ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறுபட்ட இரண்டு எதிரெதிர் காட்சிகளை வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான கடும் வெறுப்பு இயக்கத்தின் மீது சவாரி செய்து ஜார்க்கண்டை வெற்றி கொள்ளலாம் என்ற பாஜகவின் தீவிரமான முயற்சி மாபெரும் தோல்வியைத் தழுவியது. ஆனால் மகாராஷ்டிராவில் அந்தக் கட்சி மக்களவை தேர்தல்களில் பெற்ற தோல்வியை வெற்றியாக மாற்றுவதை ஒருவாறு சாதித்து விட்டது. மேலும் அது பெற்ற வெற்றியின் அளவு எந்த ஒரு எளிய விளக்கங்களையும் மீறுகிறது. இந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களோடு கூட இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளிட்ட 14 மாநிலங்களில் பரவியுள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் நான்டட் தொகுதியில் மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. என்றாலும் கூட இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் அது தக்கவைத்துக் கொண்டது. ஆனால் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக/தேஜகூ தனது வலிமையை ஓரளவு அதிகரிப்பதில் ஒருவாறு வெற்றிபெற்று விட்டது. நிர்வாகக் கட்டுப்பாடுகள், பெருமளவு முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்தது ஆகியவை மூலம் பாஜக/தேஜகூ உபியில் பயனடைந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பல வழிகளில், இந்த நவம்பர் தேர்தல் முடிவுகளையும் அதற்கு முந்தைய ஹரியானா, ஜம்மு&காஷ்மீர் தேர்தல் முடிவுகளையும் 2024 மக்களவைத் தேர்தல்களில் பாஜகவின் பெரும்பான்மை சரிந்ததற்குப் பிறகுள்ள ஆரம்ப உண்மையை அறிந்து கொள்வதற்கான நிகழ்வுகளாக பார்க்கலாம். இந்தக் குட்டி தேர்தல் போராட்டச் சுற்றில் வெற்றி பெற சங்கி-பாஜக நிறுவனம் விரிவான திட்டங்களைத் தீட்டியது. அதன் திட்டங்களுக்கு ஹரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் பலன் கிட்டியது. இந்த இரு மாநிலங்களிலும் ஓபிசியினரை வலுப்படுத்துதல், மதவெறித் துருவச் சேர்க்கையை தூண்டுதல் ஆகியவற்றுக்கு ஈடுசெய்யும் விதத்தில் எதிர்கட்சியினரின் வாக்குகளை உள்ளூர் மட்டத்தில் சாமர்த்தியமாக சிதறடிப்பது, மாபெரும் பணபலத்தை பயன்படுத்துவது ஆகிய திட்டங்களை இணைத்ததன் மூலம் பாஜகவின் வெற்றி முன்னதாகவே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டது. ஹரியானாவிலும் மிகக் குறிப்பாக மகாராஷ்டிராவிலும் பாஜக/தேஜகூ-க்கு மக்களவைத் தேர்தல்கள் ஒரு எச்சரிக்கை மணியாக வந்தன. நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிந்தைய இடைப்பட்ட காலத்தை பாஜக முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. இந்தியா கூட்டணியின் தேர்தல் செயல்பாட்டை விட மிகவும் சாமர்த்தியமாகவும் வேகமாகவும் அது செயல்பட்டது.
