CPIML Manifesto Text

சிபிஐஎம்எல்

18 வது மக்களவை தேர்தல் அறிக்கை

 

பெருந்தொழில் குழும கொள்ளையின் ஆட்சி,
மதவெறி வெறுப்பு அரசியல் ஆட்சி,
அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் ஆட்சி,
பேரழிவுமிக்க, சர்வாதிகார
மோடி ஆட்சிக்கு
முடிவு கட்டுவோம்!

pdf பதிவிறக்கம் செய்ய கீழே லிங்க் உள்ளது.

மத்தியக் கமிட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை

பிஜேபியைத்
தோற்கடிப்போம்!
ஜனநாயகம்
காப்போம்!
 
சி பி ஐ எம் எல் கட்சிக்கு
வாக்களிப்போம்!
இந்தியா கூட்டணி
வேட்பாளர்களைத்
தேர்ந்தெடுப்போம்!
 
சிபிஐ(எம்எல்)விடுதலை [CPI(ML)L]
தேர்தல் சின்னம்: மூன்று நட்சத்திரக் கொடி


அன்பிற்கினிய இந்திய மக்களே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பல கட்சி ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பையும் பல ஆண்டுகளாக நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளோம். 2024 தேர்தல் நெருங்குகிற வேளையில், நாம் இனியும் அதுபோல் எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நடக்கும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்தியாவை ஒரு கட்சி ஆட்சியாக, ஒற்றை ஆட்சியாக மாற்றுகிற வேலையில் மோடி அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் காலத்தில் தற்போது டெல்லியில் முதலமைச்சராக இருப்பவர் உட்பட இரண்டு முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் பத்திரங்களை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பதாலும் அது ஊழலை சட்டப்படியானதாக ஆக்குகிறது என்பதாலும் அதை செல்லாது என தீர்ப்பு வழங்கிய இந்திய தலைமை நீதிபதி எள்ளி நகையாடப்படுகிறார்.

பத்தாண்டு கால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பது என்பது ஏற்கனவே அச்சமூட்டும் அளவிற்கு சென்று விட்டது. இப்போது அரசாங்கம் 400 க்கும் அதிகமான இடங்களுடன் பெரும்பான்மையை உருவாக்கம் செய்வதை நோக்கித் திட்டமிடுவதன் மூலம் இன்னும் பெரிய அடி கொடுத்து அரசமைப்புச் சட்டத்துக்கு சேதாரத்தை உண்டு பண்ணுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடியின் அரசாங்கம் அமைவது என்பது நமது அரசமைப்புச் சட்டத்துக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் நமது கலாச்சார பன்மைத்துவத்துக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் கூட பெரும் பேரழிவாக அமைந்துவிடும்.

இந்த அரசாங்கம், தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக,  சலுகைசார் பெருந்தொழில் குடும்பங்கள், அரசின் ஊதுகுழல் ஊடகங்கள் ஆகியவற்றின் துணையுடன் அரசமைப்புச் சட்ட விரோதச் செயல்களை நேர்மையற்ற தந்திரங்களை செய்கிறது. இந்திய மக்களாகிய நாம் நமக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வாக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரழிவு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். இந்தியாவை துடிப்பான ஜனநாயகமாக மறு கட்டமைப்பு செய்வோம்! தயவுகூர்ந்து உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள். தீர்மானகரமான வருங்கால இந்தியாவுக்கான போர்க்களத்தில் சர்வாதிகாரத்தை ஜனநாயகம் வெற்றி கொள்ள உங்களது வாக்கும் அதில் சேரட்டும்.

- மத்தியக் கமிட்டி

 

பின்வரும் கோரிக்கை சாசனத்திற்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இககமாலெ விடுதலை போராடும். இந்த மாற்றங்கள், நாங்களும் ஒரு பகுதியாக இருக்கிற, இந்தியா கூட்டணி மக்களது விருப்பங்களை செயல்படுத்த வைக்குமெனவும் நம்புகிறோம்.

01

தேர்தல்களை ஜனநாயகப் படுத்துவது

 • வாக்குச் சீட்டுகளைக் கொண்டே வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். அளவில்லா மோசடிக்கு வாய்ப்புள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
 • தலைமைத் தேர்தல் ஆணையர் பிற தேர்தல் ஆணையர்கள் பணி நிபந்தனைகள், பணிக்காலம், சட்டம் நீக்கப்பட வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையரையும் பிற தேர்தல் ஆணையர்களையும் இந்திய உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள ஆலோசனையின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மை கொண்ட முறையில் இந்திய தலைமை நீதிபதி, பிரதம மந்திரி எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுவின் மூலமாக நியமிக்க வேண்டும்.
 • அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு செயல்படுத்தத் தக்க அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
 • வாக்காளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
 • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சித்தாவும் போது, அவர்களது உறுப்பினர் பதவி, தானாகவே தகுதி இழக்கும்படிச் செய்யப்பட வேண்டும். 

