Death of Lavanya Thanjavur

பள்ளி மாணவி லாவண்யா   தற்கொலை மரணம்:

பாஜக-வின் மதவெறுப்பு அரசியல் சதி

சிபிஐ(எம்எல்) வன்மையான கண்டனம்!

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர்- மைக்கேல்பட்டி தூய இருதய மேரி பள்ளியில், விடுதியில் தங்கி பனிரெண்டாம் வகுப்பில் படித்த மாணவி லாவண்யா, விடுதியில்  இழைக்கப்பட்ட துன்புறுத்தல் காரணமாக   மன உளைச்சல் அடைந்து  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இருக்குமானால், காரணமானவர்கள் யாராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் இளம் மாணவியின் மரணத்துக்கு கவலைப்படுகிறது. ஆனால் இப் பிரச்சினையை, பாஜகவும் இந்து முன்னணி போன்ற அமைப்புகளும், தமது மதவெறி அரசியலுக்கு வாய்ப்பாக கையிலெடுத்துக்கொள்ள எத்தனிக்கின்றன.

தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாணவியிடம் அரியலூர் மாவட்ட விசுவ இந்து பரிசத் மாவட்ட அமைப்பாளர் மேற்கொண்ட நேர்காணலை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், மாணவி தற்கொலைக்கு காரணம் 'மதமாற்ற நிர்ப்பந்தம் தான்' என்பதாக பாஜக மாநிலத் தலைமை முறைகேடாக வெளியிட்டு வைரலாக்கியது.  இதனடிப்படையில், பாஜக கட்சியானது சிறுபான்மை கிறித்துவ பள்ளி நிர்வாகத்தின் மதமாற்ற நடவடிக்கைகளை கண்டிப்பதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது. இந்த வெறுப்பு அரசியலை விரிவாக்கும் நோக்கத்துடன், தற்போது பாஜகவின் தேசிய பெண் தலைவர்கள் நால்வரைக் கொண்ட குழு விசாரணை செய்து அறிக்கை அளிக்குமெனவும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள், பள்ளிச் சிறுமிகள், தலித்துகள் மீது கொடும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட போதெல்லாம் பாஜக வாயை இறுக்க மூடிக் கொண்டிருந்ததை தமிழ்நாடு அறியும். இப்போது மாணவி லாவண்யா சாவில் மதவெறி அரசியல் நடத்த பாஜக இறங்கியுள்ளது. தமிழ்நாடு பாஜகவின் திட்டத்துக்கு ஊக்கம் அளிப்பது போல பாஜக தேசியத் தலைவர் நட்டா அறிவித்துள்ளார். இதை ஒரு நாடு தழுவிய பிரச்சனையாக காட்ட பாஜக கட்சி முனைகிறது. ஆனால், இந்த குழுவில் வானதி சீனிவாசன் போன்றவர்கள் கூட இடம் பெறவில்லை என்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது. அகில இந்திய அளவில், சமூக ஊடகத்திலும், பொது வெளியிலும், கிறித்துவ கல்வி நிலையங்கள் மீது விஷம பிரச்சாரத்தைக் கட்டமைத்து வருகிற பாஜக, தமிழகத்திலும் அத்தகைய மதவெறி அரசியலை திணிக்க முயன்று வருகிறது.

இந்த தருணத்தில், தற்போது மாணவி லாவண்யா வாக்குமூலம் தொடர்பான மற்றொரு  வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் உள்ள உரையாடல் வழியாக 'மாணவி லாவண்யாவின் தற்கொலை முயற்சிக்கு விடுதியில் அளிக்கப்பட்ட பணிச்சுமை துன்புறுத்தல்கள் தான் காரணம், மதமாற்ற நெருக்கடி அல்லஎன்பதாக தெரிய வருகிறது; மேலும் பாஜக தயாரித்த வீடியோ மதவெறி வன்முறை சதி நோக்கம் கொண்டது என்பதும் அம்பலமாகியுள்ளது.

எனவே –  

  • காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்கின் பிரிவுகளை மாற்றி 'மதமாற்ற தற்கொலையாக' பிரச்னையை திசைதிருப்பும் பாஜக தலைவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், போலி வீடியோவை தயாரித்து விநியோகித்தவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், சிபிஐ-எம்எல் கட்சி கோருகிறது.
  • எப்படியாவது தமிழ்நாட்டில் மதவெறுப்பு அரசியலை உருவாக்கி, வெவ்வேறு மதநம்பிக்கை கொண்ட மக்களிடையே நிலவும் சமத்துவ உறவை சீர்குலைக்க வேண்டும் எனச் செயல்படும் பாஜக கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளை சிபிஐ-எம்எல் கட்சி வன்மையாகண்டிக்கிறது.
  • தமிழ்நாட்டில் மதவெறி நச்சைப் பரப்பும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் அரசியல் சதிகளுக்கு எதிராக அனைத்து இடதுசாரி, சனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் கரம் கோர்த்து, எதிர்ப்பு இயக்கம் கட்டமைக்க வேண்டும் என சிபிஐ-எம்எல் (விடுதலை) அறைகூவல் விடுக்கிறது.

இப்படிக்கு,

என்.கே. நடராஜன்,

மாநில செயலாளர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை

தமிழ்நாடு

Image Thanks india.on-24.com