பகுதி-3
10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தல் பரப்புரையில் திமுக மகளிர் நலன் என்ற தலைப்பின் கீழ் 22 வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. இதுதவிர ஸ்டாலின் வாக்கு றுதியாக ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் மாதம் ரூ 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது. மகளிர் வாக்குகளைப் பெறும் நோக்கில் இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மகளிரும் பெருமளவில் வாக்குகள் அளித்ததனால்தான் திமுக ஆட்சிக்கு வரமுடிந் திருக்கிறது.
தேர்தல் வாக்குறுதியாக அளிக்காத ஒன்றிரண்டு புதிய சலுகைகளையும் கூட முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி யிருக்கிறார். உதாரணத் திற்கு அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மகளிரிடையை நல்ல வரவேற்பையும் பெற்றி ருக்கிறது. ஆனால், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் சாதாரண நகரப் பேருந்துகள் குறைவு. எக்ஸ்பிரஸ், எல்எல்எஸ் போன்ற பேருந்துகள் அதிகம். இந்தப் பேருந்து களிலும் இலவச பயணத்தை நீட்டித்தால் நகரப்புறங்களில் உள்ள கட்டுமானத் தொழிலாளர், பிற அமைப்புசார பிரிவுகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் கூடுதலாக பயன்பெற முடியும். திமுக ஆட்சி இத்திட்டத்தை அனைத்து வகை நகரப் பேருந்துகளுக்கும் விரிவபடுத்த வேண்டுமென ஆகஸ்ட் 28 அன்று மதுரையில் நடத்தப்பட்ட அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
அடையாளத்துக்கு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு நிறுத்தி விடாமல், பெண் களின் பொருளாதார, சமூக வாழ்வில் திட்ட வட்டமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடிய நடவடிக்கைகளை திமுக ஆட்சி மேற்கொள்ள வேண்டும்.
1989ல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், பெண்களுக்கு சொத்தில் சமரிமை என்ற சட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ் நாட்டில் கொண்டுவரப்பட்டது. இது மிகப்பெரிய முற்போக்கான நடவடிக்கை என்று பலராலும் பல மாநிலங்களிலும் பாராட்டப் பட்டது. உண்மைதான். ஆனால் அந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது? எவ்வளவுப் பெண்கள் சொத்துரிமைப் பெற்றார்கள் என்று அறிவிக்க வேண்டியது பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சியின் முதல் கடமை. முற்போக்கான சட்டங்கள் வரவேற்கத் தக்கதுதான். ஆனால் அவை சட்ட புத்தகங்களில் மட்டுமில்லாமல் செயலுக்கு வரச்செய்வது ஆட்சிகளின் முக்கியக் கடமையாகிறது.
மற்றுமொரு, பாராட்டத்தக்க நடவடிக்கை பெண்களும் அர்ச்சகராக்கப் பட்டிருப்பது. இது மிகப்பெரிய சமூகநீதிநடவடிக்கை என்று கொண்டாடப்படுகிறது. ஆனால், சமூக வாழ்வின் அனைத்து அரங்கிலும் பெண்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டியது மிக மிக அவசிய மானது. உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு இடம் பெற்றுள்ளனர் பெண்கள். ஆனால், பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆணாதிக்க சமூக மதிப்பீடுகளால் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். நாற்காலிகளில் உட்கார அனுமதிப்பதில்லை. பெண்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு கணவன் மார்களே ஆட்சிநடத்தும் அவலம் அரங்கேறுகிறது. 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியை, பெண்களின் சமத்துவநீதி பெறுவதற்கு பயன்படுத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் எவ்வித பாரபட்சமும் இல்லாத நிலை உருவாக்கிட வேண்டும்.