02

அனைவருக்கும் சமமான குடியுரிமை! 

 • வேலைவாய்ப்பு, ஊட்டச்சத்து, உடல்நலம், வீட்டுவசதி ஆகியன அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட வேண்டும்.
 • பாகுபாடு காட்டும் சிஏஏ - என் ஆர்சி - என்பிஆர் நீக்கப்பட வேண்டும். 
 • பொது சிவில் சட்டம் குறித்த எந்த ஒரு கருத்தும் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டும்.
 • ஆதார் உள்ளிட்ட அனைத்து பயோமெட்ரிக் அடையாளங்களுடன் இணைக்கப்பட்ட அடையாள அட்டைகளும் நடைமுறைகளும் அகற்றப்படவேண்டும். அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
 • பாலியல் தேர்வு, பாலின அடையாளம் உடல் ஊனம், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
 • வெளிநாடு வாழ் இந்தியருக்கான குடியுரிமை புலம்பெயர்ந்த இந்தியர்களை துன்புறுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும்.

03

இளையோர் இந்தியாவுக்கான வளமை

 • அனைத்து மத்திய மாநில அரசாங்க நிறுவனங்கள் அரசாங்க அமைப்புகள் பொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பதவிகள் உட்பட நிறுத்திவைக்கப்பட்டுள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படவேண்டும்.
 • வேலையில்லாமல் இருக்கும் அனைத்து மக்களுக்கும் வேலை இல்லாக் காலம் முழுவதற்கும் வேலையற்றோருக்கான உதவித்தொகை வழங்க வேண்டும்.
 • விளிம்பு நிலையில் உள்ள சாதிகள் சமூகங்களுக்கு தனியார் துறையிலும் கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.
 • ஆயுதப்படைகளில் அக்னிபாத் திட்டம் நீக்கப்பட வேண்டும்.

04

தொழிலாளர்-ஊழியர்களுக்கு கண்ணியமான, நல்வாழ்வு

 • தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூபாய் 35,000 என நிர்ணயிக்கப்பட வேண்டும். 
 • தொழிலாளர் விரோத நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ரத்து செய்யப்பட வேண்டும். 
 • பழைய ஓய்வூதிய திட்டம் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும். 
 • அமைப்புசாரா, முறைசாரா தொழிலாளர்களுக்கு உடல் நலம், கல்வி, பணி ஓய்வு கால பலன்கள் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு பலன்கள் நீட்டிக்கப்பட வேண்டும். மாறும் அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம், மாதம் ஒன்றுக்கு ரூ 10,000 அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
 • திட்டப் பணிகள், ஒப்பந்த பணிகள், அயல்பணிகள், இணைய சேவை பணிகள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்த, இடைக்கால பணிகளும் முறைப்படுத்தப்பட வேண்டும்.
 • அனைத்துப் பணியிடங்களிலும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்புகள், குழந்தை பராமரிப்பு வசதிகள் வழங்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு, பதவி உயர்வு சம்பந்தப்பட்ட கொள்கைகளில் அனைத்து வகை பாலின பாகுபாடுகளும் போக்கப்பட வேண்டும்.

05

வேளாண்மை, கிராமப்புர பொருளாதாரத்தை மீட்டெடுப்பது

 • சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி அனைத்து பயிர்களுக்கும் சி2+50% வாய்ப்பாடு அடிப்படையில் சட்ட ரீதியில் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும். 
 • பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் விவசாயிகள், கிராமப்புர தொழிலாளர் பெற்றுள்ள அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
 • விவசாயத்திற்கு மானியம் உறுதி செய்யப்பட வேண்டும். உரங்களும், வேளாண் இடுபொருள்களும் மலிவு விலையில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். 
 • அனைத்து குத்தகைதாரர்களும் பதிவு செய்யப்பட வேண்டும்; ஒரு விவசாயியாக அவரது உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். உச்சவரம்பு போக மீதமுள்ள உபரி நிலங்கள், பண்ணை நிலங்கள், தானமாக வழங்கப்பட்ட நிலங்கள், கோவில், மடங்களின் நிலங்கள், தரிசு நிலங்கள் ஆகியன நிலமற்றவர்களுக்கு மறுபங்கீடு செய்யப்பட வேண்டும்.
 • மகாத்மா காந்தி தேசிய கிராமப்புர வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வேலை கோரும் தொழிலாளருக்கு நாளொன்றுக்கு ரூ 600 சம்பளமும் ஆண்டொன்றுக்கு 200 நாட்கள் வேலையும் வழங்கப்பட வேண்டும்.

