27.12.24 அன்று, சிபிஐ (எம் எல்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுதாமா பிரசாத் அவர்கள் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன், மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி, மாநில நிலைக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் முத்து ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
மாநிலக் குழு உறுப்பினர்கள் கரூர் ராமச்சந்திரன், அதியமான், மாவட்டக் குழு தோழர்கள் ஊத்துக்குளி முத்து, பேச்சி முத்து, சுமைப்பணித் தொழிலாளர் சங்க செந்தில்குமார், பனியன் சங்கப் பொறுப்பாளர் சரவணன், மாணிக்கம், கட்டுமானத் தொழிலாளர் சங்க சௌந்தர்ராஜன் , AICCTU மாநிலக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தோழர் டார்வின், பீகார் புலம்பெயர் தொழிலாளர் கணேஷ், நாகமாணிக்கம், முத்து உள்ளிட்டவர்கள் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து விரிவாகப் பேசினார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை ஒப்பிட்டால், தற்போது சங்கங்கள் எதுவும் செயல்படவில்லை. பீஸ் ரேட் முறை கூலியை குறைத்து தொழிலாளர்களுக்கு விரோதமாக இருக்கிறது; தொழிலாளர் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பீஸ் ரேட் முறையில் கூலி குறைப்பால் உழைப்பு சுரண்டப்படுவதை பற்றி புலம்பெயர் தொழிலாளர்களும் பேசினார்கள்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அவுட் சோர்சிங் மூலம் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பற்றி தோழர் செந்தில்குமார் பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் தோழர் நிக்கோலஸ் தோழர் நாகமாணிக்கம், ஆலடி அணை நீர் திட்டம் பற்றி பேசினர்.
பல்வேறு சாயப்பட்டறை கழிவுகளால், நொய்யல் ஆறு மாசடைவதால், இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாவது மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்படைவது பற்றியும் சௌந்தர்ராஜன் பேசினார்.
நிறைவாகப் பேசிய தோழர் சுதாமா பிரசாத் பீகார் மாநில அரா தொகுதிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் தொழிலாளி வர்க்கத்துக்கும் குரல் எழுப்புவேன் என உறுதியளித்தார். "திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, சொந்த வீடு, வேலை உத்தரவாதம், ஈஎஸ்ஐ, பிஎப் உரிமைகளை பெறுவதற்கு, பிற இடதுசாரி தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றும், "அவர்களுடைய கோரிக்கைகளை இடதுசாரி எம்பி களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்" எனவும் உறுதி கூறினார்.
பிரிக்கால் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்தியப் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றியதற்காக பழிவாங்கப்பட்டு, ஆயுள் தண்டனையில் கோவை சிறையில் இருக்கும் பிரிக்கால் தொழிலாளி மணிவண்ணன் அவர்களை மாலை 5 மணியளவில், கட்சி மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி மற்றும் கோவை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்தனர்.
¶ கோவையில் தூய்மை பணியாளர்கள் உடன் சந்திப்பு :-
மாலை 6 மணியளவில், "ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் நலன் குறித்த" கலந்துரையாடல் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுதாமா பிரசாத், பழ.ஆசைத்தம்பி, பாலசுப்பிரமணியன், பெரோஸ் ஆகியோருடன், தூய்மைப் பணியாளர்கள் தோழர்கள் சந்தானம், தமிழரசன், சிவக்குமார் அவர்களும், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் பிலோமினா, வள்ளி, தமிழரசி ஆகியோரும், மூத்த வழக்கறிஞர் தோழர் C.முருகேசன் அவர்களும், நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள், தொழிற்சங்க முன்னணிகளும் கலந்து கொண்டனர்.
'குறைந்த கூலி, ஒப்பந்த தொழிலாளர்களாக சுரண்டப்படுதல், அவர்களின் பணிநிரந்தரம்' என தூய்மைப் பணியாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவனமுடன் கேட்டறிந்த எம்பி தோழர் சுதாமா பிரசாத் அவர்கள், அது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)