Thiruvaikkavur Protest

தஞ்சை மாவட்ட திருவைக்காவூர் 

  • தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக, 

  • சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, 

  • காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிராக 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)

கண்டன ஆர்ப்பாட்டம்

நவம்பர் 18, 2021 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் திருவைகாவூர் கிராமத்தில் தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட சாதிய அரசு வன்முறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், மாநில செயலாளர் தோழர் N.K நடராஜன், மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பழ.ஆசைதம்பி, அவிகிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் குணசேகரன், மாவட்டம் செயலாளர் கண்ணையன் மற்றும் மாவட்ட, ஒன்றிய முன்னணி ஊழியர்கள், பொதுமக்கள் என கலந்துகொண்டனர்...

                                                                                                                                                                         18 நவம்பர் 2021
                                                                                                                                                                          கும்பகோணம்

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் வழங்கப்பட்ட 
மனுவின் சுருக்கம் 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருவைக்காவூர் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட து திருவைக்காவூர்  கிராமம்  ஆகும். இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 1100 பேராகும். இவர்களில் தலித் மக்கள் சுமார் 250 பேர்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் சராசரியாய் 800 பேர்கள். அதில் வன்னியர் சமூக மக்கள் 80% சதவீதமாக உள்ளனர். தலித் மக்களுக்கும் வன்னியர் மக்களுக்குமான சாதிய வேறுபாடு இருந்தாலும் சாதிய மோதலாக இதுவரை உருவாகவில்லை. 

சமீபத்தில் நடந்த, சில முரண்பாடுகளுக்கு காரணமான சம்பவங்களும் கூட 18 அக்டோபர் 2021 அன்று நடந்த அமைதி கமிட்டி கூட்டத்தின் மூலமாக கிட்டத்தட்ட தீர்க்கப்பட்டு விட்டன.

ஆனால், அதே நாள் நடந்த நிகழ்வுகள், குறிப்பாக 18 அக்டோபர் அன்று தலித் இளைஞர் தியாகராஜன் பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவால் தாக்கப்பட்டது, அதைத்தொடர்ந்து, காவல்துறை நடத்திய சட்ட விரோதமான அத்துமீறல்கள், தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட, உள்நோக்கம் கொண்ட, மிகக்கடும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு, இன்னொரு தரப்பின் தவறுகள் குறித்து மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது மென்மையான அணுகுமுறை, வீடு புகுந்து இரு சக்கர வாகனங்களை எடுத்து சென்றது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உற்று நோக்கும்போது, இதுவரை இல்லாமல், முதல்முறையாக பெரும் தாக்குதல் நடந்திருப்பது, காவல்துறை அத்துமீறல்களை சுட்டிக்காட்டுவதாக படுகிறது. காவல்துறை அதிகாரிகளின் ஆதிக்க மனோபாவத்தையும், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் விரோத மனப்பான்மையையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. எனவே, இது குறித்து ஒரு முழுவிரிவான விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Image removed.

புனையப்பட்ட வழக்குகள்
இந்நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை அதிகாரிகள் இரு சமூகத்தார் மீதும் 7 எப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். அதில் தலித் மக்கள் மீது 4 -ம், வன்னியர் சமூகம் மீது 3 ம் போடப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் இரு சமூகத்தார் மீதும் எண்ணிக்கையில் சரிசமமாக 26 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவ்வழக்குகளின் தன்மையை நோக்கினால், தலித் மக்கள் மீது மட்டுமே, 307 ஐ.பி.சி போன்ற, ஜாமீன் கிடைக்க இயலாத, கடுமையான பிரிவுகளின் கீழ் போடப்பட்டிருக்கிறது. வன்னியர் சமூகம் மீது எஸ்ஸி.எஸ்டி வழக்கு மட்டு மே போடப்பட்டுள்ளது.  அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததும் தலித் மக்கள்தான் என அவர்கள் மீது வழக்கு வி.ஏ.ஓ புகார் தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் பாரபட்சமான நடவடிக்கையில் தலித் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளர். அதிலும் கூடுதலாக 19.10.2021 அன்று காவல்துறையினர் தலித் மக்கள் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தி சுமார் 12 இரு சக்கர வாகனங்களைக் கைப்பற்றி உள்ளனர். இத் தேடுதல் வேட்டையின் காரணமாக நோயால் பாதிக்கப்பட்ட லெனின் என்ற இளைஞன் இறந்து போயுள்ளார். மனிதாபிமானமற்ற ரீதியில் இரு சமூகப் பெண்களையும் சிறையிலடைத்துள்ளனர். மாணவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறை திட்டமிட்டே தலித் மக்கள் மீது ஒரு தலைப்பட்சமாய் பொய்யாகவே வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். காவல்துறை இரு சமூகத்தார் மீதும் பாரபட்சமின்றி வழக்குப் பதிவு செய்திருக்கிறோம் என்ற கூற்றே உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது. எனவே, உண்மைக்குப் புறம்பாக, ஒருதலைப்பட்சமாக புனையப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். 