06

அனைவருக்குமான நகரம் என்ற உரிமையை உறுதி செய்தல்

 • நகர, பெருநகர வாசிகள் அனைவருக்கும் மலிவான வீட்டு வசதி, குடிநீர், கழிப்பிட வசதி, குடிமை வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். 
 • வீடுகள் இடிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும். குடிசை வாசிகளுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் (முன்பு) இருந்த இடத்திலேயே மறுவாழ்வு ஏற்படுத்தித் தருவது விதியாக இருக்க வேண்டும்.
 • நகர்ப்புரங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் மலிவான பொது போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். 
 • நகர்ப்புரங்களில் வேலை தேடுபவர்களின் தேவைகளை நிறைவேற்ற நகர்ப்புர வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

07

சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்துவது

 • அகில இந்திய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டின் வரம்பு விரிவு படுத்தப்பட வேண்டும். 
 • நகர்ப்புர, கிராமப்புரங்களில் உள்ள அனைத்து வீடற்ற குடும்பத்தினருக்கும் இலவச வீடு வழங்கப்பட வேண்டும். 
 • அவசர அவசியமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 50 கிலோ உணவு தானியங்கள், அதோடு கூடவே சர்க்கரை, பால், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் போன்றவை ஒவ்வொரு மாதத்திற்கும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக துறையின் மூலமாக வழங்கப்பட வேண்டும். 
 • அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் சேவைக் கட்டணங்களை கட்டுக்குள் வைத்திருப்பது கடுமையாக்கப்பட வேண்டும். 
 • எஸ்சி/எஸ்டி துணைத் திட்ட சட்டம் 2013, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989/1995, கையால் மனிதக் கழிவுகளை அகற்றுவதைத் தடுக்கும் சட்டம் 2013 ஆகியவை கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும். 
 • மாற்றுத் திறனாளிகள், அனைத்து பொது இடங்களையும் பொது போக்குவரத்துகளையும் பயன்படுத்துவதற்கு சமமான வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படவேண்டும். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 5% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவர்களுடைய வருமானத்திற்கு வரி விதிக்க கூடாது. அவர்களுக்கு உதவி செய்யும் தொழில்நுட்பங்களுக்கும் கருவிகளுக்கும் அரசு ஆதரவுடன் போதுமான நிதி உதவி செய்யப்பட வேண்டும். 
 • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு அகவிலைப்படியுடன் கூடிய மாதம் ஒன்றுக்கு ரூ 10,000 ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். 
 • சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்மிக்க வகையிலும்,  காலக்கெடுவுக்குள்ளும் அமல்படுத்த வேண்டும்.

08

பெண்கள், மாற்று பாலினத்தவர், எல்ஜிபிட்டிகியூஐஏ+ சமூகங்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்

 • நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு (ஓபிசி யினருக்கான இட ஒதுக்கீடுடன்) உடனடியாக அமல்படுத்தப்படவேண்டும். கூடுதலாக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் 50% இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
 • பாலியல் தாக்குதல்களில் தப்பிப் பிழைத்தவர்கள், குடும்ப வன்முறைகள் “கவுரவ” அல்லது சாதியாதிக்கக் குற்றங்கள், வன்முறைகளை எதிர்கொள்ளும் சாதி மறுப்பு, மதக் கலப்பு இணையர்கள் ஆகியோருக்கு அரசு உதவியுடன் கூடிய பாதுகாப்பு அமைப்புகள், திறன்மிக்க வகையில் உதவி செய்யும் வழிமுறைகள், ஆதரவு அமைப்புகள் ஆகியன வலுப்படுத்தப்பட வேண்டும். 
 • பெண்களுக்கான அரசமைப்புச் சட்ட உரிமைகளுக்கேற்ப, தனிநபர் சட்டங்களில்  திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 
 • மாற்று பாலினத்தவர்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். தேசிய சட்ட சேவைகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) தீர்ப்பின் மூலம் உறுதி அளிக்கப்பட்ட அவசியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும், நலத்திட்ட நடவடிக்கைகளும் வழங்கப்பட வேண்டும்.
 • வேறுபட்ட பாலின உணர்வாளர்களுக்குத் (எல்ஜிபிட்டிகியூஐஏ+) தேவையான சட்டப் பாதுகாப்பும், ஆதரவு அமைப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாலியல் தேர்வு, பாலின அடையாளம் குறித்த பாகுபாடு இல்லாமல், எந்த இரு நபர்களும் சட்டபூர்வமான உறவுக்குள் நுழைகிற உரிமையை அங்கீகரிக்கிற சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். 
 • பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த விசாகா வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும். நீதிபதி வர்மா கமிட்டியின் அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளும் அமல்படுத்தப்பட வேண்டும்.

