உரையாடல்

கேள்வி: வணக்கம். உங்களப் பத்தி, வாழ்க்கை, வேலை, பிரச்சனைகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

பதில்: வணக்கங்க, ஏன்னோட பேரு லட்சுமி. நான் கோவை கார்ப்பரேசன்ல பத்து வருசமா தூய்மைப் பணியாளரா வேலை செய்கிறேன். தற்போது சரவணம் பட்டி 10வது வார்டுல வேலை செய்யுறேன். நான் வேலைக்கு சேர்ந்தப்ப ஒரு நாளைக்கு ரூபாய் சம்பளமா 120 கொடுத்தாங்க. கையில் பணமா கொடுப்பாங்க. சரியான நேரத்திலயும் முழுசாவும் கிடைக்காது. போராட்டத்துக்கு அப்புறமாதான் ஈ.எஸ்.அய், பி.எப். புடுச்சாங்க. சம்பளத்தை பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி பேங்க் மூலமா கொடுக்கிறாங்க. ஈ.எஸ்.அய் பேருக்கு மட்டுமே இருக்கு. அதுல நானு இதுவரைக்கும் வைத்தியம் பாத்துக்கிட்டதுல்ல. பி.எப். புடிச்சாலும் பணம் எடுக்க முடியல. அதுல நெறைய பிரச்சனை இருக்கு. லாக் பண்ணி வச்சதாகவும் சொல்லுறாங்க. இவ்வளவு வருசமா வேலை செஞ்சும் இன்னைக்கு பிடித்தம் போக ஒரு நாளைக்கு ரூ.412 மட்டும்தான் கொடுக்கறாங்க. வாரத்தில் எல்லா நாட்களும் வேலை வாங்குவாங்க, போன வருசம் நடந்த போராட்டத்துக்கு பின்னாடி தான் ஒரு நாளு லீவு கிடைச்சது. எனக்கு 3 பெண் பிள்ளைங்க, ஒரு பையன். என்னோடகணவர் 3 வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. அவருக்கு உடம்பு சரியில்லாத காலம் பூராவும் குடும்ப வருமானம் போதல. அவரது மருத்துவச் செலவுக்கு கடன் வாங்கித்தான் சாகற வரைக்கும் செலவு செஞ்சோம். எனது மூணு பெண் பிள்ளைங்களும் பள்ளி படிப்பு வரைதான் படிக்க முடிஞ்சது. எனது மகனை வக்கீல் படிக்க வைச்சேன். நான் அதிகாலைல வேலைக்கு செல்வதால் என் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் போது வீட்டில் இருந்து அனுப்பனதே இல்லை. சொந்த வீடு இல்லை. வாடகை வீடுதான். சேமிப்பு என்று எதுவும் இல்லை. எனது மகள்களின் திருமண செலவுக்கு சுய உதவிக்குழு கடன், கந்துவட்டிக்கு கடன்வாங்கி தான் திருமணம் முடிச்சேன். இந்த கடன்களை எல்லாம் மாதா மாதம் கட்டிக் கொண்டே இருக்கிறேன். வேலைக்கு காலைல போகும் போது ஷேர் ஆட்டோவிலதான் போவேன். வார்டுல கையெழுத்து போட்டுட்டு பஸ் ஏறிதான் வேலை செய்யும் எடத்துக்குப் வோவேன். காலைல பிஸ்கட் சாப்பிட்டுட்டுதான் வேலையை ஆரம்பிப்பேன். காலை உணவு கையில காசு இருந்தா கடையிலே சாப்பிடுவேன். காசு இல்லன்னா பட்டினிதான். வேலைக்குப் போகிற இடங்களுக்கு சாப்பாடோ தண்ணியோ எடுத்துட்டுப் போகமுடியாது. வேலைப் பகுதியில் உள்ள வீட்டிலதான் பழைய பாட்டில்ல தண்ணி தருவாங்க. அது காலியாயிடுச்சின்னா வீடுகள்லதான் தண்ணி கேட்போம். வீட்டுக்காரர்கள் பாட்டில தொடாமதான் தண்ணி தூக்கி ஏத்துவாங்க. குப்பைகள சில பேருதான் பிரிச்சுத் தருவாங்க. பல பேரு பிரிக்காமதான் தருவாங்க. அதையெல்லாம் வெறும் கையிலதான் நானே பிரிக்கனும். பாதுகாப்புக்கு எதுவும் கிடையாது. கையுறை கூட இரண்டுக்கு ஒன்னு அல்லது பெரிய அதிகாரிகள் வரும் போது போட்டோவுக்காக ஒன்னு தருவாங்க. 

