Srilata Swaminathan

தோழர் சிறிலதாசுவாமிநாதன்

(29-04-1944 – 05-02-2017)

ஒரு எழுச்சியூட்டும் புரட்சிகரப்பயணம்

(2017, மார்ச் லிபரஷேனில் வெளிவந்த புகழஞ்சலியின் தமிழ் வடிவம்)

தோழர் சிறிலதா 1944, ஏப்ரல் 29 அன்று சென்னையில் பிறந்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, டெல்லிக்கு வந்தார்; அங்கு தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். நாடகத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக லண்டனுக்குச் சென்றார். ஆனால் 1972ல் டெல்லிக்கு திரும்பிய அவரது வாழ்வு முடிவானதொரு திருப்பத்தை மேற்கொண்டது. அவர் இகக(மாலெ)வில் சேர்ந்தார், தில்லிபிராந்தியத்திலுள்ள மெஹ்ரௌலியில் விவசாயத்தொழிலாளரை அமைப்பாக்கும் வேலையைத் துவக்கினார். தில்லியிலுள்ள உணவு விடுதித் தொழிலாளர் மத்தியிலும் அவர் வேலை செய்தார். நெருக்கடி நிலையின் போது கைதுசெய்யப்பட்ட அவர் 10 மாதங்கள் திகார் (தில்லி) சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து காவல் கட்டுப்பாடுடன் சென்னைக்கு அனுப்பப்பட்டார். தோழர் சிறிலதாவுக்கு இது ஒரு வாய்ப்பாகவே இருந்தது; அவர் துறைமுகத்தொழிலாளர், கப்பல்தளத் தொழிலாளர் மத்தியில் வேலைசெய்வதற்காக தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுபடுவதற்கான வாய்ப்பாக அதனை மாற்றிக்கொண்டார்.

நெருக்கடி நிலை 1977ல் விலக்கிகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தில்லிக்கு திரும்பிய அவர் தனது வேலைத்தளத்தை 1978ல் ராஜஸ்தானுக்கு மாற்றிக்கொண்டார். அங்கு அவர் பழங்குடியினர், பெண்கள், கிராமப்புர கொத்தடிமை தொழிலாளரிடமிருந்து வந்த பலதரப்பட்ட தொழிலாளர், சுரங்கத்தொழிலாலும் வேறுபல தொழிலாலும் இடம்பெயர்ந்த தொழிலாளரை தொழிற்சங்கத்திற்குள் கொண்டு வருவதிலும் பணியாற்றினார். மேட்டுக்குடி பின்புலமும் வளர்ப்பும் கொண்ட ஒரு பெண்ணாகிய அவர், தனது மார்க்சிய செயல்பாட்டுக்கு கிராமப்புர ராஜஸ்தானை தழுவிக்கொண்டது ஒரு துணிச்சல்மிக்க முடிவாகவே இருந்தது; இது சிறிலதாவின் புரட்சிகர வைராக்கியத்தையும் அரசியல் துணிச்சலையும் பிரதிபலிப்பதாக  இருந்தது. அவரது இறுதி மூச்சுவரை, புரட்சிகர இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்துவதிலும் ராஜஸ்தானில் ஆழப்பதிந்துள்ள பிரபுத்துவ ஆணாதிக்கம், மதவாத மாபியா கூட்டுக்கு எதிராக முற்போக்கு கருத்துகள், மதிப்பீடுகளை பரப்புவதிலும் பாதுகாப்பதிலும் பணிபுரிந்தார்.