2022-ல் உத்தவ் தாக்கரே அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மோடி அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ‘ஆப்பரேசன் தாமரை நடவடிக்கையின் நீட்சியே பாஜகவின் தேர்தல் உத்திகள் என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை முழுவதுமாக கேலிக்கூத்தாக்கி, முதலில் ஜூன் 2022-ல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைக்கொண்டு, 2024 இல் மகாராஷ்டிரா தேர்தல்களில் பாஜகவால் வெற்றிபெற முடிந்திருக்காது. தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக மட்டுமே தொடங்கப்பட்ட முக்யமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா (பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ₹1500 வழங்கும் திட்டம்), ஆர்எஸ்எஸ் மூலம் மேற்கொள்ளப்பட்ட கச்சிதமான நுண்மேலாண்மை ஆகியவற்றின் தாக்கம் பற்றி தற்போது அனேக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் மகாராஷ்டிராவில் முடிவுகளை எடுப்பதில் அதானி செல்வாக்குமிக்க ஒரு அச்சாணி பாத்திரம் ஆற்றியதை நாம் புறக்கணித்து விட முடியாது. மேலும் திகைப்பூட்டுகிற அளவிற்கு அப்பட்டமாக பணம் பயன்படுத்தப்பட்டதையும் மகாராஷ்டிரா இதற்கு முன் ஒருபோதும் கண்டதில்லை. இந்தியத் தேர்தல் ஆணையமும் கூட இந்தத் தேர்தல்களில் கிட்டத்தட்ட 1000 கோடி மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது. இது முந்தைய தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகமானதாகும்.
பாஜகவிற்கு ஹரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் பலன் தந்த உத்திகள் ஜார்கண்டில் பெரும் தோல்வியைத் தழுவியது. மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னதாக ஹேமந்த் சோரனை சிறைக்கு அனுப்பிய பழிவாங்கும் அரசியலும் ஆளுநர் அலுவலகத்தின் முட்டுக்கட்டையிடும் பாத்திரமும் ஒரு முழுமை பெற்றது. இதே போன்ற உத்தியை ஜார்கண்டிலும் மோடி அரசாங்கம் கையாண்டது. பெரும் எண்ணிக்கையிலான கட்சித் தாவல்களை ஏற்படுத்துவதன் மூலம் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஹேமந்த் சோரன் அரசாங்கத்தைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட ஆழமான சதியை முன்னாள் முதலமைச்சர் சம்பை சோரன் பாஜகவிற்கு தாவியது சுட்டிக் காட்டுகிறது. இந்தத் தேர்தல்களில் பாஜகவின் வெறுப்புப் பரப்புரையை தோற்கடிப்பதற்கு முன்பு ஹேமந்த் சோரன் அரசாங்கம் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் தாக்குப்பிடிக்க வேண்டியிருந்தது. பழிவாங்கும் அரசியல், ஆட்சிக்கவிழ்ப்பு முதல் வெறுப்புப் பரப்புரைகள், சமூகப் பொறியியல் வரையிலான பாஜகவின் அனைத்து கருவான திட்டங்களும் ஜார்க்கண்டில் தோற்றுவிட்டன அல்லது திருப்பித் தாக்கின. ஆக அந்தக் கட்சி ஜார்க்கண்டில் ஒரு முழுவிரிவான தோல்வியைத் தழுவிக் கொண்டது.
ஜார்க்கண்டில் அம்மாநில பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தமுள்ள 28 தொகுதிகளான எஸ்டி தனித்தொகுதிகளிலிருந்து வெற்றிபெற்ற ஒரே பாஜக வேட்பாளர் சம்பை சோரன் மட்டுமே. கொட்டா-தியோகர் மண்டலத்தில் பெருமளவிலும், பலமு, வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தின் ஒருசில பகுதிகளிலும் கூட பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. ஜார்க்கண்டில் அவர்களுடைய நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் அவர்களது மகள்களையும் 'வங்கதேச ஊடுருவல்'காரர்கள் என அழைக்கப்படுகிறவர்களிடம் பழங்குடியின மக்கள் இழந்து விடுவார்கள் என பழங்குடியின மக்களை அச்சுறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களை நிறுத்தும் பாஜகவின் வெறுப்பு செயல்திட்டத்தின் உறுதியான நிராகரிப்பு மிகவும் மறுஉறுதியளிக்கிற செய்தியாகும். பாஜகவின் கூட்டணியான அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கத்திற்கு திறன்மிக்க மாற்றாக ஜெய்ராம் மஹதோ தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஜார்கண்ட் லோக்தந்திரிக் கிரந்திகாரி மோர்ச்சாவின் உருவாக்கத்தால், அதன் பெயருக்கு மதிப்பு வழங்கும் எந்தவொரு கூட்டணியையும் பாஜக கிட்டத்தட்ட இழந்துவிட்டது. அதற்கு மாறாக ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி, சிபிஐஎம்எல் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் ஒருவருக்கொருவர் ஈடு செய்தனர். மேலும் பாஜகவின் வெறுப்பு நிறைந்த பிரித்தாளும் செயல்திட்டத்திற்கு வலிமையான சமூக, அரசியல் தடுப்பாக அது நின்றது.
