இந்தியா முழுவதும் 20 வகையான தொழில்களில் ஈடுபடும் நான்கு லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் பணி புரியும் லார்சன் அண்ட்  டியூப்ரோ (எல் &டி) கார்ப்பரேட்  நிறுவனம் அதன் தலைவர் சுப்பிரமணியனுக்கு ஆண்டுக்கு  ரூ.51/- கோடி வழங்குகிறது. அவருடைய அடிப்படை சம்பளம் ஆண்டுக்கு ரூ 3.6 கோடி.  இதர சலுகைகள் ஆண்டுக்கு ரூ1.67/-  கோடி. எல் அண்ட் டி நிறுவனம் செய்யும் வியாபாரத்தில் ஆண்டுக்கு ரூபாய் 35.28/- கோடி  அவருக்கு வருமானம் வருகிறது. அவருடைய ஓய்வு காலப்  பலன்களாக மட்டுமே ஆண்டுக்கு ரூபாய் 10.5/- கோடி  தனியாக வழங்கப்படுகிறது.  இது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நடுத்தர பதவியிலிருக்கும்  மேலாளர் ஊதியத்தை விட 535 மடங்கு அதிகம். அன்றாடம் ரூ. 258 தினக்கூலி பெறும் எல் அண்ட் டி புதுச்சேரி ஆலையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் ஊதியத்துடன் ஒப்பிடும்போது இது பல ஆயிரம் மடங்காகும். 

 தொழிலாளர்கள் வாரம் ஒன்றுக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் எல் அண்ட் டி சேர்மன், புதுச்சேரி எல் அண்ட் டி ஆலையில் 25 ஆண்டு கால வரலாற்றில் நாளில் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்த ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு  மிகுதி நேர பணிக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்கத் தயாரில்லை.  ஏஐசிசிடியு தொழிற்சங்கப் போராட்டத்தின் விளைவாக புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்  நிலுவைத் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தும் ஆண்டு கணக்கில் பணத்தை வழங்காமல் இழுத்தடிக்கிறது எல் அண்ட் டி நிர்வாகம்.   பணி நிரந்தரம், சட்டக்கூலி, போனஸ், பணிக்கொடை என எதையும் வழங்காமல் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை சுரண்டிக் கொண்டிருக்கிறார் எல் அண்ட் டி நிறுவனத்தின் உலகறிந்த தலைவர்  எஸ்.என்.சுப்ரமணியம். சட்டப்படியான உரிமைகளை, சலுகைகளைக் கேட்டால் ஆலைகளை மூடிடுவேன் என்கிறார்.

மேலும் இவர் சமீபத்தில், வேலைக்க ஆள்கிடைக்க வில்லை என்று மிகவும் கவலைப் பட்டிருக்கிறார். ஜன்தன் வங்கிக் கணக்குகள், 100 நாள் வேலைத் திட்டம், இன்னும் பல நல நலத்திட்டங்களால் (மோடி மொழியில் ரேவ்டி பண்பாடு) கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு யாரும் வருவதில்லை என்றும் நெஞ்சு வெடிக்கிறார். மோடி-ஷா சொல்லும் இந்த செல்வம் படைக்கும் சீமான்கள் ஏன் தொழிலாளர் பற்றி கவலைப்பட வேண்டும்?