மதிப்பிற்குரிய தலைவர் தோழர் திருமாவளவன் அவர்களே, தோழர்கள் சிந்தனைச் செல்வன், துரை.ரவிக்குமார் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இதர தலைவர்களே, விசிகவின் உறுப்பினர்களே, என்னோடு சேர்ந்து விருதுகளைப் பெறுகின்ற மரியாதைக்குரிய தோழர்கள் டி.ராஜா, தோழர் கே. பாலகிருஷ்ணன், திரு. அப்பாவு, திருமதி தாயம்மாள் அறவாணன், திரு. மோகன் கோபால், திரு. ராஜேந்திர பால் கவுதம் அவர்களே, தோழர்களே, நண்பர்களே! வணக்கம்!
உங்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்திய அரசின் நெம்புகோல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களிடமிருந்து இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு இடைவிடாத தாக்குதல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமூக சமத்துவத்திற்கும் சமூகத்தில் ஏற்றம் பெறுவதற்குமான போராட்டம் திட்டமிட்ட முறையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டி ருக்கிறது. சுதந்திர, பன்மைத்துவ இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தால் உரிமைகள் வழங்கப்பெற்றுள்ள மக்கள் அச்சமூட்டுகிற வகையில் இராணுவக் கட்டுப்பாடு போன்ற கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாட்டிற்கும் வெறுப்பு நிறைந்த பிரிவினைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதன்மைச் சிற்பியும் சாதியை ஒழித்துக் கட்டும்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறைகூவல் விடுத்தவருமான பாபா சாகேப் அம்பேத்கர் பெயரால்வழங்கப்படும் விருதினை மிக்க பணிவுடன் பெற்றுக் கொள்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களே, இந்த இனிய வியப்பை எனக்கு ஏற்படுத்தியதற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக்காலத்தில், சமுக மாற்றத்துகாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கத்தில் பல்வேறு நீரோட்டங்கள் நெருக்கமாக வந்து கொண்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். இதை நம்மால் இந்தியா முழுவ திலும் வலுவான பாசிச எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுவதற்கு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று உளமார நம்புகிறேன்.
டாக்டர் அம்பேத்கர் சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அறைகூவலை மட்டுமே நமக்குத் தரவில்லை. அந்தத் திசையில் நாம் முன்னேறிச் செல்வதற்கான வழிகளையும் சுட்டிக் காட்டியுள்ளார். சாதி என்பது உழைப்புப் பிரிவினைதான் என்று கூறி அதை நியாயப் படுத்தும் கருத்தை நிராகரித்த அவர், சாதி என்பது உழைப்பாளர்களின் பிரிவினையே என்று கூறி, உழைப்பாளிகள் அல்லது தொழிலாளர்கள் ஒரு சுயேச்சையான வர்க்கமாக ஒன்றிணைக்கப்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். டாக்டர் அம்பேத்கர் விட்டுச் சென்ற சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் புகழ்மிக்க மரபு, சமுதாய மாற்றத்துக்கான நமது தேடலுக்கு உத்வேகத்தையும் ஆழ்ந்த புரிதலையும் வழங்கு கின்ற செல்வக் களஞ்சியமாக விளங்குகிறது. அதே போன்றதுதான் வைசிராயின் நிர்வாகக் குழுவில் அவர் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோது உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் சாதிக்கப்படுவதில் வழங்கிய பங்களிப்புமாகும். கோவில் நுழைவு உரிமை என்பதற்கு மேல் அவர், பொது மூல வளங்கள் அனைத்தும் சமுதாயத்திலிருந்து விலக்கப் பட்டிருந்த மக்களும் சரிசமமாக அடையப் பெற வேண்டும் என்பதை விரும்பினார். அனைத்து சாதியினரும் கலந்துண்ணுவதைவிட, அகமண முறை மூலம் சாதி மறுஉற்பத்தி செய்யப் படுவதைத் தடுப்பதற்காக சாதி மறுப்புத் திருமணங்களுக்கு அழுத்தம் கொடுத்தார். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சுதந்திரமான தேர்வுகளை மேற்கொள்வதற்கான உரிமைகளைப் பெறுவதற்காக அவர் ஓய்வொழிச்சல் இன்றிப் பாடுபட்டார்.
