election

உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பொறுப்புகளுக்கும் நேரடித் தேர்தல் நடத்த சட்ட திqருத்தம் வேண்டும்

உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் அளித்துள்ள "மகத்தான" வெற்றி, பேரூராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி பெருந் தலைவர்,  துணைத் தலைவர் பொறுப்புகளுக்கான மறைமுகத் தேர்தல்களால் மாசடைந்து திமுக கூட்டணிக்குள் கசப்பையும் உரசலையும் கொண்டு வந்துள்ளது. 

கூட்டணி கட்சிகளுக்கு இடையே இப் பதவிகளை பிரித்து வழங்குவது பற்றி திட்டவட்டமாக திமுக  அறிவித்திருந்தது. ஆனாலும் திமுக கட்சியைச் சேர்ந்தவர்களே பல இடங்களில் கூட்டணி முடிவைமீறி அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து  போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். 'கூட்டணி தர்மம்' குலையாமல் பாதுகாக்கும் தேவையை உணர்ந்து திமுக தலைமை உடனடியாக தீவிர ஒழுங்கு நடவடிக்கையை முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கை, மார்க்சிஸ்ட், விசிக, காங்கிரஸ் கட்சிகளிடம் திமுகவின் "பேராளுமைமிக்க" தலைமையின் மீது நம்பிக்கையையும் நிறைவையும் கொண்டு வந்திருக்கிறது.

எனினும், மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி தேர்தலுக்கு முன்பே வலியுறுத்தியது போல, மறைமுக தேர்தலே 'குதிரை பேரத்தையும் அரசியல் சந்தர்ப்பவாதத்தையும்' கட்டவிழ்த்துவிடுவதற்கான  அடிப்படையான காரணமாகும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.

தேர்தலில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிட்டவர்கள் மறைமுகத் தேர்தலில் திமுகவை ஆதரித்ததற்காக பலரை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இதே முறையை பயன்படுத்தி அதிமுக, மணப்பாறை நகராட்சியை கைப்பற்றி இருக்கிறது. பாஜக தோற்றுப் போயிருந்தாலும் நாகர்கோயில் மாநகராட்சியில் இந்த முறையை பயன்படுத்தியிருக்கிறது.

மறைமுகத் தேர்தல்களுக்கு முன்பாகவே பல இடங்களில் அதிமுக, சுயேச்சை உறுப்பினர்களும் திமுக நோக்கி படையெடுத்தது இதற்கான முன்னோட்டமாகும்.  அனைத்து பதவிகளுக்கும் நேரடித் தேர்தல் நடத்தப்படுவதை திமுகவிடம் வலியுறுத்தி உறுதி செய்யத் தவறிய கூட்டணி கட்சிகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

தற்போதைய 'கசப்பான' நிலமையிலும் கூட விடுதலை சிறுத்தை கட்சிகள் தவிர பிற கூட்டணி கட்சிகள் நேரடித் தேர்தலை வலியுறுத்தாதது வியப்பளிக்கிறது. திமுக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தல்களில் அனைத்து பொறுப்புகளுக்கும் மக்கள் வாக்களிக்கும் நேரடி தேர்தல் நடத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டுமென மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதோடு பெண்கள், தலித்துகள், பழங்குடி பிரதிநிதிகள் 'அச்சமற்று, சுதந்திரமாக' பணியாற்றுவதை உறுதிசெய்வது, 'உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி, நிர்வாக அதிகாரத்தை வழங்குவது' உள்ளிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்டதிருத்தங்களை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென்று, திமுக அரசை கூட்டணி கட்சிகளும் பிற கட்சிகளும் வலியுறுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி முன்மொழிகிறது.

தோழமையுடன்

மாநில செயலாளர் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),

தமிழ்நாடு மாநிலக் கமிட்டி