1952 பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சியால் வெளிச்சந்தையிலும் ,பொது விநியோகத் திட்டத்திலும் மக்களின் முக்கிய உணவுப் பொருளான அரிசியை குறைந்த விலையில் விநியோகிக்க முடியவில்லை. நாடு முழுவதும் 1960 களில் நகர்புரங்களில் பொது விநியோகத் திட்டம் பகுதி அளவில் துவங்கப்பட்டது.
1967 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம்' என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய திராவிட முன்னேற்றக் கழகம். நியாய விலைக் கடைகளில் அரிசி விநியோகத்திற்கும் ஆட்சி க்கும் தொடர்பு இருப்பதை அப்பொழுதிலிருந்தே வரலாறு சுட்டிக் காட்டுகிறது.
அரிசி விநியோக அரசியல் வரலாறு ஒன்றிய பாஜக அரசுக்கு நன்கு தெரிந்தும் 2015 செப்டம்பரில் முதன்முறையாக பொது வினி யோகத் திட்டத்தில் உணவுப் பொருட்களுக்கு பதிலாக பணம் என்ற சோதனைக் கொள்கையை புதுச்சேரி ,சண்டிகார், தத்ரா நகர் ஹவேலி ஆகிய ஒன்றிய ஆட்சிப்பரப்புகளில் நடைமுறைப் படுத்தத்துவங்கியது .
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 3,35,595 குடும்ப உணவு பங்கீட்டு அட்டைகள்உள்ளன. இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பொது விநியோகத்திட்டப்படி, (TPDS) இவற்றுள், வறுமைக்கோட்டின் கீழே வசிக்கக்கூடிய குடும்பங்களின் அட்டைகள் ,ஏழ்மையிலும் ஏழ்மையான(AAY) குடும்பங்கள் சேர்த்து 2,04,616 சிவப்பு அட்டைகள் உள்ளன. முன்னதாகவே 2015 இல் குடும்ப அட்டைகளுக்கு கோதுமை வழங்குவதை ,2016 ஜனவரியில் சர்க்கரை வழங்குவதையும், 2017 ஜனவரியில் மண்ணெண்ணெய் வழங்குவதையும் ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது.
உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 அதன் விதிகள் 2015 ன் கீழ் வறுமையிலும் வறுமையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு(AAY) ,ஒன்றிய அரசு ,அட்டை ஒன்றுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய 35 கிலோ அரிசிக்கு ஈடாக ரூபாய்1174.95 ம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள இதர குடும்ப அட்டைகளுக்கு நபர் ஒருவருக்கு அய்ந்து கிலோ அரிசிக்கு இணையாக ரூபாய்167.85 ம் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் செலுத்த ஆரம்பித்தது. அதேபோல் புதுச்சேரி மாநில அரசு, பொது விநியோக திட்டத்தின் கீழ் சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் 20 கிலோ( ஒற்றை அவியல்) அரிசிக்கு ஈடாக ரூபாய் 600/- வறுமை கோட்டிற்கு மேலே உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ (ஒற்றை அவியல்) அரிசிக்கு ஈடாக ரூபாய் 300 /- குடும்பத் தலைவர்கள் வங்கி கணக்குகளில் நேரடி பணப்பயன் பரிமாற்ற( Direct Benefit Transfer) திட்டத்தின் கீழ் இரண்டு திட்டங்களையும் இணைத்து கடந்த 8 ஆண்டுகளாக செலுத்தப்படுகிறது.
