விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர்,
மோடி ஆட்சியை பின்வாங்கச் செய்துள்ளனர்.
மோடி அரசால் திணிக்கப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்வதற்காக, ஓராண்டு காலம் நீடித்த போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். அதன்மூலம் கிடைத்த அவர்களுடைய வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), விவசாயிகளை மனப்பூர்வமாக வாழ்த்துகிறது.
வேளாண் சட்டங்களைத் தொடர்ந்து, மற்ற பிற கொடூரமான, பாரபட்சமான சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர் சட்ட தொகுப்புகள், தேசத்தின் சொத்துக்களை விற்பது போன்ற பெரு நிறுவன ஆதரவு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்களுடைய போராட்ட இயக்கங்கள், மிகவும் திமிர்பிடித்த, சர்வாதிகார அரசுகளையும் கூடத் தோற்கடித்துவிடும் என்ற மாபெரும் செய்தியை இந்த வெற்றி சொல்கிறது.
பிரதம மந்திரி மோடி, வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுவதாக, ஒரு மோசமான நளினத்துடன் அறிவித்தார். இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்காக, அவர் "தேசத்திடம்" மன்னிப்பு கோரினார். ஆனால், விவசாயிகளைத் தேச விரோதிகள் என்று அழைத்ததற்காக, அவர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவியதற்காக அவர்களிடம் ஒருபோதும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.
காவல்துறை, பா ஜ க வின் மிருகத்தனமான தாக்குதல்களினாலோ அல்லது டெல்லியின் எல்லைகளில் இருந்த கடும் தட்பவெட்ப நிலைமைகளினாலோ, கடந்த வருடத்தில் போராடிக் கொண்டிருந்த 700 விவசாயிகள் இறந்து விட்டனர்.
விவசாயிகள் வேளாண் சட்டங்களைப் பின்னுக்குத் தள்ளுவதில் வெற்றி பெற்றுவிட்டனர் - குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளின் தலைவர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுவது, போராடிய விவசாயிகள் மீது வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிய அஜய் மிஸ்ரா போன்ற அமைச்சர்கள் பதவி விலகுவது ஆகியவற்றின் வெற்றிக்காக அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள்.
குடியுரிமை திருத்தச்சட்டம்(CAA) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(UAPA) போன்ற கொடூரமான, பாரபட்சமான சட்டங்கள்; புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள், பொதுச் சொத்துக்களை வாடகைக்கு விடுவது, விற்பது போன்ற பெருநிறுவன ஆதரவு கொள்கைகள்; அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் அதன் மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி அடிப்படைகளின் மீதான தாக்குதல்கள்; ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும், நம்முடைய அனைத்துப் போராட்டங்களையும் தீவிரப் படுத்துவதற்கான நம்முடைய உறுதியினை, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்ததில் பெற்ற வெற்றி, வலுப்படுத்தும்.
திபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன்
19-11-2021,
தில்லி