இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளன. இலங்கையின் அரசியலில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கை சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் அல்லது கூட்டணிகளை நிராகரித்து இலங்கை ஒரு புதிய தேர்வை தேர்ந்தெடுத்துள்ளது. தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளரான, ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) தலைவர் அனுரா குமார திசநாயகே அதிபராக வெற்றி பெற்றுள்ளார். முன்னுரிமை அடிப்படையிலான இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. வெற்றிக்கான 50% அளவை விட அவர் குறைவான வாக்குகளையே பெற்றார். இருந்தபோதும், அவருடைய போட்டியாளர்களை விட பெருமளவு முன்னிலை பெற்ற காரணத்தால் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். திசநாயகே 42.31% வாக்குகளும், இரண்டாவதாக வந்த சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச 32.76% வாக்குகளும் பெற்றனர். ஆட்சியிலிருந்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க 17.27% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
இலங்கையின் தேர்தல் அரங்க மையத்திற்கு ஜேவிபி/என்பிபி வந்த நிகழ்வு கண்கவரும் விதத்தில், திடீரென நிகழ்ந்த ஒன்று போல தோன்றலாம். ஏனென்றால் ஐந்தாண்டுகளுக்கு முன்பு திசநாயகே 3% க்கு சற்று கூடுதலான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இருந்தபோதிலும் இலங்கையில் பல பத்தாண்டுகள் நன்கு அறியப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக ஜேவிபி இருந்து கொண்டிருக்கிறது. தனியாக பிரிந்து வந்த கம்யூனிச குழுவாக ரோகன விஜேவீர அவர்களால் 1965இல் இது அமைக்கப்பட்டது. 1971 இல் அதிகாரத்தைக் கைப்பற்ற அரசுக்கு எதிரான தோல்வியுற்ற கலகத்திற்கு ஜேவிபி தலைமை தாங்கியது. அதன் காரணமாக ரோகன விஜேவீர, பிற தலைவர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 1977இல் விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். ஜேவிபி தேர்தல் களத்தில் நுழைந்தது. 1982ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 4.16% வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையே அவர் பிடித்தார். 1987-ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த காலகட்டத்திற்குள் தமிழர்களுக்கு எதிராக தீய சிங்கள பேரினவாதத்தை தழுவிக் கொண்ட ஜேவிபி, அரசுக்கு எதிராக மீண்டுமொரு திட்டமிட்ட கலகத்தை அரங்கேற்றியது. அதுவும் தோல்வியைத் தழுவியது. விஜேவீரவின் இறப்புக்குப் பிறகு 1994 இல் அப்போதைய முதன்மை எதிர்க்கட்சியான எஸ்எல்எஃப்பி-ஐ, ஜேவிபி ஆதரித்தது. 2004 இல் அது யூபிஎஃப்ஏ அரசாங்கத்தில் இணைந்தது. மேலும் எல்டிடிஈ-க்கு எதிரான போரை ஆதரித்தது. இலங்கையின் இடது இயக்கத்திலிருந்து எழுந்து வந்திருந்த போதிலும், கடந்த வந்த பல ஆண்டுகளில் தீவிர சிங்கள பேரினவாத குணத்தை அது பெற்றது. சில முக்கிய தருணங்களில் இதுவே அதன் முதன்மை இயக்கியாகவும் செயல்பட்டது.
எவ்வாறாயினும் 2024 இல் எதிர்பாராமல் நிகழ்ந்த ஜேவிபி/என்பிபி வெற்றிக்கான தூண்டுதல், மார்ச் 2022 முதல் இலங்கையில் பற்றிப் படர்ந்த அர்கலயா (போராட்டம்) என அறியப்படும் பரந்த மக்கள் எழுச்சியில் இருந்து வந்தது. இந்த எழுச்சி ஆளும் ராஜபக்ச அரசாங்கத்தை ஆட்சியை விட்டு அகற்றியது. மேலும் இலங்கை ஆட்சி நிர்வாகத்திலிருந்து அவர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது. தவறான நிர்வாகம், மோசடி, ஊழல் காரணமாக ஏற்பட்ட தீவிர பொருளாதார நெருக்கடி, நட்புசார் முதலாளித்துவம், ஆற்றல் துறையின் ஒப்பந்தங்களை அதானிக்கு வழங்க மோடி அரசாங்கத்தின் நெருக்கடி உள்ளிட்ட இலங்கையின் பொருளாதார இறையாண்மையை வலுவிழக்கச் செய்த அன்னிய நாடுகளின் நெருக்கடிகள் ஆகியவை இலங்கையை தொடர்ந்து நிலையற்ற சூழலுக்குள் தள்ளின. இது இலங்கையின் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகத்தின் மீது ராஜபக்ச குடும்பத்தினரின் விரிவடைந்து வந்த கட்டுப்பாட்டுக்கு எதிரான மக்களின் கோபத்துடன் இணைந்தது. மேலும் ராஜபக்ச சகோதரர்களான கோத்தபய, மகிந்த ஆகியோர் மீது அதீத வெறுப்பையும் உருவாக்கியது. மாற்றத்திற்கான ஆழமான தேடலை அர்கலயா எதிரொளித்தது. அதனையே