சமீபத்தில் கூடிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்)ன் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்தது.

மோடி-பிஜேபியின் வழியில் திமுகவும் செல்லத் துவங்கி விட்டதோ எனும் கேள்வி இப்போது எழுந்து வருகிறது. ஏனென்றால், தமிழக அரசு சமீபத்தில் சுமார் 17 மசோதாக்களை எந்த வித முன்னறிவிப்பும் செய்யாமல், விவாதமே இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறது. அதில் ஒன்று தொழிலாளர் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் சட்டத் திருத்தம். மற்றொன்று, எந்தவித தங்குதடையின்றி கார்ப்பரேட் முதலாளிகள் நிலம் வாங்குவதை, நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் ஆகும். இது விவசாய வளர்ச்சிக்கும் விவசாயி களுக்கும் எதிரானது ஆகும்.

இத்தகைய திருத்தங்களை, மோடியின் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (code) அமலுக்கு வருமுன்பே, புழக்கடை வழியாக அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதை பிஜேபி ஆளும் மாநில அரசாங்கங்கள் மட்டுமே செய்து வந்துள்ளன. பிஜேபி அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் எங்கும் இப்படியொரு திருத்தம் வரவில்லை. இந்தப் பின்னணியில், பிஜேபியை வலுவாக எதிர்க்க உறுதி பூண்டுள்ளதாக சொல்லும் திமுக ஆட்சியில் இத்தகைய திருத்தம் மேற்கொள்வது, திமுகவும் பிஜேபி பாதையிலேயே செல்வதாக முன்வைக்கப்படும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் தொழிற்சங்கம் முதல் முறையாக துவங்கப்பட்டது. தமிழகத்தில் தான் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை தமிழகத்தில்தான் முதல் முறையாக தோழர் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. அதற்காக அவர் பிரிட்டிஷ் அரசால் நாடுகடத்தபட்டார் என்பது வரலாறு.

அப்படிப்பட்ட போராட்ட மரபும் வரலாறும் பாரம்பரியமும் கொண்ட தமிழகத்தில் மேற்கண்ட திருத்தம் வரலாறைப் பின்னோக்கி தள்ளுவதாகும். எனவே, இந்த தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களை, தொழிலாளர் போராட்டங்கள் காரணமாக, மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறது.

ஆனாலும், அது போதுமானதல்ல. அதை திமுக அரசு திரும்பப் பெறுகிற வரை, சிபிஐ (எம்எல்) போராடும். அவசியப்பட்டால், சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தவும் தயங்காது. மே 1மிகப்பெரிய தொழிலாளர் பேரணியை நாகர் கோயில் தலைநகரில் நடத்துவுள்ளோம்.

அதேபோல, நில சட்டத் திருத்தமும் திரும்பப் பெறப்பட வேண்டும் என கோருகிறது.

இதர 15 திருத்தங்கள், சத்தமின்றி நிறை வேற்றப்பட்டதை, மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என கோருகிறது.

கர்நாடகாவில் நடைபெற்று வரும் தேர்தலில் மோடி அரசை வீழ்த்துவதற்கான தேர்தல் பரப்புரை இயக்கத்தில் தமிழ்நாடு குழு ஒன்று கலந்து கொள்கிறது. பெங்களூரு கே.ஆர்.புரம் மற்றும் கொப்பல் மாவட்ட கனககிரி ஆகிய தொகுதிகளில் சிபிஐஎம்எல் தனது வேட்பாளர் களை நிறுத்தி உள்ளது.

அகில இந்திய கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூலை இரண்டாவது வாரத்தில், ஜூலை 8, 9ல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சிபிஐஎம்எல் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதே போல, மே மாதத்தில், அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் பிரச்சாரப் பயணம் சிவகங்கை துவங்கி சென்னை வரை, டெல்டா மாவட்டங்கள் ஊடாக, நடத்தப் பட இருக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டக் கூலியை நாளுக்கு ரூ 500 என வழங்கிடு, நிதி ஒதுக்கீட்டை அதிகரித்திடு, ஆதார் மற்றும் போட்டோ எடுப்பதை கட்டாய படுத்தாதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத் துவதாக அந்த பிரச்சார பயணம் அமையும்.

(குறிப்பு: மே 1 அன்று தமிழ்நாடு அரசு 12 மணி நேர வேலை சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற்றுள்ளது)