“திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்ல, இன்னும் 100 பவுர்னமிகளுக்கு ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூற 2026க்கான தயாரிப்பில் சூடேறி வருகிறது. யாருக்கு அமாவாசை? யாருக்கு பவுர்னமி என்பது 2026ல் தெரிந்து விடும். ஆனால் தமிழ்நாட்டு பொருளாதாரத்துக்கு அமாவாசையா? பவுர்னமியா என்று பார்ப்பது தமிழ்நாட்டுக்கு அவசியமானது.

பொருளாதாரம் பற்றி திமுக தேர்தல் அறிக்கை?  

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி, மாநில பொருளாதாரத்தை 35 லட்சம் கோடியாக உயர்த்துவது, தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு 4 லட்சத்துக்கு மேலாக உயர்த்துவது என்ற ஸ்டாலினின் ஏழு உறுதிமொழி கூறுகிறது. ஏழாண்டுகால பாஜக ஆட்சி, 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சீரழிந்து போன பொருளாதாரத்தை மீட்டெடுப்பது இலக்காக திமுக தேர்தல் அறிக்கை கூறியிருந்தது. “9 லட்சம் கோடி கடன் சுமையை” ஏற்படுத்திச் சென்று விட்ட அதிமுக அரசை குற்றம் சாட்டிய அறிக்கை, “தமிழ்நாட்டின் பொருளாதார பின்னடைவை மீட்டெடுத்து முன்செல்ல” அறிக்கை உறுதி கூறியது.

இந்த வாக்குறுதியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் தொடக்கமாக திமுக அரசு, நிதிநிலமை பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. 2021, ஆகஸ்ட் 9 ல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை, மாநிலத்தின் நிதிநிலை பற்றி விரிவான புள்ளிவிவரங்களுடன் “கடந்த 7 ஆண்டுகளின் அதிமுக ஆட்சியின் தவறான கொள்கைகளும் நிதி நிர்வாகமுமே” இந்த பொருளாதார பின்னடைவுக்கு காரணமென்று குற்றம் சாட்டியது. “ இது தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நீர்த்துப்போகச் செய்வதற்கு நியாயம் கற்பிக்கும் முயற்சி அல்ல” என்று கூறிய அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “நிதி நிலமையை சீர்செய்வதற்கு “கட்டமைப்பு சீர்திருத்தம்” கட்டாயம் என்று முன்மொழிந்திருந்தார்.

ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாட்களில், இது “திராவிட மாடல்” அரசு என அறிவித்துக்கொண்ட ஸ்டாலின், தமிழ்நாட்டு பொருளாதாரத்தை 2030க்குள் 1 ட்ரில்லியன் (86 லட்சம் கோடி) பொருளாதாரமாக மாற்றுவது “எனது கனவு” என்றும் அறிவித்துக் கொண்டார். (தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது ஏறத்தாழ அரை ட்ரில்லியன் மட்டுமே). 

எந்தவொரு பொருளாதாரமும் உற்பத்தி, பங்கீடு, நுகர்வு என்ற மூன்று அடிப்படையான கூறுகளைக் கொண்டவை. இந்த மூன்று கூறுகளில் அரசு என்னென்ன செய்யப்போகிறது என்பதைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. உலக அளவில் அறியப்பட்ட பொருளாதார அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டிருப்பதை மட்டும் சுட்டிக் காட்டி, கட்டமைப்பு சீர்திருத்தம் தேவைப்படுகிறது என்பதை மட்டும் வலியுறுத்தி முடித்துக் கொண்டது வெள்ளை அறிக்கை. இந்த வகையில் அது கருப்பு அறிக்கையாகவே இருந்தது.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”! 

விவசாயமும் தொழிலும் பொருளாதாரத்தில் அடிப்படையானவை. ஆனால் முதலமைச்சரின் “கனவுப் பொருளாதாரம்” தொழில் வளர்ச்சியை மட்டுமே முதன்மையாக கொண்டிருக்கிறது. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 27 தொடங்கி 112 வரை விவசாயம், நீர்மேலாண்மை பற்றி பேசினாலும் “மூன்றில் ஒரு பங்கு மக்கள்” விவசாயம் சார்ந்த தொழிலை தங்கள் வாழ்வாதாரத்துக்காக நம்பியிருந்தாலும் விவசாயத்துக்கு புத்துயிரூட்டும் திட்டங்களை பார்க்க முடியவில்லை. விவசாயிகளிடமிருந்து பாராட்டு பெற்ற விவசாயத்துக்கான ’தனி நிதி நிலை அறிக்கை’ விவசாயத்துக்கு புத்துயிரளிக்கும் திட்டங்களை கண்டுகொள்ளவில்லை. ஒன்றிய மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் பாராட்டத்தக்க உறுதிப்பாட்டை மாநிலத்தில் விவசாயத்துக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் பார்க்க முடியவில்லை. 