முந்தைய மார்க்சிய ஒருங்கிணைப்பு குழு, சிபிஐஎம்எல் உடன் ஒன்றிணைந்ததும், தோழர் ஏகே ராய், சிபிஐஎம்எல் ஆகிய இயக்கங்களின் மரபுகளும் ஒன்றிணைந்ததும், தன்பாத்-பொக்காரோ பகுதியில் பாஜகவை பின்னுக்கு தள்ளியதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியது. ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களில் சிபிஐஎம்எல் முதன்முதலாக ஒரு கூட்டணியில் போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் சிபிஐஎம்எல் நான்கு வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியது. அதிலும் கூட ஒரு தொகுதியில் ஜேஎம்எம் கட்சி நட்பு போட்டியை திணித்தது. கட்சியின் பாரம்பரியமான பகோதர் தொகுதியை இழந்த போதும் தன்பாத் மாவட்டத்தின் நிர்சா தொகுதியையும், அடுத்தடுத்த அய்ந்து தொடர் தோல்விகளுக்குப் பிறகு சின்ரி தொகுதியையும் திரும்பப் பெற்றது. இது ஜார்க்கண்டின் இடது புத்தெழுச்சியை மீண்டும் உற்சாகமூட்டுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் கார்ப்பரேட் கொள்ளையையும் மதவெறி வெறுப்பையும் தடுத்து நிறுத்துவதில் இது பெரும் பங்காற்றும்.
மகாராஷ்டிராவில் எம்விஏ கூட்டணிக்கு வெளியே போட்டியிட்டு இடதுகள் இரண்டு தொகுதியை பெற்றுள்ளனர். பால்கர் மாவட்டத்தில் தகனு (எஸ்டி) தொகுதியை சிபிஐஎம் தக்க வைத்துள்ளது. கோலாப்பூர் மாவட்டத்தில் சங்கோல் தொகுதியில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி வென்றுள்ளது. மேற்கு வங்க இடைத்தேர்தலில் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள 24 பர்கானா மாவட்டத்தின் தொழிற்சாலை பகுதியான நைகாட்டி தொகுதியில் சிபிஐஎம்எல்-லுக்கு சிபிஐஎம் ஆதரவு அளித்தது. அதன்மூலம் ஒரு பரந்த இடது ஒற்றுமைக்கான வாய்ப்புக்கு வழிகாட்டி உள்ளது. இடதுகள் தாங்கள் இழந்த தேர்தல் களத்தை மீட்டெடுப்பதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை. ஆனால் பாஜகவின் வாக்குகள் சரிவதால் ஒரு பரந்த ஒற்றுமையை கட்டியெழுப்பும் முயற்சியை இடதுகள் விடாமல் தொடர வேண்டும். மேலும் மக்கள் எதிர்கொள்ளும் பற்றியெரியும் பிரச்சினைகள் மீது போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.
வரவிருக்கும் மக்களவைக் குளிர்கால கூட்டத் தொடருக்கு சற்று முன்னதாக, இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75 ஆவது ஆண்டு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கத்தின் நான்காவது ஆண்டு நினைவிற்கு சற்று முன்னதாக இந்த நவம்பர் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. அமெரிக்க நீதித் துறையால் அதானி குழுமம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பது, அதானி குழுமத்தையும் மோசடி மோடி -அதானி கூட்டையும் மேலும் அம்பலமாக்கியுள்ளது. இடதுகளும் இந்தியா கூட்டணியும் மகாராஷ்டிரா தேர்தல் தோல்வியை ஒரு படிப்பினையாக நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடரும் பாசிசத் தாக்குதலில் இருந்து இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். இந்தியாவின் பொருளாதார நெருக்கடி ஆழமாகிக் கொண்டிருக்கும் சூழலில் மக்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)