09

அனைவருக்கும் கல்வி

 • தேசிய கல்விக் கொள்கை 2020 நீக்கப்பட்டாக வேண்டும். கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
 • அனைத்து மட்டங்களிலும் இலவச கல்வி வழங்கப்பட வேண்டும். தாய் மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். சமஸ்கிருதம் அல்லது வேறு எந்த மொழிகளும் கட்டாயமாக திணிக்கப்பட அனுமதிக்கக் கூடாது.
 • கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் இருக்கும் ஏற்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். சட்டத்திலுள்ள இந்த ஏற்பாடுகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.
 • கல்வி நிறுவனங்களில் சாதிய, பாலின பாகுபாடுகள் ஒழிக்கப்படுவதற்கு முதன்மை முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ரோகித் வெமுலா சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பாலின கூருணர்வு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
 • பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். மதியஉணவு திட்டத்தில் முட்டையும் இறைச்சியும் சேர்க்கப்பட வேண்டும். 
 • நீட், கியூட் தேர்வுகள் நீக்கப்பட வேண்டும்.

10

பொது சுகாதார அமைப்புமுறை வலுப்படுத்தப்பட வேண்டும்

 • அனைவருக்குமான இலவச மருத்துவ வசதிகள், நோய்எதிர்ப்புத் திறனூட்டல் வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். அனைவருக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அவற்றின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

11

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பும் பருவநிலைக்கான நீதியும்

 • வனங்கள்/சுற்றுப்புறச் சூழல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து பெரும்தொழில் குழும ஆதரவு கொள்கைகளும் திருத்தங்களும் நீக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். 
 • வன உரிமைகள் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். வன நிலங்கள் மற்றும் வளங்களின் மீது வனங்களில் வாழுகிறவர்களுக்கான உரிமை எவ்வகையிலும் நீர்த்துப்போக விடக்கூடாது. வனங்களில் இருந்தும், அவர்களது நிலங்களில் இருந்தும் பழங்குடியினரை வெளியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும். ஹஸ்தேவ் வனங்களிலிருந்து அதானியின் திட்டங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். 
 • சூழலியல் ரீதியாக எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இமய மலைகளிலும், அதுபோன்ற பிற இடங்களிலும் நடைபெறும் பெரும் கட்டுமான திட்டங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும். ஜோஷிமாத் பகுதியில் பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு மறுவாழ்வு, மறு கட்டமைப்பு, நிலைப்படுத்தலுக்கான திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.

12

மக்கள் ஆதரவு பொருளாதாரக் கொள்கை

 • பெரும் பணக்காரர்கள் மீது 1 % செல்வவரி மற்றும் வாரிசுரிமை வரி விதிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். கார்ப்பரேட் வரிவிகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். கார்ப்பரேட்டுகளின் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், நிலுவையில் இருக்கிற செயல்படாத சொத்துகள் மீட்கப்பட்டாக வேண்டும். 
 • கார்ப்பரேட் கம்பெனிகளின் நிர்வாக அமைப்புகளில் தொழிலாளர் பிரதிநிதித்துவம், நிதி வெளிப்படைத்தன்மை, கட்சிகளுக்கு நிதி கொடுப்பதில் கட்டுப்பாடு, வரி ஏய்ப்பைத் தடுப்பது, தொழிற்கூடங்கள் ஜனநாயகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கார்ப்பரேட் பொறுப்புடைமையை வலியுறுத்தும் விரிவானதொரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
 • கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு துறையிலும், நிதித்துறையிலும் தனியார்மயமாக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், நடுத்தர, சிறு தொழில் நிறுவனங்கள் புத்துயிரூட்டப்பட வேண்டும். வலுப்படுத்தப்படவேண்டும். தேசிய பணமாக்கல் திட்டம் நீக்கப்பட வேண்டும். 
 • காட்டு நிலங்கள், கடற்கரைப் பகுதிகள், பாரம்பரிய மீன்பிடிப்பு மண்டலங்களில் தனியார்மயமாக்கமும் வர்த்தகமயமாக்கமும் நிறுத்தப்பட வேண்டும்.
 • சரக்குகள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) திரும்ப பெறப்பட வேண்டும். சரக்கு மற்றும் சேவைகளுக்காக முற்போக்கான வரிவிதிப்புக் கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும்.

