மனித வாழ்க்கையில் புலம் பெயர்வு என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் துவங்கி, மாநிலம் விட்டு மாநிலம், தேசம் விட்டு தேசம், கண்டம் விட்டு கண்டம் என அது விரிவடைந்து செல்லும் இயக்கப் போக்காக நிலை பெற்றிருக்கிறது. தேச எல்லைகளைக் கடக்கும் போது அது கட்டுப்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டதாகி விடுகிறது. இந்தியாவை பொறுத்தவரை நாட்டிற்குள் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்ல, பணிபுரிய, தொழில் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது. சில வடகிழக்கு மாநிலங்கள் வேலைக்கு வருபவர்களை ஒழுங்குபடுத்த உள் நுழைவுச் சீட்டு முறையை கொண்டுள்ளன.
தொழில்துறையில் முன்னேறிய மாநிலங்களை நோக்கி இந்தியாவின் பிற மாநிலத் தொழிலாளர்கள் பிழைப்பு தேடி செல்வது நீண்ட காலமாக நடந்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களுக்கு சென்றனர். மலேசியா, பிஜி தீவு, ஸ்ரீலங்கா நாடுகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களாக சென்றிருக்கின்றனர். தஞ்சை டெல்டா பகுதி விவசாயத் தொழிலாளர்கள் கூட கூலி அதிகம் என்பதால் விவசாய வேலைகளுக்கு மாதக்கணக்கில் கேரளா செல்வது இன்றளவும் நடந்து வருகிறது. வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் திறன் பெற்ற தமிழக தொழிலாளர்கள் பணி நிமித்தம் சென்று வருகிறார்கள். இந்தியாவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலங்கள் வரிசையில் உள்ளது கட்டுமானம், ஜவுளி, ஆட்டோமொபைல் போன்ற தொழில் துறைகளிலும் மருத்துவமனை, ஓட்டல் போன்ற சேவைத் துறைகளிலும் உடல் உழைப்புத் தொழிலில் வட மாநில, வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர். குறைந்த கூலி கொடுத்து, பணி நேரத்தை நீட்டித்து, சமூகப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் முதலாளிகள் பெரும் சுரண்டலில் ஈடுபடுகிறார்கள். கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாநிலத் தொழிலாளர்கள், முக்கியமாக தமிழ்நாட்டின் உள்கட்டுமான பணிகளில், இதர உற்பத்தி ஆலைகளில் பணிபுரிந்து வருகின்றனர் என ஒரு மதிப்பீடு உள்ளது.
ஏஐசிசிடியு உட்பட தமிழ்நாட்டின் இடதுசாரி தொழிற்சங்கங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் களின் கௌரவமான கூலி, பணி நிலைமைகள், சமூக பாதுகாப்புக்கான பிரச்சார இயக்கங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம் 1979 காறாராக அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும் வருகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தில் தொழிலாளர் களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி முதல் குடியிருப்பு, குழந்தைகள் காப்பகம், குழந்தைகளுக் கான கல்வி வரை உத்தரவாதம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஏட்டளவில் உள்ள சட்டமும் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாக்கத்திற்கு வரும்போது என்னவாகும் என்று தெரியவில்லை. இப்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வந்திருப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொது விநியோகத் திட்டத்தை பயன்படுத்த முடியும்.
இந்த நாட்டை கட்டி எழுப்பும் தொழிலாளர் களுக்கு, மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் தொழிலாளர்களுக்கு கவுரவமிக்க வாழ்க்கையை உத்தரவாகம் செய்வதற்கு பதிலாக இன்று பல பெரு நகரங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் குடியிருப்புகளை அரசாங்கமே புல்டோசர் கொண்டு இடித்து காலி செய்வது நடந்தேறி வருகிறது. ரயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற இவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து தண்டவாளங்கள் போடுவது, பாலங்கள் கட்டுவது, மின்தடப்பாதை அமைப்பது, மெட்ரோ ரயில் கட்டமைப்பு திட்டங்கள் என சகல வேலைகளையும் செய்கிறார்கள். ஆனால் இவர்களோ ஆடு மாடுகளை போல் சொந்த ஊருக்கு ரயில்களில் பயணிக்கும் நிலையே உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வந்து செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பான ரயில் பயணத்தை உத்தரவாதம் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். அதைச் செய்ய தவறுவதால் முன்பதிவு செய்த பயணிகளுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிடையிலான பிரச்சனையாக அது மாறுகிறது.
