அக்ராஹரம்  சிபிஐ-எம் கிளை செயலாளர் வேலுசாமி  12 ஆண்டுகளுக்கு முன்னால் கந்து வட்டி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
கந்து வட்டி கும்பல், வட்டிக்கு பணம் வாங்கி தவணை கட்டமுடியாத பெண்ணை பாலியல் கொடுமை செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்கு எதிராக வேலுசாமி போராடினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவும், கொடுஞ்செயலில் ஈடுபட்ட சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் தோழர் வேலுச்சாமி காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இதனால் சமூக விரோதிகள் தோழர் வேலுச்சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதன் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினரிடம் வேலுச்சாமி முறையிட்டார். 

இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டி சமூக விரோதக் கும்பல் தோழர் வேலுச்சாமியை 2010ம் ஆண்டு மார்ச் 10 ல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். 
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிபிஐ-எம்எல் விடுதலை, பியுசிஎல் உள்பட பல ஜனநாயக முற்போக்கு அமைப்புகளும் இந்த படுகொலைக்கு எதிராக கண்டன போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்பு, இன்று (14.3.2022) வேலுச்சாமி படுகொலை வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா அவர்கள் குற்றவாளிகள் ஐவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, மூன்றாண்டு கடுங்காவல், மேலும் ஓராண்டு கால தண்டனை,  ரூ. 20 ஆயிரம் அபராதம் வழங்கி  தீர்ப்பளித்துள்ளார். 

கடந்த 12 ஆண்டு காலமாக நடைபெற்ற இந்த படுகொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) விடுதலை வரவேற்கிறது. இந்த  வழக்கை அரசு தரப்பில் ஆஜராகி சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் திருமலைராஜன் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறது.

¶இதுபோன்ற சமூக விரோத கொலைக் குற்றவாளிகளுக்கு குறித்த காலத்திற்குள் தண்டனையை உறுதி செய்கிற விதம் நீதி பரிபாலன முறையை விரைவுபடுத்த நீதித்துறையும் அரசாங்கமும் உரிய வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.

¶கந்துவட்டிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்; கந்துவட்டி தடைச் சட்டம் இருப்பினும் அவை உரிய வகையில் செயல்படுத்தப் படுவதில்லை. அதை தமிழக அரசு செயல்படுத்த அக்கறை காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது. 

தோழமையுடன்,
என் கே நடராஜன்,
மாநில செயலாளர், 
சிபிஐ-எம்எல் (விடுதலை)
மாநில கமிட்டி, தமிழ்நாடு