இந்த ஆண்டு ஏப்ரலில் துவங்கிய புதிய வேலை 6 மாதங்கள் கடப்பதற்குள் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கியது. இது இதற்கு முந்தைய ஆண்டு செலவிடப்பட்ட தொகையைவிட 33 சதம் குறைவானதாகும். தற்போதைய நிலையில் வேலைத் திட்டம் ரூ.6,146.93 கோடி பற்றாக்குறையில் இருக்கிறது.
இதற்கு முந்தைய ஆண்டான 2022-23ல் ரூ. 73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.60 ஆயிரம் கோடி, சென்ற ஆண்டுக்கான ரூ.73 ஆயிரம் கோடியை விட 18 சதம் குறைவான தாகும். ஆனால், 60 ஆயிரம் கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மையல்ல. 2022-23 நிதியாண்டில் தொழிலா ளர்களுக்கு வைக்கப்பட்ட சம்பள பாக்கி மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், அந்த சம்பள பாக்கி போக, மீதமுள்ள ரூ. 43 ஆயிரம் கோடியை மட்டும் வைத்து கிராமப்புற மக்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பை வழங்கிட இயலாது.
இதனால், வாரக்கணக்கில் சம்பளம் வழங்கப்படாத நிலை இந்த ஆண்டும் ஏற்பட்டது. இதனால், சென்ற செப்டம்பர் மாதத்தின் தகவல்படி கிராமப்புற வளர்ச்சித்துறை ஒன்றிய அரசிடம் மேலும் 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரியிருந்தது. ஆனால், நிதியமைச்சகம் இதுபற்றி வாயைத் திறக்க வில்லை.
ஆனால், எதிர்க்கட்சிகள் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பிய பின்பு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வாய் திறந்தார். "வேலை உறுதித் திட்டம் கோரிக்கை எழுவதை ஒட்டி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் திட்டமாகும். மாநிலங்களிடமிருந்து கோரிக்கை வரும்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார். இது ஒவ்வொரு ஆண்டும் பாடப்படும் தேய்ந்துபோன பல்லவியாகும்.
இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் கோடியில் ரூ.56,105.69 கோடி செலவு செய்யப்பட்டுவிட்டது என்று ஒன்றிய அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறை புள்ளிவிவரங்கள் அளிக்கும் சொல்கின்றன. இதே அமைச்சகத்தின் வலைமனை புள்ளிவிவரம் ரூ.6,146 கோடி ரூபாய் பற்றாக்குறை என்று சொல்கிறது. இது குறித்து கிராமப்புற வளர்ச்சித்துறையின் செயலாளர் ஷகிலேஷ் குமார் சிங்கிற்கு கேள்விகளை ஊடகத்தினர் அனுப்பிய போது மௌனம்தான் பதிலாகக் கிடைத்தது.
ஒதுக்கப்பட்ட நிதி ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறையாகிப்போகிறது. அதுவும் ஏறக்குறைய செப்டம்பர் மாதத்திலேயே பணம் கையிருப்பு இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. "கேட்டால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று திரும்பத் திரும்ப சொல்லும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில்தான் துணை பட்ஜெட்டை நிறை வேற்றப்போகிறது.
வரும் நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரையான காலத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது. அப்போதுதான் வேலை உறுதித் திட்டத்திற்கான கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று தோன்றுகிறது.
2021-22 நிதியாண்டிலும் 2022-23 நிதியாண்டிலும் வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 25 சதம் வெட்டி சுருக்கப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளிலும் கிராமப்புற வளர்ச்சித்துறை ரூ.25,000 கோடிகளை ஒதுக்கும்படி கேட்டது. ஆனால், ரூ.16,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பலன்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 11.37 கோடி ஆகும். இது 2022 டிசம்பர் மாதம் வரை வேலை பெற்றுள்ளவர்கள் பற்றிய கணக்கு என்று கிராமப்புற வளர்ச்சித்துறை தெரிவிக்கிறது. இத்திட்டத்தின் செயல்பாடு மிக மோசமான சூழலுக்கு சென்று தற்போது தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேலை உறுதித் திட்டத்தில், தமிழ் நாட்டில் மட்டும் 93.35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்றாலும், 65 லட்சம் பேர்களுக்கே வேலை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களிலும் 86 சதவிகிதம் பேர் பெண்கள், 14 சதவிகிதம் பேர் ஆண்கள், ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக் கையில் 30 சதவிகிதம் பேர் பட்டியல் பழங்குடியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி ஒதுக்கீட்டைச் சுருக்குவது, ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம், புகைப்படம் எடுப்பது கட்டாயம் என்பது போன்ற பல்வேறு நடைமுறை தந்திரங்களைப் பயன்படுத்தி மக்களை வேலை உறுதித் திட்டத்திலிருந்து விலக்கி வைப்பது மோடி அரசின் தந்திரமாக நீடித்து வருகிறது. கிராமப்புற இந்தியாவின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால் மோடி ஆட்சிக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.