Comrade NK Natarajan

தோழர் என் கே நடராஜன் என்று கட்சி முழுவதும் அறியப்பட்ட சண்முகராஜ் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அரசப்பள்ளப்பட்டி கிராமத்தில் கொடாரியப்பர், வள்ளியம்மாள் பெற்றோர்களுக்கு 29-12-1955 ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஒட்டன்சத்திரத்தில் படித்துமுடித்தார். முதுகலைப் பட்டப்படிப்பு வரை பழனி ஆண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் பயின்றார். கல்லூரி காலத்திலேயே தீவிர தத்துவ, அரசியல் தேடுதலில் இருந்தார். காந்திய கொள்கை, விவேகானந்தர் போதனைகள், ஜெ சி குமரப்பாவின் கருத்துகள் குறித்து ஆய்ந்தார். 

கரட்டுப்பட்டி தோழர் முத்துராஜ் அவர்களின் மூலமாக சாரு மஜும்தார்,மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் தொடர்பு கிடைத்து 1980 களின் துவக்கத்தில் கட்சியின் முழுநேர ஊழியராக உயர்ந்தார். சிறிதுகாலம் பத்திரிகை நிருபராகவும் இருந்தார். நீலகிரியிலுள்ள மலைவாழ் மக்கள் மத்தியிலும் கோவை ஆலைத் தொழிலாளர் மத்தியிலும் கடுமையான ஒடுக்குமுறை நிலவிய காலத்தில் உயிரை துச்சமென மதித்து பிரிக்கால் தொழிலாளரை அமைப்பாக்கும் பணியிலும் வெற்றிபெற்றார். நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் நீண்டகாலம் பணியாற்றினார். குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் கணிசமான காலம் பணியாற்றினார். அப்போது, விசைத்தறி தொழிலாளரை அமைப்பாக்கி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துவதில் பெரும் பங்காற்றினார். அவர்கள் மத்தியில் கட்சியைக் கட்டுவதிலும் வெற்றிபெற்றார். அங்கு பணியாற்றியபோதுதனது இணைய ரையும் தேடிக் கொண்டார். புரட்சிகர சங்கமான எஅய்சிசிடியு வின் மாநில பொதுச் செயலாளராகவும் அகில இந்திய தலைவர்களுள் ஒருவராகவும் பணியாற்றினார். 

நீண்ட காலம் கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினராக இருந்த என் கே 2019ல் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 2020ல் கட்சியின் மத்தியக் கமிட்டி க்கு தேர்வானார். 2022 நவம்பர் 26,27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியை 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவதிலும் இடதுசாரி ஒற்றுமையை உயர்த்திப்பிடிப்பதிலும் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகளை பாசிச எதிர்ப்பில் ஒரு மேடையில் கொண்டு வருவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். பிப்ரவரியில் பாட்னாவில் நடைபெறவுள்ள கட்சிக் காங்கிரசை வெற்றி பெறச் செய்ய மாநிலம் முழுவதும் சுழன்று பணியாற்றினார். தோழர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகும் உரிய மருந்துகள் எடுத்துக் கொள்வதை மறந்து போனார். டிசம்பர் 10 (மனித உரிமை நாளில்) கட்சியின் திண்டுக்கல் மாவட்டக் கமிட்டிக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதல் உதவிக்குப் பின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். மூச்சுத் திணறல் தீவிரமடைந்து அங்கு மரணமுற்றார். 

11-12-2022 அன்று பிற்பகல் 4 மணி அளவில் அவரது சொந்த ஊரான அரசப்பள்ளப்பட்டி யில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர்களும் ஊழியர்களும் இடதுசாரி, முற்போக்கு ஆளுமைகளும் அஞ்சலி செலுத்தினர்.