ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறுபட்ட இரண்டு எதிரெதிர் காட்சிகளை வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான கடும் வெறுப்பு இயக்கத்தின் மீது சவாரி செய்து ஜார்க்கண்டை வெற்றி கொள்ளலாம் என்ற பாஜகவின் தீவிரமான முயற்சி மாபெரும் தோல்வியைத் தழுவியது. ஆனால் மகாராஷ்டிராவில் அந்தக் கட்சி மக்களவை தேர்தல்களில் பெற்ற தோல்வியை வெற்றியாக மாற்றுவதை ஒருவாறு சாதித்து விட்டது. மேலும் அது பெற்ற வெற்றியின் அளவு எந்த ஒரு எளிய விளக்கங்களையும் மீறுகிறது.