1970களின் துவக்கத்தில் இகக(மாலெ) பின்னடவைத் தொடர்ந்து சிறிலதா, சிலகாலம் தோழர் கானுசன்யாலுடன் பணிபுரிந்தார். ஆனால் பிகாரில் எழுந்த இந்தியமக்கள் முன்னணி அவரது கவனத்தை ஈர்த்தது, இந்திய மக்கள் முன்னணியின் மிகுந்த எழுச்சிகரமான 1990 தில்லிப் பேரணியைத் தொடர்ந்து அவரது துணைவரும் உற்ற தோழருமான மகேந்திர சிங்குடனும் நூற்றுக்கணக்கான பல தோழர்களுடனும் இகக(மாலெ)வில் இணைந்தார். 1990களில் அவர் அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 1997 வாரணாசியில் நடைபெற்ற இகக(மாலெ) காங்கிரசில் மத்தியக்கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஏப்ரலில் நடந்த ராஞ்சி காங்கிரசில் அவரது உடல்நிலை காரணமாக, (மத்தியகமிட்டியிலிருந்து) விடுவிக்கப்படும் வரை இந்தப் பொறுப்பை நிறைவேற்றினார். அகிலஇந்திய தொழிற்சங்க மய்யக்கவுன்சிலின் துணைத்தலைவராகவும் பணிபுரிந்தார்.

தோழர் சிறிலதா, அபாரமான ஆக்கபூர்வ ஆற்றலும் முடிவற்ற உற்சாகம், வலுவான அரசியல் உறுதியும் கொண்ட மிகவும் குறிப்பிடத்தக்க பல்துறை களப்பணியாளராக இருந்தார். அவரது வாழ்வில் அவர் எதிர்கொண்ட ஒவ்வொரு இன்னல்மிக்க நிலமைகளின் போதும் தனித்துவமான மீளாற்றலுடன் தாக்குப்பிடித்து நின்ற அவர் அபாரமான நகைச்சுவை உணர்வும் கொண்டவர். நலிவடைந்து வந்த அவரது உடல்நிலை, 2016 நவம்பரில் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக தேசிய மாநாட்டுக்கு அவரை வரவிடாமல் செய்துவிட்டது. அவர், மாநாட்டு பிரதிநிதிகளுக்காக பாடலொன்றை எழுதி அவரே பாடி அதை மாநாட்டிற்கு ஒலிநாடாவாக அனுப்பிவைத்திருந்தார். அவரின் பரந்துபட்ட கரிசனம், செயலூக்கம் காரணமாக அவர் இகக(மாலெ)வுக்கும் பலதரப்பட்ட முற்போக்கு ஜனநாயக கருத்துகள், செயல்கள் கொண்ட நீரோட்டங்களுக்கும் இடையிலான இயற்கையானதொரு பாலமாக இருந்தார். முற்போக்கு நோக்கங்களுக்கான மக்களின் அனைத்து வகைப்போராட்டங்களிடத்தும் உயர்ந்த மரியாதை கொண்டிருந்ததோடு இகக(மாலெ) வழிநடத்திவரும் பீகார், ஜார்க்கண்ட் போராட்டங்கள் மீது மாபெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர், மக்கள் மீது ஆழ்ந்த பரிவுணர்ச்சி கொண்டிருந்தார், பல்வேறு அரங்கங்களிலும் பணிபுரியும் அவரது சகதோழர்கள் மீது ஆழமான அக்கறை கொண்டிருந்தார். தோழர் சிறிலதாவின் புகழ்மிக்க மரபு, ஒடுக்கப்பட்ட மக்களது கவுரவம், ஜனநாயகம், சமூக விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்துச்செல்ல தொடர்ந்து நமக்கு உத்வேகமூட்டும்.

தோழர் சிறிலதா சுவாமிநாதனுக்கு செவ்வணக்கம்!

----------

இகக(மாலெ) வின் மூத்த தலைவர் தோழர் சிறிலதா சுவாமிநாதன், ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில் பிப்ரவரி 5 (2017) அன்று அதிகாலை மரணமுற்றார். அவருக்கு வயது 74. ஜனவரி 28 அன்று அவருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டது. உடனடியாக அவர் உதய்பூரிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஏற்பட்ட இதய செயலிழப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.