ஆழமாக வேரூன்றியிருந்த சமூக அநீதிக்கு எதிரான உறுதியான நடவடிக்கையாக அவர் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி, இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் "கல்வி, கிளர்ச்சி, அமைப்பாகுதல்" என்ற மும்மைக் கோட் பாட்டைக் கடைப்பிடித்து முன்னேறிச் செல்லுமாறு கூறினார். இன்று இட ஒதுக் கீட்டுக்கும் கல்விக்குமான உரிமை புதுப்பிக்கப் பட்ட தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது, இட ஒதுக்கீட்டுக்கு குழி பறித்தல், கல்வியைத் தனியார்மயமாக்குதல், வேலைகளைத் தற்காலிக மானவையாக்குதல் என்பன, இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, ஏதுமற்ற ஏழைகள் சமுதாயத்தில் ஏற்றம் பெறுவதற்கும் சமத்துவத்திற்காக முன்னோக்கிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திரிசூலமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சென்னைக்கு வரும் வழியில் நான் ஒரு நாள் நாக்பூரில் தங்கியிருந்து தீட்சாபூமிக்குச் சென்று பார்த்தேன். டாக்டர் அம்பேத்கரும் அவரைப் பின்பற்றியவர்களும் பெருந்திரளாக பௌத்தத்தைத் தழுவிய நிகழ்வு, சாதிய ஒடுக்குமுறைக்குக் காட்டப்பட்ட மாபெரும் எதிர்ப்பும், பெருந்திரளான மக்களால் வேத நூல்கள் நிராகரிக்கப்பட்டதும், எவரொருவரும் தனது மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமையை கூட்டாக ஒன்றிணைந்து வலியுறுத்திப் பயன்படுத்திக் கொண்டதும் ஆகும். இது, மனுவாதம், இந்திய பாசிசம் ஆகியவற்றின் கருத்தியல் தலைநகரமாக விளங்கும் நாக்பூரில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசமைப்புச் சட்டம் அரசமைப்பு அவையால் ஏற்றுக்கொள்ளப்படும் தருணத்தில், டாக்டர் அம்பேத்கர் சில தெளிவான எச்சரிக்கை களை விடுத்தார். அனைவருக்கும் வாக்குரிமை தரப்பட்டதைக் கொண்டு திருப்தியடையாமல், பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகளை நாம் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று கூறினார். இந்த ஏற்றத்தாழ்வுகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் வாக்குகளால் தரப்படும் சமத்துவம் அர்த்தமிழந்துவிடும் என்று எச்சரித் தார். டாக்டர் அம்பேத்கரைப் பொறுத்தவரை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ள தொகுப்பு; அந்தத் தொகுப்பால் மட்டுமே சாதி அமைப்பால் ஏற்படுத்தப்படும் தீட்டையும் களங்கத்தையும் முடிவுக்குக் கொண்டு வர முடியும். இன்று தலித்துகள் பல்வேறு நிலைகளில் புதுப்பிக்கப்பட்ட விலக்குகளை அனுபவித்துக் கொண்டிருக்கையில், முஸ்லிம்கள் அப்பட்டமாக விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு ஐரோப்பாவில் யூதர்களுக்கு நேர்ந்தது போல, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனியிடங்களில் மட்டுமே வாழவேண்டிய புதிய தலித்துகளாக உருவாகிக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவர்களும்கூட இந்தியாவின் பல பகுதிகளில் அதிகரித்துவரும் காழ்ப்புணர்வுகளை மட்டுமல்ல, வன்முறைத் தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளனர். இன்று இந்தியாவில் பக்தி வழிபாடு என்பது அறிவையும் தகவல்களையும் பரப்புகின்ற அமைப்பு முழுவதையும் விட முக்கியமான தாக்கப் பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, பாபாசாகேப் அம்பேத்கர், இந்து இராஜ்ஜியம் இந்தியாவில் யதார்த்தமானதொன்றாக ஆகி விடுவதை அனுமதிப்பதற்கு எதிரான மிகக் கூர்மையான எச்சரிக்கையை விட்டுச் சென்றுள்ளார். இந்து இராஜ்ஜியம் என்பது, இந்தியாவிற்கு ஏற்படும் பேரழிவு என்றும் நாம் எந்த விலையேனும் கொடுத்து அது ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
