இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் தியாகிகளின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு மே 22 ல், தூத்துக்குடியில், சுற்றுச்சூழல் விரோத, நாசகர  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் நடத்திய பேரணி அணிவகுப்பு மீது, தமிழ்நாடு  காவல்துறை மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கூட்டாக
நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர்கள் கொல்லப்பட்டனர்; நூற்றுக் கணக்கானவர்கள் காயமுற்றனர். கார்ப்பரேட் பெருநிறுவனமான வேதாந்தாவிற்கு ஆதரவாக நடைபெற்ற  இந்த அரச வன்முறை மக்களிடையே  
பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

அதற்குப் பிறகு, இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீண்ட நெடிய ஆய்வுகள், நேர்காணல்கள் மற்றும் விசாரணைகளுக்குப் பிறகு, ஆணையத்தின் அறிக்கை 18.8.22 ல்  பொதுவெளியில் வெளியானது. இந்த
அறிக்கை அதிர்ச்சி தரும் பல்வேறு  விவரங்களை அம்பலப்படுத்தியது.

√ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் கிளர்ச்சி ஏற்படாமலே, தேவையில்லாமலேயே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு நின்ற போலீசார் சுட்டுள்ளனர் ; தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
√ஒரு அடியாள் போல செயல்பட்டு 4 இடங்களுக்குச் சென்று , 17 ரவுண்ட் சுட்டுள்ள போலீஸ்காரர் சுடலை கண்ணு மற்றும் அப்போது அவருடன் இருந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மகேந்திரன், அருண்சக்திகுமார், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்ட 17 காவல்துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
√துணை தாசில்தார்கள் சேகர், சந்திரன், கலால் அலுவலர் கண்ணன் ஆகியோரிடம் போலீசார் விருப்பம்போல உத்தரவு பெற்றுள்ளனர், துணை தாசில்தார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 
√தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே மிக அலட்சியமாக அணுகிய அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார்; வீட்டில் இருந்து கொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார்.

இப்படியாக அறிக்கை விரிவான குற்றச்சாட்டுகளை மாவட்ட  ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை மீது முன்வைத்துள்ளது.

*அறிக்கை பரிந்துரைகளை அமலாக்க தயக்கம் ஏன்?*

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை பொதுவெளிக்கு வந்து 9 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும் அதன் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டுகிறது?

கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனத்தால், மக்கள் சந்தித்த துன்ப துயரங்களை கணக்கில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு மீது தமிழ்நாடு அரசு அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முடிவுகளை தாமதமின்றி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் .

1) சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள், காவலர்கள்  அவர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.


2) ஆட்சியாளர்  அலட்சியமாகவே செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருவரும் பொறுப்பாக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


3) அரசு அதிகாரிகள்கள், காவல்துறை அதிகாரிகளை கையாட்கள் போல் பயன்படுத்திய, வேதாந்தா ஸ்டெர்லைட் பெருமுதலாளி அனில் அகர்வாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.