Against encroachment of crematorium

தலித்_மக்கள்_இடுகாடு_ஆக்கிரமிப்புக்கு_எதிராக_சிபிஐஎம்எல்_போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை ஊராட்சியை சார்ந்த ஆடுதுறை கிராமத்தில்.. 300 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களுக்கு சொந்தமான இடுகாடு 165 குழி/ (சுமார் அரை ஏக்கர்) மூப்பனார் சமூக நிலவுடமையாளர் ஒருவரால் கடந்த,20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டு இடுகாடு கரும்புத் தோட்டமாக மாற்றப்பட்டது.

தலித் மக்கள் மரியாதையாக வாழ்வதற்கான வழியை அடைத்தவர்கள், அவர்கள் இறந்த பிறகு.. இறந்த உடலை மரியாதையாக அடக்கம் செய்யவும் விடாமல் தடுத்து வருகின்றனர்.பிணத்தை வைத்து கொண்டும் போராடவேண்டிய அவலநிலை ஆடுதுறை தலித் மக்களுக்கு தொடர்கிறது.அரசும், ஆக்கிரமிப்பாளர்களும் இணைந்து தலித் மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது.

உள்ளிக்கடை ஊராட்சியில், புதிதாக உருவான சிபிஐ(எம்-எல்)கட்சிக் கிளையின் முயற்சியால் கடந்தமூன்று மாதங்களுக்கு முன்னர், மூதாட்டி ஒருவர் இறந்தபோது, 'இடுகாடு எவ்வளவு உள்ளது என்பதை அளந்து அத்து காட்டவேண்டும்;இடுகாடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி,அன்றே இடுகாடு அளந்து அத்து காட்டப்பட்டது.

அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றி தருவதாக எழுத்துப்பூர்வமான வாக்குறுதி தந்தனர்.அத்துடன் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய இடமும் ஒதுக்கி கொடுத்தனர், பிறகு போராட்டம் கைவிடப்பட்டு உடல் அடக்கம் நடைபெற்றது.

அதன்பிறகு அரசு அதிகாரிகள் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டனர்.ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை, மாறாக முன்பைவிட கரும்பு பெரியளவில் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் அதே தலித் கிராமத்தில் கடந்த நவம்பர்-13-ந்தேதி மீண்டும் ஒரு தலித் மூதாட்டி இறந்து போகிறார், மீண்டும் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியாமல் நவம்பர்-13,14, இரண்டு நாட்கள் இறந்தவர் உடலை வைத்து கொண்டு சிபிஐ(எம்-எல்), தலைமையில் மக்கள் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் விளைவாக மீண்டும் வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் வருகை தந்து சிபிஐ(எம்-எல்), தலைமையில் மக்களுடன் பேச்சுவார்தை நடைபெற்றது.

பேச்சு வார்த்தை முடிவில்..

ஒருவார காலத்திற்குள் தலித் மக்கள் இடுகாடு ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்றி தருவது என்றும்,

அரசு அதிகாரிகள் ஜேசிபி வண்டி மூலம் உடலை அடக்கம் செய்ய போதுமான இடத்தை கரும்பை அகற்றி சுத்தம் செய்து கொடுப்பது எனவும் _முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஜேசிபி வந்தது, இடம் சுத்தம் செய்யப்பட்டது. போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு இறந்தவர் உடல் மரியாதையாக அடக்கம் செய்யப்பட்டது.

¶இரண்டு நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஐ(எம்-எல்) தலைவர்கள் கலந்து கொண்டனர்.

¶அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிவை நடைமுறை படுத்த வேண்டும்.

¶ஆக்கிரமிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

¶20-ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பை அனுமதித்த, ஆக்கிரமிப்பிற்கு துணைபோன அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

¶இடுகாட்டிற்கு சாலை வசதி,மயான கொட்டகை,சுற்று சுவர், தண்ணீர் வசதி, மின்விளக்கு வசதி ஆகியவற்றை உடனடியாக செய்து தரவேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.