பாசிச, இன வெறுப்பு அரசியலை முறியடித்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துவோம்!


மனித வாழ்க்கையில் புலம் பெயர்வு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் துவங்கி, மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம், கண்டம் விட்டு கண்டம் என அது விரிவடைந்து செல்லும் இயக்கப் போக்காக நிலை பெற்றிருக்கிறது. தேச எல்லைகளைக் கடக்கும் போது அது கட்டுப்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாகி விடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நாட்டிற்குள் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்ல, பணிபுரிய, தொழில் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. சில வடகிழக்கு மாநிலங்கள் வேலைக்கு வருபவர்களை ஒழுங்குபடுத்த உள் நுழைவுச் சீட்டு முறையை கொண்டுள்ளன.