தேர்தல் முடிவுகளும் எதிரொளிக்கின்றன. இந்த பரந்த மக்கள் தேடலின் பயனாளியாக திசநாயகே மாறியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த முடிவுகள் இலங்கை சமூகத்தின் சிதைந்த நிலையையும் எதிரொளிக்கின்றன. தமிழர்கள், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகிற பகுதிகளில் திசநாயகே மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். இல்லையென்றால் முதல் கட்டத்திலேயே அவர் பெற்ற வாக்குகளின் அளவு 50%-ஐ தாண்டியிருக்கும். இரண்டாவது கட்டத்தில் இரண்டாவது முன்னுரிமை அடிப்படையிலான வாக்குகள் எண்ணப்பட்ட போது பிரேமதாச திசநாயகேவை விட முன்னிலை பெற்றிருந்தார். பொருளாதார மீட்சியை ஏற்படுத்துதல், ஊழலை அடியோடு ஒழித்தல், இலங்கையின் அரசியல், பொருளாதார இறையாண்மையை பாதுகாத்தல் ஆகியவை குறித்த அனேக வாக்குறுதிகளை திசநாயகேவின் பரப்புரை இயக்கம் கொடுத்திருந்தது. ஆனால் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெறுவதற்கான, மெய்யான உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எதுவுமில்லை. இலங்கையில் திசநாயகே உண்மையிலேயே ஒரு புதிய தொடக்கத்தை நிகழ்த்த விரும்பினால் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களின் அடிப்படையில் மட்டுமே அதனைச் செய்ய முடியாது. சிறுபான்மையினருடன் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். உண்மையை ஏற்றுக் கொள்வது, நீதியை வழங்குவது ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே உண்மையான நல்லிணக்கம் ஏற்பட முடியும். இப்போது திசநாயகேவின் கைகளில் தான் பந்து உள்ளது. செயலாற்ற வேண்டியது அவர்தான்.
இலங்கையில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் இந்திய வெளியுறவுக் கொள்கைக்கும் முக்கியமான சோதனையாகும். மோடி காலத்தில் அனேகமாக அனைத்து அண்டை நாடுகளிலிருந்தும் இந்தியா அதிகமாக தனிமைப்பட்டு நிற்கிறது. தெற்காசிய நாடுகளின் மண்டல கூட்டமைப்புக்கான முக்கிய தளமாக விளங்கும் சார்க் அனேகமாக கைவிடப்பட்டு விட்டது. அமெரிக்காவுடன் மட்டுமல்ல, இஸ்ரேலுடனும் அதிகரித்து வரும் இந்தியாவின் போர்தந்திர ரீதியிலான நெருக்கமும் இணைவும் தனது அண்டை நாடுகளில் இருந்து இந்தியா தனிமைப்படுவதற்கு பங்களிப்பு செய்துள்ளது. அதானிக்கும் பிற பெரிய கார்ப்பரேட்டுகளுக்கும் ஒப்பந்தங்களை பெற்றுத் தருவதற்காக, அண்டை நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளால் இந்த அவநம்பிக்கை ஆழமடைந்துள்ளது. ஆஸ்திரேலியா முதல் வங்கதேசம் வரை, இலங்கை முதல் கென்யா வரை அதானியின் நலன்களுக்கு சேவை செய்ய மோடி தொடர்ந்து கடுமையாக உழைப்பது அனைவராலும் நன்கு அறியக்கூடியதாக இப்போது ஆகியுள்ளது. வங்கதேசத்திலும் இலங்கையிலும் உள்ள புதிய ஆட்சியாளர்கள் அதானியின் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டால், அது நமது கிழக்கத்திய, தெற்கத்திய அண்டை நாட்டினர் இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையல்ல; மாறாக அவர்களது சொந்த பொருளாதார நலன்களை பாதுகாப்பது மட்டுமே.
கடந்த ஓராண்டாக பாலஸ்தீனியர்கள் மீது இடைவிடாத இனப்படுகொலையை நெதன்யாகு ஆட்சி நிகழ்த்திக் கொண்டுள்ளது. தற்போது இந்தத் தாக்குதல் லெபனான் மீதான போராக தீவிரமடைகிறது. இவ்வேளையில் இஸ்ரேலுக்கு மோடி அரசாங்கம் அளிக்கிற ஆதரவும் தெற்கு, மேற்கு ஆசியாவில் இந்திய வெளியுறவுக் கொள்கை அதிகரித்த அளவில் வெறுக்கப்படுவதற்கு காரணமாகிவிட்டது. வங்கதேசத்திலும், இன அழிப்பின் வலிமிகுந்த வரலாற்றை கொண்டுள்ள இலங்கையிலும் உள்ள சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதை இந்தியா நிச்சயமாக வலியுறுத்த வேண்டும். மேலும் சிங்கள புத்தமத தீவிரவாதிகளுடன் கூட்டணியை கட்டமைப்பதன் மூலம் இன்று ஆர்எஸ்எஸ்-சின் இருத்தல் இலங்கையில் அதிகரிக்கிறது. ஆனால் இந்தப் புதிய ஆட்சிகளை இந்தியாவுக்கு எதிரானது அல்லது சீனாவுக்கு ஆதரவானது என முத்திரை குத்துவதற்கு கண்டிப்பாக அவசரப்படக் கூடாது. இந்திய வெளியுறவுக் கொள்கை இருதரப்பு நாடுகளுக்கு இடையேயான உறவுகள், மண்டல ஒத்துழைப்பு என்ற உணர்வில் திசநாயகே அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்பட முடுக்கி விடப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)