வைக்கம் போராட்ட நூற்றாண்டிலும் வரம்பின்றி தொடரும் வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள்

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள், ஈழவர்கள், புலையர்கள், தீயர்கள் நடமாடத் தடை விதிக்கப் பட்டிருந்தது. அந்த மக்களை தடைவிதிக்கப் பட்டிருக்கும் தெருக்களில் 1924 மார்ச் 30 அன்று ஊர்வலமாக அழைத்துப் போகப் போவதாக அன்றைய கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கே.பி.கேசவ மேனன் அறிவிப்பு வெளியிட்டார். அப் போராட்டத்தைத் துவக்கியவர் வழக்கறிஞராக இருந்த டி.கே.மாதவன். தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று இருந்த காலக் கட்டம் அது. அறிவித்தபடி தொண்டர்களுடன் அணி திரண்டனர். அந்தத் தெருவில் சென்று நின்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.