நாம் சென்னையில் கூடியிருக்கும் இன்று, இந்திய மக்கள் தொற்று நோய்ப் பரவலின் காரணமாக அவதியுற்றுக் கொண்டிருந்தபோது இந்தியாவின் கருவூலத்திற்குப் பெரும் செலவு ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றப் புதுக் கட்டடம், தன்னைத்தானே உயர்வாகக் கருதிக் கொண்டிருக்கும் பிரதமரால் அரசமைப்புச் சட்டத்தின் உணர்வையும் அதற்குள்ள மரியாதையையும் வெட்கமும் நாணமும் சிறிதுமின்றி மீறும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சங்-பாஜக நிறுவனம், இந்தியாவிற்கு முதல் ஆதிவாசி குடியரசுத் தலைவரும், அதற்கு முன் ஒரு தலித் குடியரசுத் தலைவரும் கொடுக்கப்பட்டுள்ளதற்கு உரிமை கொண்டாடுகிறது. ஆனால் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கான அஸ்திவாரம் இடப்பட்ட போதோ, அக்கட்டடம் திறந்து வைக்கப்பட்ட போதோ, அந்த இரு குடியரசுத் தலைவர்க ளுக்கும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தகுதியும் மரியாதையும் மறுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலும் அதன் திறப்பு விழாவிலும் ஜனநாயக விரோத, குடியரசு விரோதக் குறியீடுகள் நிரம்பியுள்ளன என்ற உண்மையைப் பார்க்க நாம் தவறிவிடக் கூடாது. ஒரு மதச்சார்பற்ற குடியரசிலுள்ள ஜனநாயகத்தின் உறைவிடமான நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா, ஒரு முடியாட்சியில் அரசனுக்கு முடிசூட்டுவது போன்றதை ஒத்திருப்பதால், நிச்சயமாக அதில் ஒரு கடும் தவறு இருக்கிறது என்பதுதான் பொருள். அது நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் வெளிப்படுத்தப் பட்டுள்ள உணர்வும், பார்வையும் மிக தெளிவாக மறுக்கப்பட்டுள்ளதைத்தான் குறிக்கின்றது.
சில நாள்களுக்கு முன்புதான் உச்ச நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்திற்குள்ள நிர்வாக அதிகாரத்தை உறுதி செய்து, ஒன்றிய அரசாங்கம் துணை ஆளுநரின் மூலம் டெல்லி அரசாங்கத்திற்குள்ள கூட்டாட்சி உரிமைகளுக்குள் ஊடுருவக் கூடாது என்று கூறியது. அரசமைப்புச் சட்ட விவகாரங்களை விசாரணை செய்வதற்காக உச்சநீதிமன்றம் அமைத்த அரசியல் சாசன அமர்வின் (Constitutional Bench) தீர்ப்பை இரத்து செய்யும் வகையில் நிர்வாக இயந்திரம் ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து, நீதித்துறையின் மீதான போரை அறிவித்துள்ளது. டாக்டர் அம்பேத்கர் எந்தப் பேரழிவுக்கு எதிராக நமக்கு எச்சரிக்கை விடுத்தாரோ அந்தப் பேரழிவு ஏற்படப்போகும் அச்சுறுத்தலைக் கண்டு இந்திய மக்களாகிய நாம் விழித்தெழ வேண்டிய தருணம் இது. தோற்கடிக்கப்பட வேண்டிய ஓர் அழிவும் வென்றெடுக்கப்பட வேண்டிய ஒரு கனவும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நவீன இந்தியாவுக்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்களும் தங்களிடமிருந்த அனைத்தையும் தியாகம் செய்வதவர்களும் கண்ட கனவும் நம் முன் நிற்கின்றன.
இந்த ஆண்டின் அம்பேத்கர் சுடர் விருதை சிபிஐ (எம்எல்) சார்பிலும் இந்தியப் புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் முகாமின் சார்பிலும் பணிவுடன் பெற்றுக்கொள்வதுடன், சாதியை அழித்தொழிக் கின்ற பணிக்கும் இந்தியாவை ஒரு வலுவான ஜனநாயகமாக, உறுதிமிக்க வகையில் மதசார்பற்ற, உயிர்த்துடிப்புள்ள பன்மைத்துவம் கொண்ட உண்மையான சோசலிச தேசமாக மாற்றுகின்ற பணிக்கும் என்னை நான் மீண்டும் அர்ப்பணித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி.
இன்குலாப் ஜிந்தாபாத்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)