பெண்களுக்கென பலதிட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, ஈவெரா-மணியம்மை கலப்புத் திருமண உதவித்திட்டம். பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே நடை பெறும் திருமணத்தை கலப்புத் திருமணம் என்று சொல்வதே தவறானது, இழிவானது. சாதி மறுப்புத் திருமணம் என்று சொல்வதே சரியானது. இத்தனை ஆண்டுகால திராவிட ஆட்சிகளில் இந்த தவறுகள் சரிசெய்யப் படவில்லை. மேலும் இந்த திட்டத்தில், எட்டு கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என்றும் சொல்கிறது. ஈ வெ ரா மணியம்மை தாலி அணியாதவர், பெரியார் தாலி மறுப்புக் கொள்கையை பேசியவர். அனைத்து சாதியினரும் பெண்களும் அர்ச்சகராக நடவடிக்கை எடுத்துள் ளதால் பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள் விழுந்துவிட்டதாக மகிழ்வு கொள்ளும் ஆட்சி யாளர்கள், பெரியார் மரபுகளுக்கு பொருந்தாத இந்த அழுக்குகளை துடைத்தெறிய வேண்டு மென்று பெண்கள் கழகம் வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் சாதிமறுப்பு திருமணங்கள் குறிவைத்து தாக்கப்படு கின்றன. இணையர்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். எந்த சமூக சீர்திருத்தங்களையும் அறியாத உத்திரபிரதேசம் சாதிஆதிக்க படுகொலையில் முதலிடத்தில் உள்ளது. முற்போக்கு மரபுகளுக்காக பெருமை கொள்ளும் தமிழ்நாடு சாதிஆதிக்கப் படுகொ லையில் இரண்டாவது இடத்தில் உள்ளது! பதினேழு ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் நீதி வழங்கப்பட்ட கண்ணகி-முருகேசன் படுகொலை வழக்கில் நீதிமன்றம் வரவேற்கத்தக்க தீர்ப்பை வழங்கி யிருக்கிறது. காவல்துறை உள்ளிட்ட அதிகாரி களை கடுமையாக தண்டித்திருக்கிறது. ஒருபக்கம் சாதிமறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தலித்துகளை கொடூரமாக கொலை செய்யும் ஆணாதிக்க சாதிவெறிச் சக்திகள், இன்னொருபுறம் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை யும் மறுத்து தண்டிக்கிறது.
இந்த தீர்ப்பு, மீண்டுமொருமுறை, சாதி ஆதிக்க படுகொலைகளைத் தடுக்கும் தனிச் சட்டத்தின் உடனடி அவசியத்தை வலியுறுத்து கிறது. இந்த தீர்ப்பு பற்றி அரசும் ஆளும் திமுகவும் வரவேற்று கருத்து சொல்லியிருக்க வேண்டும். மாறாக அமைதி காத்திருப்பது சமூகநீதிக் கொள்கை மரபுக்கு பொருத்தமில்லா தது. நீண்டகாலமாக அஇமுபெக உள்ளிட்ட இடதுசாரி பெண்கள் அமைப்புகளும் ஜனநாயக அமைப்பு களும் வலியுறுத்திவரும் இக்கோரிக் கையை ஏற்று சட்டமாக்கிட வேண்டும்.
மாறிவரும் பொருளாதாரச் சூழலில், விவசாயம் பின்னுக்கு சென்று, உழைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலை அளிக்காத நிலையில் ஆண்கள் விவசாயத் திலிருந்து வெளியேறுகின்றனர். மிச்சம் மீதியிருக்கும் உழைப்பு பெண் மயமாகி வருகிறது. மட்டுமின்றி கிராமப்புர வாழ்வில் குடும்பச்சுமை முழுவதும் பெண்கள் தலையில் விழுகிறது. விவசாய வேலையில் அரைகுறை கூலிக்கு வேலைசெய்வது, தேசிய ஊரக வேலைத்திட்டத்தை நம்பியிருப்பது, குழுக் கடன்களை நம்பி கடன்பொறியில் சிக்கிக் கொள்வது, இன்னும் பல விவசாயமல்லாத அரைகுறை வேலைகளுக்குச் செல்வது என்பது பெரும் போக்காக இருக்கிறது. நகர்ப்புரங்களிலும் உழைப்பு பெரிதும் பெண்மயமாகி வருகிறது. உணவு விடுதிகள், பெட்ரோல் பங்க், அனைத்து வகை கடைகள், நிறுவனங்களில் குறைந்த கூலிக்கு பெண்கள் வேலைக்கு வைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
கிராமப்புர, நகர்ப்புர வாழ்வில் பெரும் உழைப்பு சக்தியாக இருக்கக் கூடிய பெண்களை அணிதிரட்டுவது அமைப்பாக்குவது கிளர்ச்சி, பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது என்பது பெண்கள் கழகத்தின் முக்கிய வேலையாக உள்ளது.