எனக்கு தெருக்களை கூட்டுறது அல்லது தள்ளு வண்டியில போய் குப்பைகளை சேகரிப்பது அல்லது சாலைகளின் ஓரத்தில் உள்ள குப்பை மண்களை பெருக்குவது, சாலையின் நடுவே உள்ள டிவைடர் ஓரத்திலுள்ள மண்ணைக்கூட்டி அள்ளுவது அல்லது லாரிகளில் குப்பைகளை ஏத்துற வேலைகளை கொடுப்பாங்க.டிவைடர் மண் சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்படுமோ என்ற பயத்தோடதான் வேலை பாக்கணும். அப்படி விபத்தும் ஏற்பட்டிருக்கு. வேலைப்பார்க்கிற இடத்தில பொதுக் கழிப்பிடங்கள் இல்லையென்றால் மிகவும் வேதனைதான்.

இளம்பிள்ளைங்க மாதிரி தூங்கி எழுந்து உடனே நான் வேலைக்குபோகமுடியாது. விடியறதுக்கு முன்னாடியே (4 மணி) எழுந்து குளிச்சி முடிச்சி வீடு வாசல் சுத்தம் செஞ்சி சமைக்க வேணும். அப்புறமாதான் வேலைக்கு போகனும். இதுக்குமுன்னாடியெல்லாம். 5.45 மணிக்கு அட்டன்டன்ஸ் இருந்துச்சு. இப்போ போராடியதுக்கு பின்புதான் ஏழு மணிக்கு

அட்டன்டன்ஸ் ஆரம்பிக்குது. காலைல வேலைக்குச் சென்று வேலை முடிந்து வீடு திரும்ப பயண செலவு, டீ. உணவு என நாள் ஒன்றுக்கு ரூ.150 வரைக்கும் செலவிட வேண்டி உள்ளது. சம்பளத்தைத் தவிர வேறு எந்த உதவித் தொகையும் கொடுப்பது கிடையாது.

வேலை முடியறதுக்கு வேலையை பொருத்து மதியம் 2 மணிக்கு மேலேயும் ஆயிடும். வீட்டுக்கு வர 4 மணிக்குமேலேயும் ஆயிடும். வீட்டுக்கு வந்ததும் துணிகளை துவைத்து பாத்திரம் தேய்த்து சமைச்சி படுக்கப் போகும் வரை வீட்டு வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். பொதுவா 5 மணி நேரம்தான் தூக்கம் நான் வேலைக்கு சேர்ந்தப்ப நிரந்தரம் செய்வாங்கன்னு எதிர்பார்த்து சேர்ந்தேன். முன்னாடி இருந்த அதிமுக ஆட்சியும் நிரந்தரம் செய்யல. இப்ப இருக்கும் திமுக ஆட்சியும் நிரந்தரம் செய்யல. நானும் மத்த மக்களைப் போல நல்ல சம்பளத்துல கவுரவமா வாழணும்தான் நினைக்கிறேன். வாங்குற காசில அதெல்லாம் எட்டாத கனவுதான். போராடுனா நிரந்தரம் கெடைக்கும் என்கிறாங்க. எப்போ நடக்கும் போராட்டம், எப்ப நிரந்தரம் கிடைக் கும்னும் தெரியல. எல்லாம் கனவுகளாகவே இருக்கிறது.

நாங்கள் அதற்காகத்தான் தொழிலாளர்களை சங்கமாக்கமுயற்சிக்கிறோம். சங்கமாக்கி போராடினால் எல்லா கனவுகளும் நனவாகும். தூய்மைபணியாளர் லட்சுமி: நன்றிங்க. இன்னைக்கு ஞாயிறு லீவு நாள். அதனாலதான் இந்த நேரம் கூட உங்ககூட பேச முடிஞ்சது. இன்னும் நிறைய இருக்கு. மாசாமாசம் பொம்பளங்க நாங்க படுற அவஸ்வத. மழை வெயிலுன்னு நிறைய இருக்கு பேசறக்கு.