பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தவறி விட்டது மோடி அரசாங்கம். ஆனால், பீகார் அரசு முன்சென்று, மாநில மக்கள்தொகையின் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தடுப்பதற்காக பாஜக எடுத்த தீவிரமான முயற்சிகளையும் முறியடித்து பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அந்த கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்களின் ஒட்டுமொத்த சாரம்சத்தையும் காந்தியின் 154வது பிறந்த நாளன்று பொதுவெளியில் வெளியிட்டுவிட்டது.

அந்தக் கணக்கெடுப்பின் சமூக-பொருளாதார விபரங்கள் கிடைக்கக் காத்திருக்க வேண்டும் என்றாலும்கூட, ஏற்கனவே வந்துள்ள கணக்கெடுப்பின் சுருக்கமானது பீகார் சமூகத்தில் உள்ள சாதி-சமுதாயக் கலவை குறித்த ஒரு ஆழமான பார்வையை நமக்கு வழங்குகிறது. சங்கப் பரிவாரத்தின் பரப்புரைகளில், அவர்களுக்கு மிகப் பிடித்தமான, முஸ்லீம் மக்கள்தொகை அளவின்றி அதிகரிக்கிறது என்பதும் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவு கிறார்கள் என்பதும்தான் சுற்றிச் சுற்றி வருகிறது. சங்கிகளின் இந்தப் பரப்புரையை கணக்கெடுப்பு முற்றிலுமாக நிராகரிக்கிறது. முஸ்லீம் மக்கள்தொகையானது அதே 17 சதவீதத்திலேயே சுழன்று கொண்டிருக்கிறது எனவும் காட்டுகிறது.

கணக்கெடுப்பு வெளிப்படுத்திய சாதிவாரியான விவரங் களானது, நாடு தழுவியளவில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை மறுக்கவே முடியாத அளவிற்கு நம்பிக்கையூட்டுகிறது. அதன் மூலம் இட ஒதுக்கீடுக் கோட்பாடு அவசரமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் வழிவகுக்கிறது. பீகாரில் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 64 சதவீதம் என்றும் பொதுப் பிரிவினர் 16 சதவீதத்திற்கும் குறைவு எனக் கணக்கெடுப்பு காட்டுகிறது. ஆனால், இட ஒதுக்கீடு கொள்கையானது, இந்த எண்ணிக்கைச் சமன்பாட்டிற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.

தற்போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கும் 27 சதவீத இட ஒதுக்கீடானது மொத்த இதர பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. அதற்கு மாறாக, பொதுப் பிரிவினர் 10 சதவீத இட ஒதுக்கீட்டை உத்தரவாதமாக அனுபவித்து வருகின்றனர். (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு என்ற பெயரில் இது முழுவதும் பொதுப் பிரிவினருக்கானதாகவே உள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் இந்த ஒதுக்கீட்டில் உரிமை கோர முடியாது). இந்த 10 சதவீதத்தோடு, பொதுப் பிரிவு இடங்களையும் பெறுவதற்கான அளவற்ற வாய்ப்பை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். 

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி தரவுகளையும் குறிப்பாக சமூக-பொருளாதார நிலைமைகள் பற்றிய தரவுகளையும் சேகரித்தது. ஆனால், அது வெளியிடப்படவில்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்து 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு அதைச் செய்யாமல் தன் கடமையிலிருந்து தவறிவிட்டது. அது புள்ளிவிவரங்களில் ஒரு மாபெரும் பின்னடைவையும் வெற்றிடத்தையும் ஏற்படுத்தி விட்டது. அது வளங்களை நியாயமான முறையில் ஒதுக்கீடு செய்வதையும் சமூக சமத்துவத்தை அடைவதற்கான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்வதையும் பாதித்து விட்டது. சாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம் மற்றும் இடஒதுக்கீடு கொள்கையை பகுத்தறிவிற்கு உகந்ததாக மாற்றியமைக்க வேண்டிய தேவை குறித்து இதை விடவும் அழுத்தமாக கூறிட முடியாது.