பெண்கள் கழகம், தனது பிரச்சார, கிளர்ச்சி நடவடிக்கைகளில் கிராமப்புர தொழிலாளர் சங்கம், ஏஅய்சிசிடியு, மாணவர், இளைஞர் கழகங்களின் ஆதரவு, ஒத்துழைப்பை பெறுவதும் வேண்டும். இந்த நோக்கத்தை எட்டும் விதமாக, கல்வி, பயிற்சி, கலாச்சார நடவடிக்கைகளையும் திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்
பெண்கள் கழகம், முக்கியமாக பின்வரும் அடிப்படை உடனடி கோரிக் கைகளுக்காக குரல் கொடுப்பதுடன் கிளர்ச்சி நடத்தி அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.
1. பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்புத் திட்டங்கள், சம வேலைக்கு சம ஊதியம் திட்டத்தை செயல்படுத்து.
2. தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் உடனுக்குடன் முழுமையான கூலி வழங்கு; பாலியல் அத்துமீறல், அச்சுறுத்தல் நடவடிக் கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. பெண்களுக்கான சமூகநலத்திட்டங்கள் அனைத்தையும் தாமத மின்றி முழுமையாக செயல்படுத்து.
4. கடைகள், நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்ச சம்பள சட்டத்தின் கீழ் சம்பளம் வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு, கழிவறை, ஓய்வறை வசதி, மருத்துவ வசதி, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை செயல் படுத்திட வேண்டும்.
5. ஓய்வூதியம், இலவச மருத்துவ வசதி, விபத்து இழப்பீடு உள்ளிட்டவற்றை அரசு செயல்படுத்திட வேண்டும்.
6. தனியார் நுண் கடன் நிறுவனக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்.
7. தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் தொழில் நடத்த வட்டியில்லாத கடன் வழங்கு.
8. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, எஸ்பிஎஸ் பள்ளி, சிவசங்கர் பள்ளிகளில் மாணவி களுக்கு நடந்த வன்கொடுமை வழக்குகளில் விரைந்து வழக்கு நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
9. பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு களில் விரைந்து நீதி வழங்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்து.
10. சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொண்டோர் மீதான ஆதிக்க படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும்.
11. பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை உறுதிசெய்கிற வகையில், விவசாயத்துறையிலும் தொழில்துறையிலும் தொழிலாளர் ஆதரவு கொள்கைகளை திமுக அரசாங்கம் அறிவித்து செயல்படுத்திட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வென்றெடுக்க போராடுகிற அதேவேளை பெண்கள் விரோத, தந்தைவழிமரபு ஆணாதிக்க, பாசிச தாக்கு தலையும் பெருங்குழும முதலாளித்துவப் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்த்துப்போராட பெண்கள் அணிதிரட்டப்பட பெண்கள் கழகம் தீவிரமாக பாடுபடவேண்டும். சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு பெரியார் மரபுகள் கைவிடப்பட்டு வரும் நிலையில் பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் ஆண்களோடு தோளோடு தோள்நின்று எதிர்ப்பு போராட்டத்தில் முன்னேற அகில இந்திய பெண்கள் கழகம் முன்வர வேண்டும்.
பொருளாதார சுதந்திரமும், பெண் விடுதலை யும் இரண்டு அடிப்ப டையான நோக்கங்களாகும். இந்த நோக்கங்களை வென்றெடுக்கும் திசையில், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் பெருந்திரள் பெண்களை அணிதிரட்டி முன்னேற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)