கோவில், மடங்கள் நிலத்துக்கும் நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டுவருவது, உபரிநிலத்தை தலைமுறை தலைமுறையாக பயிரிடும் ஏழை, சிறு, குறு விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பது எனும் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச்சட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி பல லட்சக்கணக்கான விவசாயிகளை கோவில், மடங்கள் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டுமென டெல்டா விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்த நிலங்களில் குடியிருக்கும் ஏழை, சாமான்ய மக்களுக்கு அவற்றை சொந்தமாக்கும் கோரிக்கையை அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக, பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நிலங்களையும், சொத்துக்களையும் மீட்டு விட்டுவிட்டதாக அரசு சாதனை அறிக்கை வெளியிடுகிறது. கோவில், மடங்களிலிருந்து இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். நிலங்களையும் சொத்துக்களையும் இந்துக்கள் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக-ஆர்எஸ்எஸ்- இந்து முன்னணியினர் கோவில் நிலவுடமையை பாதுகாக்க மூர்க்கத்தனமாக முயற்சித்து வருகின்றனர். ஆனால் அரசு அமைதி காக்கிறது. நிலச்சீர்திருத்தம் முடிக்கப்பட்டுவிட்டது என்று திட்டக்கமிஷன் துணைத்தலைவர் திரு ஜெயரஞ்சன் கூறிவந்தாலும் மேற்கூறிய உண்மைகளும் விவாதங்களும் அவரது பிரகடனத்தை மறுக்கின்றன. சனாதனத்தை நசுக்க வேண்டுமென்று பேசி ’சபாஷ்’ பெற்ற உதயநிதி, ஆதினத்தின் ஆசி பெற்று வருகிறார். டெல்டா நாயகன் ஆட்சி டெல்டா உயிர்பெற திட்டங்கள் இல்லை.

விவசாய விளைநிலம் பாதுகாக்கப்படுமென்று தேர்தல் வாக்குறுதி எண் 43 உறுதி அளிக்கிறது. திரு ஸ்டாலின் அவர்களது திருச்சி உறுதிமொழி, இருபோக சாகுபடி நிலங்கள் 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்; தரிசு நிலங்கள் சாகுபடிக்கு கொண்டுவரப்படும், 11. 7 லட்சம் ஹெக்டேரில் பாசனப் பரப்பு அதிகரிக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் இவற்றுக்கு முற்றிலும் மாறாக, தொழில் வளர்ச்சி என்ற பேரால் நிலங்கள் ஒருங்கிணைப்பு சட்டத்தைக் கொண்டு வந்து திமுக ஆட்சி விவசாயிகளின் அதிருப்தியை வரவழைத்துக் கொண்டது. பரந்தூர் விமானநிலையம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களுக்காக சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை பறிக்கவே இந்த நில ஒருங்கிணைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதான், வெள்ளை அறிக்கை சொல்லும் கட்டமைப்பு சீர்திருத்தம் போலும்! 

நெல்லுக்கு விலையாக ரூ 2500\ ம் கரும்புக்கு விலையாக ரூ 4000\ மும் அளிக்கும் வாக்குறுதி எண் 75 இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எப்போது நிறைவேற்றப்படும் என்று கால அட்டவணையும் சொல்லப்படவில்லை. நீர்மேலாண்மை, புதிய பாசனத்திட்டங்கள், நீர்வளப் பாதுகாப்புச்சட்டம் போன்றவை அறிவிப்பு நிலையிலேயே உள்ளன. வேளாண் கூட்டுறவுச் சங்களுக்கு தேர்தல் நடத்தாமல், கடந்த அதிமுக ஆட்சி, அவற்றை ஊழல் முறைகேடுகளின் அமைப்பாக மாற்றி கொள்ளை அடித்து வந்தது. திமுக அரசும் அவற்றுக்கு தேர்தல் நடத்தாமல் கூட்டுறவு ஜனநாயகத்தை மறுத்து வருகிறது. வாக்குறுதி எண் 41, கிராமப்புர தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று சொன்னது. ஆனால் இதுவரை எந்த அழுத்தமும் கொடுத்ததாக தெரியவில்லை. மாநில நிதியிலிருந்து கூடுதலாக 50 நாட்கள் வேலை கொடுக்கவும் முன்வரவில்லை.

வள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா கொண்டாடி மகிழ்ந்துள்ள திமுக அரசு, “சுழன்றும் ஏர்பின்னது உலகம்”, நீரின்றி அமையாது உலகு” என்ற அவரது குறட்பாக்களை நினைவில் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. “உழுதுண்டு வாழ்வாரை” கார்ப்பரேட் பொருளாதாரத்தை “தொழுதுண்டு பின் செல்வோராக” ஆக்கிவிட்டதோ என்று கேட்கத் தோன்றுகிறது. அரிட்டாபட்டி விவசாயிகள் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் முதலமைச்சர். வருகிற தேர்தலில் நீங்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று உங்களை பார்த்தாலே தெரிகிறது, என்று கூறிய முதலமைச்சர். அங்கு ஒரு குழந்தைக்கு ’வெற்றி’ என்றும் பெயர் சூட்டியுள்ளார். 2021 தேர்தலில் திமுகவுக்கு வெற்றியளித்த விவசாயிகளுக்கு வெற்றியா? தோல்வியா? தமிழ்நாட்டு விவசாய சமூகத்துக்கு விவசாயத்துக்கு,  பொருளாதாரத்துக்கு அமாவாசையா? பவுர்ணமியா? செந்தில் பாலாஜிதான் சொல்ல வேண்டும்! விவசாயிகள் கோரிக்கைக்காக விவசாயி பஞ்சாபின் தல்லேவால் 53 நாட்களாக மரணப்படுக்கையில் கிடக்கிறார். விவசாய சமூகம் அணிதிரளுகிறது. குடியரசு கொண்டாட்டத்தில் குப்பையை அகற்றிய மோடி, குடியரசின் அடித்தளமான குடியானவர்களையும் குப்பையாக எண்ணி தள்ளிவிடுகிறார். மோடியிடமிருந்து குடியரசைக் காக்க, கூட்டாட்சியை, மாநில உரிமையை மீட்க குடியானவர்கள் இன்றி முடியாது என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியாதா என்ன?