கத்ச்ரோலி மோதல் குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்படி விசாரணை நடத்தப்பட வேண்டும்!

மகாராஷ்ட்ரா காவல்துறை, கத்சிரோலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 2021, நவம்பர் 13,14 தேதிகளில் 26 மாவோயிஸ்ட்களை "மோதல்கோலை"யில் கொன்று விட்டதாக கூறிவருகிறது. இந்த சம்பவம் மிகச்சரியாக எங்கு நடந்தது என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் உள்ளன. அதுபோலவே சொல்லப்படும் இந்த மோதல்கொலை நடந்ததற்கான சூழல் குறித்த தகவல்களும் அதன் பின் நடந்தவை பற்றிய தகவல்களும் இன்னும் கிடைத்தபாடில்லை. ஆனாலும் உயர் மட்ட காவல் அதிகாரிகளும் அமைச்சர்களும் சளைக்காமல் வெற்றி கொண்டாட்ட அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்துக்கும் ஒன்றிய அரசாங்கத்துக்குமான வழக்கொன்றில் [(2014) 10 SCC 635] 23.09.2014 நாளிட்ட உச்சநீதிமன்ற உத்தரவு, காவல்துறை மோதல் கொலை நிகழ்வு எல்லாவற்றிலும்  பின்பற்றியே தீர வேண்டிய வழிகாட்டுதல்களை தெட்டத்தெளிவாக வரையறுத்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களின் படி, கத்சிரோலி மோதல் கொலையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கெதிராக உடனடியாக முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு விசாரணையை, ஒரு நீதித்துறை விசாரணையோடு கூடவே, நீதித்துறைக்கு வெளியிலிருந்து ஒரு சுதந்திர அமைப்பு ஒன்றும் மேற்கொண்டாக வேண்டும்.

மேலும், இதுபோன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்காப்புக்காகவே அவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பது நிரூபிக்கப்படாமல் இது போன்ற சம்பவம் நடந்த உடனயே அவர்களுக்கு விதிமுறைகளைத் தாண்டிய பதவி உயர்வோ உடனடியான வீரதீரச் செயலுக்கான விருதுகளோ அளிக்கப்படுமென்று அறிவிக்கப்படக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. எனவே, மகாராஷ்ட்ர அரசு, கத்சிரோலி சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ரூ 51 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருப்பது சட்டவிரோதமானது, அது உடனடியாக திரும்பப் பெறப்பட்டாக வேண்டும்.

-பிரபாத் குமார்,

இகக (மா லெ) மத்தியக் கமிட்டிக்காக