நேரடி பணப் பயன்பரிமாற்றம் பொது விநியோகத் திட்டத்தில் துவக்கப்பட்ட பின்னர் மாநில முழுவதும் இருந்த 515 நியாய விலைக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டன. இவைகளில் பணிபுரிந்த சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இவர்களுக்கு கடந்த காலங்களில் முறையான ஊதியம் புதுச்சேரி அரசு வழங்குவதில்லை. திடீரென்று வேலை பறி போனதாலும், முன்னூதிய நிலுவைச் சம்பளம் கிடைக்காததாலும் இவர்களுள் 16 பேர் வறுமையின் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
குடும்பத் தலைவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருப்பதால் அரிசிக்கு ஈடாக செலுத்தப்படும் பணம் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு அவர்கள் செலவிடுவதில்லை. பெறப்பட்ட பணம் வேறு உபயோகங்களுக்கு மடைமாற்றம் செய்வது குடும்பங்களில் வாடிக்கையாக்கிவிட்டது. இதனால் பெரும்பாலான குடும்பங்களின் ஆதார உணவான அரிசி, பொருளாக இருப்பின்றி , இருப்பதால் பெண்கள், குழந்தைகள் ,முதியோர் கடும் உணவு நெருக்கடியை சந்திக்கின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கள், சாராயம், வெளிநாட்டு மதுபான கடைகள் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 615 ஆகும் ( மாநிலத்தின் பரப்பளவு 492 சதுர கிலோமீட்டர்) . மேலும் சிலநூறு மது அருந்து கூடங்களும் ( Bar)உள்ளன. இதனால் ஏழை பாழைகள் பெறும் அரிசிக்கான பணம் பெருமளவில் மது அருந்துவதற்கு செலவிடப்படும் நெருக்கடிக்கு குடும்பங்கள் தள்ளப்படுவது தவிர்க்க முடியாதது ஆகின்றது
இவ்வாறு, உணவுப்பாதுகாப்பிற்கான செயற்கை நெருக்கடி, பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது .சமீப சில ஆண்டுகளாக அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது உழைக்கும் மக்களை தெருப் போராட்டங்கள் நோக்கித் தள்ளத் துவங்கியது. உணவுப்பாதுகாப்பை வலியுறுத்தி மீண்டும் பொது விநியோகக்கடைகளில் அரிசி உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டி இகக(மா-லெ), இகக(மா), இகக மற்றும் இவைகளின் பெண்கள் அமைப்புகள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை என தொடர் போராட்டங்கள் புதுச்சேரி மாநிலத்தை உலுக்க ஆரம்பித்து விட்டன. 2016 ஆம் ஆண்டு முதலே அமைச்சர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் முன்பு பெண்கள் கேள்வி கேட்டுப் போராடவும் துவங்கி விட்டனர். அப்போதைய காங்கிரஸ் ஆட்சி ,மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், ஒன்றிய பாஜகஆட்சியின் பொதுவிநியோகத்தில் கட்டாய நேரடிப் பணப்பயன் பரிமாற்றம்( DBT) என்ற சதிக்கு பலியாகி, 2021 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. 2021 இல் ஆட்சிக்கு வந்தால்' மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறப்போம்' என்ற வாக்குறுதியை தற்போதைய முதல்வர் ரங்கசாமி,பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அளித்தார். தேர்தலின் போது பாஜக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் அதே வாக்குறுதியை அளித்தார். தொடர் மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடி காரணமாக ஒன்றிய அரசு 2022 ஆம் ஆண்டில் மாநில அரசின் பொது விநியோகத் திட்டப்படி பொருட்களாக வழங்கலாம் என்ற பகுதி மாற்ற அறிவிப்பு செய்தது. ஆனாலும் மாநில அரசு நியாய விலைக்கடைகளை திறந்து அரிசி வழங்குவதை தொடங்கவே இல்லை.
வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைத்த என் -ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணிக்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் (பாஜக வேட்பாளர் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை தோற்கடித்து) புதுச்சேரி மக்கள் சரியான பாடம் புகட்டினர். மக்கள் போராட்டங்கள் தொடர்ந்தன. காலம் கடந்து ஆடிப்போன என் -ஆர் காங்கிரஸ் ,பாஜக கூட்டணி அரசு சென்ற அக்டோபர் முதல் மாநில பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 'மீண்டும் அரிசி வழங்கப்படும் 'என்று அறிவிப்பு செய்து, விநியோகம் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி துவங்கியது. மூடப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளை திறக்க எந்த முன்னேற்பாடும் செய்யாததால் அரிசி வழங்கப்படுவது அடையாள அளவிலேயே உள்ளது. என்- ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அரிசிக்கு மக்களை ஆலாய் பறக்க விடுவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. நியாயவிலைக் கடைகள் முழுமையாக திறக்கப்பட்டு ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்புச் சட்ட விதிகள் படியும், மாநிலப்பொது விநியோகத் திட்டப்படியும் அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுவது தொடரும் வரையில் மக்களோடு இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) தனித்தும், இதர இடது ஜனநாயக சக்திகளுடன் இணைந்தும் போராடும்.
எள்முதல் அரசினர் கொள்முதல் செய்க;
எப்பாங்கும் கடை வைத்து விற்பனை செய்க!
----பாவேந்தர் பாரதிதாசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)