகப் பங்களிப்பை சமூகத்துக்கு அடையாளம் காட்டினார். பெண் விடுதலை நோக்கிய பாதைக்கு கட்டியம் கூறினார்.
பெண்ணுரிமை அரசியலில் பெரியார், இடது சாரிகள் வழியாக தமிழ்நாட்டில் ஒரு மரபு தோன்றி உருவாகி உள்ளது. இதைத்தான் பெண்ணுக்கு சொத்துரிமை, பெண்கல்வித் திட்டங்கள், பெண்கள் சுய உதவிக் குழு, மகளிர் காவல்நிலையம் என முதலமைச்சர் பட்டிய லிடுகிறார். இந்தியாவில் முதல் முதலில், சொத்தில் பெண்களுக்கு உரிமை என்று சட்டம் கொண்டு வந்த தமிழ்நாட்டு முயற்சியை பாராட்டுகிற அதேவேளை, இந்த சட்டத்தின் மூலம் எத்தனை பெண்கள் சொத்துரிமை பெற்றனர் என்பது பற்றி ஒரு வெள்ளையறிக்கை கேட்கவும் பெண்கள் அமைப்புகள் முன்வர வேண்டும். மகளிர் காவல் நிலையங்கள் "கட்டைப் பஞ்சாயத்து" இடங்களாக பெண் களுக்கு எதிராக செயல்படுவதை சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டிய தையும் மறந்துவிடக் கூடாது. பெண்கள் சுய உதவிக் குழுக்கள் போன்றவை எதுவும் முதலாளித்துவ முறைக்குள், அதுவும் தனியார்மய, தாராள மய, உலக மய காலகட்டத்தில் செய்யப்படும் சீர்திருத்தங்களே என்பதையும் மறந்து விடக் கூடாது. பெண்கள் பற்றி இத்தனை அக்கறை காட்டும் ஆட்சி, டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டுமென்ற ஒட்டுமொத்த பெண்களது ஒற்றை கோரிக்கையை ஏன் உடனடியாக நிறைவேற்றக் கூடாது? சீர்திருத்தங்களை அல்லது நலத்திட்டங்களை முதலாளித்துவ மாடலை நிலைநாட்டும் முயற்சிகளாகவே உள்ளன என்பதைப் புரிந்து கொள்வோமானால் அவற்றை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் கோர வேண்டும்; அதோடு, சோசலிச மாடலை நோக்கி விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ரூ.1000 'மகளிர் உரிமைத் தொகை' பெற 1001 நிபந்தனைகளை விதிக்கிறதென்றால் அரசைச் சூழ்ந்திருக்கும் பொருளாதார தர்க்கம் புரிபடுகிறது.
இது தொடர்பான விவாதம், முதலாளித்துவ பொருளாதார தர்க்கத்தை உடைத்து, குடும்பச் சங்கிலியை இறுக்கிப் பிணைக்கும் செயலை தகர்க்கும் முயற்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
(ஜூலை 16, 2023 அன்று, கந்தர்வக் கோட்டையில் நடந்த அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலக் கூட்ட விவாதங்களின் அடிப்படையில் எழுத்தப்பட்டது.)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)