வேங்கைவயல் எழுப்பும் கேள்விகள்

வேங்கைவயல் தலித்துகள் குடிக்கும் சமைக்கும் தண்ணீரில் மலம் கலந்த கொடூரச் செயல் வெளி உலகத்துக்கு தெரிய வந்து நான்கு மாதங்களாகி விட்டது. இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. வேங்கைவயலைச் சுற்றி பல இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் உள்ளன. வெளியிலுள்ள வர்கள் வேங்கைவயல் மக்களுடன் கலந்து விடக் கூடாதென்று கவனமாக காவல்துறை சோதனை போட்டுத் தடுக்கிறது. வேங்கைவயல் மக்கள், வெளி உலகத்திலிருந்து துண்டித்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது அரசு செயல்படுத்தும் தீண்டாமை. இது அரசே செய்யும் மனித உரிமை மீறல்.

தலையங்கம்

வேங்கை வயலில் குடி தண்ணீரில் மலத்தைக் கலந்த குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படவில்லை. மாறாக, எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கிறது. வேங்கை வயல் பிரச்சினை வெளியில் வந்தபோது அங்குள்ள கோயிலுக்குள் தலித் மக்கள் செல்வதற்கு மறுக்கப்பட்ட விசயமும் வெளியே வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அந்த மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்கள். அப்போது அதைத் தடுக்க சாமியாடினார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டார்.