13

அரசை பொறுப்பேற்கச் செய்தல்

 • தகவல் அறியும் உரிமைச்சட்டம் வலுப்படுத்தப்படவேண்டும்.
 • சட்ட அமலாக்கம் என்ற பேரால் நடைபெறும் மானுட உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வரவும் பொதுமக்களுக்கு பதில் சொல்வதை உறுதிசெய்யும் வகையிலும் காவல்துறை, சிறைசீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசரத்தேவை முன்வந்துள்ளது. காவல்துறை சீர்திருத்தமானது, மாபெரும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமையை நோக்கி வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
 • சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் (உபா), ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் (அப்ஸ்பா) போன்ற அனைத்து கொடூரச் சட்டங்களும் புதிய  மூன்று குற்றவியல் சட்டங்களும் ரத்துசெய்யப்பட வேண்டும். அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
 • சாதி, மத படுகொலைகள், நீதிக்குப் புறம்பான (சட்டவிரோத, கவுரவ) கொலைகள் தொடர்பான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் (ட்ரியூபுனல்) அமைக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருக்குரிய மீட்பு நடவடிக்கைகளும், இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும்.
 • வழிபாட்டுத்தலங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம், 1991 கறாராக அமலாக்கப்பட வேண்டும்.
 • அமீர்தாஸ் ஆணையம் உயிரூட்டப்பட வேண்டும், தடைசெய்யப்பட்ட ரன்வீர்சேனா தனியார்படையுடன் உள்ள அரசியல் தொடர்புகள் பற்றி விசாரணை தொடங்கப்பட வேண்டும்.

14

கூட்டாட்சிமுறையை மறுகட்டமைப்பு செய்தல்

 • கூட்டாட்சிக் கோட்பாடுகள் பரவலாக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்படவேண்டும். ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்.
 • பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டு அவற்றுக்கு சிறப்பு ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
 • ஜம்மு காஷ்மீர், தில்லி, புதுச்சேரி பகுதிகளுக்கு முழு மாநிலத் தகுதி வழங்கப்படவேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையில் லடாக் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.
 • வட-கிழக்கு பிராந்தியங்களிலுள்ள சுயாட்சி மாவட்ட கவுன்சில்களுக்கு மேலதிகமான சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அசாமிலுள்ள கர்பி அங்லாங் பகுதிக்கு அரசமைப்புச்சட்டம் உறுப்பு எண் 244-ஏ ன்படி சுயாட்சி மாநில தகுதி வழங்கப்பட வேண்டும்.

15

இறையாண்மைமிக்க, ஜனநாயக, மனிதநேய வெளியுறவு கொள்கை

 • இந்தியா, அதன் அண்டை நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு கொண்ட நட்புறவை வளர்த்தெடுக்க வேண்டும். அணிசேராக் கொள்கை தக்கவைக்க வேண்டும், வலுவூட்டப்பட வேண்டும்.  அய்க்கிய அமெரிக்க தலைமையிலான அய்ரோப்பிய நலன்கள், முன்னுரிமைகளிலிருந்து விலகி நிற்கும் நமக்கானதொரு வெளிஉறவுக் கொள்கையை உறுதி செய்திட வேண்டும்.
 • இந்திய இளைஞர்கள் வஞ்சிக்கப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு ருஷ்யாவிலும் மற்ற நாடுகளிலும் ராணுவ கூலிப்படைகளாக\ ராணுவ உதவியாளர்களாக   அமர்த்தப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் உடனடியாக திரும்ப அழைத்துவரப்பட வேண்டும்.
 • இனவெறிக்கொள்கை, இனப்படுகொலை அரசான இஸ்ரேலுடன் செய்துகொண்டுள்ள ராணுவ, பொருளாதார, தொழிலாளர் உடன்பாடுகளும் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக, சர்வதேச ஆயுதத் தடையை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.
இகக (மா லெ) வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள், 
ஆதரவு தாருங்கள், 
தேர்ந்தெடுங்கள்!
இந்தியா கூட்டணி வெல்லட்டும்!
 
சிபிஐ (எம் எல்) விடுதலை
தமிழ்நாடு மாநிலக் கமிட்டி

3/254 பி, ஜீவா தெரு, வண்டலூர், சென்னை - 48 போன்: 7094551959