தலையங்கம்

இல்லம் தேடிக் கல்வி  இல்லாருக்கான கல்வி ஆகாது

தமிழ்நாட்டில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக் கூடங்களைத் திறந்துள்ளார்கள். தென் மாவட்டங்களில் மழையின் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. மேள தாளங்கள், மாலை மரியாதைகள், மத்தாப்பு வெடிகளுடன் குழந்தைகளை  ஆசிரியர்கள் வரவேற்றார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி வரவேற்றார். இரண்டு நாட்களில் தீபாவளி. மீண்டும் சில நாட்கள் விடுமுறைகள். தீபாவளிக்கு முன்பு பள்ளி திறப்புகூட தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணங்களை வசூலித்துக் கொள்வதற்காகத்தான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. பள்ளிகளைத் திறக்கச் சொல்லிவிட்ட நிலையில், கொரோனாவினால் குழந்தைகள் கல்வி கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை இட்டு நிரப்ப என்று சொல்லி “இல்லம் தேடிக் கல்வி” என்ற 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் 27.10.2021 அன்று துவக்கி வைத்தார். அவரும் தரையில் அமர்ந்து குழந்தைகளுடன் பாடம் கவனித்தார். இது எதற்காக-? என்று கல்வியாளர்கள் பலர் கேள்வியெழுப்பி யுள்ளார்கள். தன்னார்வலர்களைக் கொண்டு குழந்தைகளுக்கு மாலை 5 மணி முதல் 7 மணிவரை ஆடல், பாடல், நாடகம் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கப் போவதாகச் சொல்கிறது அரசு. இந்தத் திட்டம் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம்தான், ஆர்எஸ்எஸ்ஸின் சாகாவையே இது புகுத்தும், இது ஆகாது என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். முதல்வர் ஸ்டாலின் விளக்கத்தைத் தொடர்ந்து அவர் தன் அச்சத்தைப் போக்கிவிட்டதாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கல்விக் கொள்கைக்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அது தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார் முதல்வர். இந்த தன்னார்வலர்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் குழுவின் முடிவின்படி பாடம் எடுப்பார்கள். ஆர்எஸ்எஸ் வருவதற்கே இடமில்லை என்று சொல்லப்படுகிறது ஆளுங்கட்சித் தரப்பில். அரசுத் தரப்பிலோ ஆளுங்கட்சித் தரப்பிலோ நாங்கள் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை அல்ல அய்யா பெரியாரின் கொள்கைகளைத் தான் அந்தத் தன்னார்வலர்கள் மூலம் அமல்படுத்துவோம் என்று வெளிப்படையாகக் கூறுவதை எது தடுக்கிறது? இருக்கின்ற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை. அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகம் நியமித்தும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, தரம் உயர்த்தியும் மாணவர்களுக்கு பள்ளிகளில்  இதே கல்வியை ஏன் கற்றுக் கொடுக்கக் கூடாது? தன்னார் வலர்களை நியமித்து அவர்களுக்கு ரூபாய் 1000 கொடுப்பது எதற்கு-? வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டிய பொறுப்பை, பணம் இல்லாத மாணவர்களுக்கு இலவசக் கல்வியை முழுமையாகக் கொடுக்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழிப்பதுதான் இந்த தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்படப் போகும் இல்லம் தேடிக் கல்வி திட்டம். இது தமிழக அரசின் செலவில் கொண்டுவந்தாலும் கூட இது மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையின் வடிவில் குலக் கல்வியை, தனியார்மயத்தை ஊக்குவிப்பது. இன்னும் ‘நீட் ஒழிப்பு’ நீட்டி முழங்குவதாகவே உள்ளது. ஏற்கனவே தமிழக ஆளுநர் ரவி பல்கலைக் கழக துணை வேந்தர்களை அழைத்து ஆர்எஸ்எஸ் பாடத்திட்டங்ளை அமல்படுத்தச் சொல்கிறார். தலைமைச் செயலர் இறையண்பு ஆளுநர் ஆய்வுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை விடுக்கிறார். இந்த நிலையில் இல்லார்க்கு கல்வியை இல்லாமல் செய்யவே இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டம். புதிய மொந்தையில் பழைய கள்!. மோடியின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகச் சொன்னால் மட்டும்போதாது, அதற்கெதிரான காத்திரமான செயலும் வேண்டும். அப்போதுதான் மக்களிடம் உள்ள ஐயப்பாடுகள் நீங்கும்.