தீண்டாமைக் கொடுமைகள்
இம்மோதல் பின்னணியில், தலித் மக்கள் மீது பிற்படுத்தப்பட்ட சமூகம் இழைத்து வரும் பல்வேறு தீண்டாமைக் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 
● தலித் பிள்ளைகள் திருவைக்காவூர் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியவில்லை. 1977  ஆம் ஆண்டின் போது ஒரே ஒரு தலித் மாணவர் தான் அந்த பள்ளியில் படித்தார். அதன் பிறகு கொஞ்சத் தொலைவில் உள்ள இடைக்குடி கிராம அரசுப் பள்ளியில் தான் பிள்ளைகள் படிக்கின்றனர். 
● முடி திருத்தும் கடையில் அண்ணாநகர் மக்களுக்கு முடி திருத்தம் செய்வதில்லை.  
● டீக் கடையில் கீழே அமர்ந்துதான் தலித்துகள் டீ குடிக்க வேண்டும்.
● GK வாசன் எம்.பி நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை தலித் மக்கள் பயன்படுத்த தடை உள்ளது.
● பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு பொதுக் கழிவறை கிடையாது. 
● சுடுகாடு இரண்டு சமூகத்திற்கும் தனித் தனியே இருக்கிறது. மின் எரியூட்டும் சுடுகாடு அரசால் தலித் ஊருக்கு ஒதுக்கியும் வன்னியர் மக்களின் நிர்ப்பந்தத்தால் அதுவும் வரவில்லை. 
● கடந்த 5 ஆண்டுகளாக சிவன் கோவிலில் இந்து அறநிலையத்துறை தலிததுக்ளுக்கான பிரதிநிதித்துவத்தை    அறிவிக்கவில்லை.   
● சிவன் கோவிலுக்குச்    சொந்தமான 29 ஏக்கர்  நிலங்களையும்  நில உடமையராய் உள்ள வன்னியர்களே பயன்படுத்தி வருகின்றனர்.  
● ஊராட்சி மன்றத்    தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கான கோட்டாவில் ஒதுக்கப்பட்டு, பட்டியலின  சமூகத்தைச் சார்ந்த பவுனம்மாள் பொன்னுசாமி  ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்கள் சமூகத்தில் அவர்கள் குடும்பம் ஒன்று  மட்டுமே உள்ளது.  ஆனால்,  இதுவரை ஊராட்சி மன்றக் கட்டிடத்திற்குள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்ல முடியவில்லை. அனைத்து ஊராட்சி மன்றக் கூட்டங்களும் தொடக்கப் பள்ளியிலேயே தான்  நடந்து கொண்டிருக்கிறது.  

இப்படிப்பட்ட சூழலில்தான் இந்நிகழ்வு நடந்தேறி உள்ளது. 

கோரிக்கைகள்
எனவே,
● தமிழக அரசு உடனடியாகத் தலையீடு செய்து வழக்குகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து அவற்றை எந்த நிபந்தனையுமின்றி வாபஸ் பெற வேண்டும். 
● தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் மளிகைக்கடை, டீக்கடை மற்றும்  சலூன் கடை உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
● திருவைக்காவூர் தொடக்கப்பள்ளியில் தலித் மாணவர்களின் சேர்க்கையை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
● GK வாசன் எம்.பி நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை தலித்துகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 
● நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்க ஆவன செய்ய வேண்டும். 
● படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும். 
● மேற்கண்ட ஒடுக்குமுறை காரணமாக இறந்துபோன லெனின் குடும்பத்தாருக்கு அரசு அழப்பீடு வழங்க வேண்டும்.
●  கிராமப்புறங்கள் சார்ந்துள்ள மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட நடவடிக்கை எடுகக வேண்டும். 
● இந்த பிரச்சினையில்,  காவல்துறையின் ஒரு தலைப்பட்ச அணுகுமுறைக்கு காரணம், சில அதிகாரிகளின் ஆதிக்க மனோபாவமும், தலித் விரோதக் கண்ணோட்டமுமே. இந்த நிகழ்ச்சியில் கபிஸ்தல சார்பு ஆய்வாளரின் (ஆண்)  நடவடிக்கை, கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மாறாக, உள்நோக்கத்துடன், பொய்வழக்கு புனைவதாக  இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட அதிகாரிகளை  உயர் அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றுவதன் மூலம், இப்பகுதியில் இரண்டு சமூகங்களுக்குமிடையே ஒரு சமூகமான நிலை ஏற்பட்டு, சமூகத்தில் அமைதி ஏற்பட, வாய்ப்பு இருக்கிறது. 

சமூக நீதி மேல் அக்கறையுள்ளதாக கூறும் தமிழக அரசு, இப்பகுதியில் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியும்,  தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தும், சாதிய மோதல்களுக்கு வழி வகுக்கும் கட்சிகள் மற்றும் தனி நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தும் நியாயத்தை நிலை நாட்ட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.