இட ஒதுக்கீட்டு கொள்கையின் இந்த முரண்பட்ட தன்மையை வைத்துக் கொண்டு மோடி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. பட்டியலின மக்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பெரும் பிரிவினர் இட ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட யதார்த்தம், பரவலாக உள்ள பொதுப்புத்தி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, இட ஒதுக்கீடு கோருபவர்களைத் துண்டாடும் ஒரு வக்கிரமான "சமூக பொறியியல்" முன்மாதிரியை பாஜக உருவாக்கியது. இட ஒதுக்கீட்டிற்கு தேவையான இடங்களை விரிவாக்குவது, அதிகரிப்பது, அதன் அமுலாக்கத்தை மேம்படுத்துவது என்பதற்கு மாறாக, பல்வேறு குழுக்களை முன்நிறுத்துவது, தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களை உள்வாங்கிக் கொள்வது என்னும் அடிப்படையில் பாஜகவின் சமூக பொறியியல் முன்மாதிரி செயலாற்றுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்ட சிறப்புத் தொடரின் போது உயர் அதிகாரிகள் மட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் இல்லை என்று சுட்டிக்காட்டிய விவாதத்தின் போது, பாஜகவில் எத்தனை பிற்படுத்தப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசி அந்த விவாதத்தை அடக்க முயற்சித்தார் அமித்ஷா.

மோடி ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த பிரதமர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு பட்டியல் சமூகத்தவர், தற்போதைய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒரு பழங்குடியினத்தவர் என கூறி அவர்களைக் காட்சிப் பொருளாக்கும் பாஜக, அந்தப் பிரிவு மக்களுக்கு அதிகாரம் வழங்கி இருப்பதன் சின்னமாக அவர்களைக் காட்டிக் கொள்ளும் பாஜக, பட்டியல், பழங்குடி மக்கள், பிற்படுத்தப் பட்டோருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கி இருப்பதாக பீற்றிக்கொள்ளும் பாஜக, இட ஒதுக்கீட்டு முறையைப் பின்னுக்குத் தள்ளுவதில் எல்லா வழிகளிலும் மும்முரமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் இடஒதுக்கீடு கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் மிகப்பெரிய பின்னடைவுகளும் ஓட்டைகளும் இருக்கும் போதிலும்கூட, இடஒதுக்கீட்டை ஓரம்கட்டி வைத்து விட்டு அதைத் தாண்டி முன் செல்லும் வழியைக் கண்டறிந்திருக்கிறது பாஜக. உயர் அதிகாரிகளை நேரடியாக வேலைக்கு அமர்த்தும் (lateral entry) கொள்கையின் மூலம், ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தியல் மேலாண் மையையும், சலுகைபெற்ற சமூகப் பிரிவினரின் ஆதிக்கத்தையும் உத்தரவாதம் செய்யும் விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைக் கொண்டு அதிகாரவர்க்கத்தின் உயர் மட்டம் நிரப்பப்பட்டிருக்கிறது. கண்மூடித்தன மான தனியார் மயமாக்கம் தடையேதுமின்றி விரிவாக்கப்படு வதனால், வழக்கமாக கிடைக்க வேண்டிய அரசு வேலைவாய்ப்பு என்பது அருகிப் போய்விட்டது. உயர் கல்வி அரங்கத்திலிருந்து திட்டமிட்ட விதத்தில் வெளியேற்றப்படுவதன் மூலம் உரிமை மறுக்கப்பட்ட மக்கள் வாய்ப்பு பெறும் திறன் பலவீனப்படுத்தப்படுகிறது.

பெண்கள் இடஒதுக்கீடு பிரச்சனையில் பாஜக ஆடிய அருவருக்கத்தக்க அரசியல் ஆட்டம் ஏற்கனவே அம்பலப்பட்டுப் போயிருக் கிறது. சங்கப் பரிவாரத்தின் கருத்தியல், அரசியல் சதியாகிய, மனுவாத கருவுக்கு சவால் விட வேண்டிய தேவையை பீகார் சாதிவாரி கணக் கெடுப்பு அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறது. நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு கட்டமைப்பை விரிவானதாக்கிட வழிவகுத்திடும். மேலும் பொதுத்துறை புதுப் பித்தலை உத்தரவாதப்படுத்தக்கூடிய, மறுதிசை வழிப் படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கை மற்றும் கல்வியை, சுகாதாரத்தை தனியார்மய மாக்கும் கொள்கைகளை முற்றிலுமாகக் கைவிடுவது ஆகியனதான், இந்திய நாட்டின் கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள் தங்கள் சமூக நீதியை, பொருளாதார நீதியை வென்றெடுத்து முன்செல்வதற்கான பாதையாக இருக்கும். மோடி ஆட்சியை அரியணையிலிருந்து அகற்றுவது மட்டுமே, இத்திசைவழியில் செல்வதற்கான முதல் தீர்மானகரமான நடவடிக்கையாகும்.