TN Tableu 2022

மாநிலங்களின் சுதந்திர போராட்ட  வரலாற்றை மறுக்கிற,

மாநில உரிமைகளை மிதிக்கிற,

காவிப் பாசிச ஒன்றிய அரசை

சிபிஅய் (எம்.எல்) விடுதலை வன்மையாக கண்டிக்கிறது.

 குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள, தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு மோடி அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

தமிழகத்தின் சார்பிலான ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரைத் தவிர உலக தலைவர்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வேலுநாச்சியார், ஆகியத் தலைவர்களை தெரியாது என்று கூறி தமிழ்நாட்டின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் ஒன்றிய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பது வேடிக்கையானதும் வேதனைமிக்கதுமாகும். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு தெரிந்திருந்த வ உ சியும் பாரதியாரும் உலகத் தலைவர்களுக்கு தெரியாது என மோடி அரசின் அதிகாரிகள் கூறியிருப்பது ஆணவமிக்க செயலாகும்.

இந்த அணிவகுப்பு ஊர்திகளில் தென்மாநிலங்களில் கர்நாடக ஊர்திகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிமேல் ஆண்டுதோறும் நடக்கும் சுதந்திரநாள் கொண்டாட்டம் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளான ஜனவரி 23 முதல் கொண்டாடப்படும் என்ற அரசின அறிவிப்பு அதிகாரிகளுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் மேற்கு வங்க மாநில ஊர்திகளையும் அணிவகுப்பில் கலந்துகொள்ள அனுமதி மறுத்துள்ளனர்.

இந்நிலையில், குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளா, தெலங்கான மேற்கு வங்க அலங்கார ஊர்திகளை நிராகரித்த ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறாதவர்கள் சுதந்திரத்தின் 75 வது ஆண்டு கொண்டாட்டத்தை, வரலாற்றை திரித்துக்கூறும் பாஜக கொண்டாடும் நிலைக்கு தனது கவலையையும் தெரிவித்துக் கொள்கிறது.

உடனடியாக தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்க ஊர்திகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சுதந்திர போராட்ட வரலாற்றை மாசுபடுத்திய மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்திய அதிகாரிகள் குழுவின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இகக(மா லெ) தமிழ்நாடு மாநிலக் கமிட்டி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தோழமையுடன்                                                       18-01-2022,சென்னை-48

என்.கே.நடராஜன்

மாநிலச் செயலாளர்

சிபிஅய்(எம்.எல்)விடுதலை