தமிழ்நாட்டில் வட நாட்டுக்காரர்களால் தமிழர்களின் வேலை பறிபோகிறது என்ற குரல்கள் ஒலிக்கின்றன. தமிழக உழைப்பாளி மக்கள் கூடுதல் வருமானம் தரும் திறன் மிகுந்த வேலைகளை நோக்கிச் செல்கிறார்கள் அல்லது அபரி மிதமாக வளர்ந்துள்ள ஓலா, உபர், அமேசான், சோமட்டோ என சேவைத் துறைகளில், வேலை நேரத்தில் இலகுத் தன்மை உள்ள பணிகளை தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்தபட்சக் கூலி சட்டத்திலிருந்து பல்வேறு நலச் சட்டங்களை அனைவருக்கும் கறாராக அமல்படுத்து வதற்கு குரல் கொடுப்பதற்கு பதிலாக, வட மாநிலத்தவர் வருகையால் கூலியின் மட்டம் குறைகிறது என பார்க்கும் தவறான போக்கு நிலவுகிறது.
இன்னொரு பக்கம் நிலையான வருமானம் தரும் ரயில்வே, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டு தமிழர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. அதனால் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் 90% பணிகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற ஜனநாயக குரல் அனைத்து இடது முற்போக்கு சக்திகளின் ஆதரவை பெற்று முன்னுக்கு வந்துள்ளது.
இந்தப் பின்னணியில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் விதமாக பல வகைப்பட்ட வலதுசாரி பிற்போக்கு சக்திகள் உழைக்கும் மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட துவங்கி யுள்ளனர். தமிழ்நாட்டில் இந்தி பேசும் பீகார் மாநில தொழிலாளர் மீது தாக்குதல் என போலி காணொளிக் காட்சிகளை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கிய காவி பாசிச சக்திகள் இன்று அம்பலப்பட்டுப் போய் உள்ளனர். விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் ஆதாரத்தோடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காவி பாசிச சக்திகள் கொரோனா காலத்தில் புலம்பெயாந்த தொழிலாளர்களை நடத்திய விதம் நாடறிந்தது. அப்போது கூட தமிழகத்திலிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணவுக்கு, இருப்பிடத்திற்கு, அவர்கள் கண்ணியமான முறையில் ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு என்று எல்லா வகையிலும் இகக (மாலெ), ஏஐசிசிடியு உள்ளிட்ட உழைக்கும் மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ள அனைவரும் களப்பணி ஆற்றியதை பார்த்தோம். பொய், புரட்டு, விஷம பிரச்சாரம் என எல்லா தகிடுதித்தங்களையும் செய்து, மொழி ரீதியான வெறுப்புணர்வை தமிழக மக்களுக்கு எதிராக திருப்ப வலதுசாரி பாசிச சக்திகள் எடுக்கும் முயற்சி பலனளிக்காது.
நாணயத்தின் இன்னொரு பக்கமாக தமிழர் பெருமிதம் பேசி இனவாத வெறுப்பு அரசியலை தமிழ் மண்ணில் விதைக்க எடுக்கப்படும் முயற்சிகளையும் தமிழக உழைக்கும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒரு சில குற்றச் சம்பவங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் குற்றக் கும்பல் போல் சித்திகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது.
இந்திய உழைக்கும் மக்களின் துன்ப துயரங்களுக்கு காரணமான பாஜக, தமிழக மக்களை இந்தி பேசும் மாநில தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்தி எப்படி ஆதாயம் தேட முடியாதோ அதுபோல் இனவாத வெறுப்பு அரசியலைக் கொண்டு தமிழர் வாழ்வியலை தமிழர் பண்பாட்டை பாதுகாக்க முடியாது.
உழைக்கும் மக்களின் ஒற்றுமையை கட்ட மைத்து பாசிச சக்திகளை, இனவெறுப்பு அரசியல் சக்திகளை வேரறுப்பதன் மூலம் மட்டுமே அனைத்து வகை மேலாதிக்கத்துக்கும் முடிவு கட்ட முடியும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)