நாடெங்கும் தசரா திருவிழா. துர்கா பூசை. பெண் தெய்வங்களுக்கு கொடை விழா. தமிழ்நாட்டில் கூட தசரா சமயத்தில் கோவில்களைத் திறக்க வேண்டும். பக்தர்கள் அம்மனைத் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையேல், தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் என்று முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை அலட்டிக் கொண்டார். திமுக அரசும் அதற்குப் பணிந்துவிட்டது என்றும் சொல்லிக் கொண்டார்பெண் தெய்வங்களைக் கொண்டாடும் பாஜகவினர் ஆட்சியில் உயிருள்ள பெண்கள்  அவமதிக்கப் படுகிறார்கள். பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார் கள். தீயிட்டுக் கொளுத்தப்படுகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரியில், ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் ஆசிஸ் மிஸ்ரா ஒன்பது விவசாயிகளைக் கார் ஏற்றிக் கொன்றான். அந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்த நிருபரும் கொல்லப்பட்டார்அந்த கொலை பாதகச் செயலைச் செய்யக் காரணமான அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்லி அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மாணவர்கள். அந்த மாணவர்களை கொடூரமாகத் தாக்கியது மட்டுமின்றி, இரண்டு பெண் மாணவர்களை, ஸ்ரேயா கபூர் பானர்ஜி மற்றும் நேகா திவாரி இருவரையும் அமித்ஷாவின் கையில் உள்ள டெல்லி போலீஸ் தனியாக அழைத்துச் சென்று ஆடை அவிழ்த்து அவமானப்படுத்தியது மட்டுமின்றி, அந்தரங்கப்பகுதிகளில் மிதித்துச் சித்தரவதை செய்துள்ளது. இதைச் செய்தவர்கள் பெண் காவலர்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. பாசிஸ்டுகள் ஆட்சியில் ஆணானாலும் பெண்ணானாலும் காக்கிகள் எல்லாம் பாசிச எந்திரத்தின் கைப் பொம்மைகள்தான். அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்து விட்டு, இதை வெளியே சொன்னால் விபரீதமாகும் என்றும் மிரட்டியுள்ளது மோடி-ஷா போலீஸ். பாலியல் வன்முறையில் போலீஸ் ஈடுபடுவது புதிதல்ல என்றாலும் பாசிச பாஜக ஆட்சியில் பெண் போலீஸே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம். இதை யாரிடம் சென்று முறையிடுவது?. ஆண்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவதற்கு பெண்கள் தங்கள் உடலமைப்பு தெரியும்படி அணியும் ஆடைகள்தான் காரணம் என்று ஆடை ஒழுங்கு பற்றிப் பேசும் சங்கிகள், கோவிலுக்கு பெண்கள் அங்கம் தெரியா ஆடையுடுத்தித்தான் வர வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கும் பாஜகவினர், இந்த இரு பெண்களிடமும் ஆடையை அவிழ்த்து அந்தரங்கத்தை மிதித்து கொடூரமாக நடந்து கொண்டதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். இந்த அவமானம் அந்த இரு பெண்களுக்கு மட்டுமானதல்ல. இந்தியப் பெண்கள் அனைவருக்கு மானது. பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தால், அதுவும் அமித்ஷா வீட்டு முன்பு செய்தால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லாமல் சொல்லி மிரட்டுகிறது பாசிச பாஜகவின் போலீஸ். பெண் காவலர்களைக் கொண்டே இரு பெண்களையும் மிதித்து அவமானப்படுத்த உத்தரவிட்ட சாணக்கியபுரியின் போலீஸ் உதவிக் கமிஷனர் பிரக்யா ஆனந்த் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அமித்ஷாவும் அஜய் மிஸ்ராவும் உள் துறை அமைச்சர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள். அவர்கள் அந்தப் பொறுப்புகளில் இருந்து உடன் நீக்கப்பட வேண்டும்.