இந்த ஆண்டு நமது குடியரசு 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய ஆண்டு தொடங்கும் போது, தீர்மானகரமான 2024 தேர்தல்களுக்கு இன்னும் சில வாரங்களே மீதமிருப்பதை நாமறிவோம். பத்தாண்டுகளுக்கு முன்பு, அச்சே தின் அல்லது நல்ல நட்களை நோக்கி அழைத்துச் செல்வேன், அனைத்து கருப்புப் பணத்தையும் திரும்பக் கொண்டு வருவேன், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி பேர்களுக்கு வேலைகள் உருவாக்குவேன் என்ற வாக்குறுதிகளோடு நரேந்திர மோடி அதிகாரத்திற்கு வந்தார். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவேன், 2022க்குள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நல்ல உறுதியான வீடுகள் கட்டித் தருவேன் என அவர் வாக்குறுதி அளித்ததால் பரவலான இந்தியர்கள் 2019இல் அவருக்கு இரண்டாவது வாய்ப்பையும் வழங்கினர். தற்போது 2024 தேர்தல்களுக்கு முன்னதாக மக்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதிகளும் அப்பட்டமான கேலிக்கூத்தாக மாறிவிட்ட போது, பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸூம் அயோத்தியின் ராமர் கோவிலை தங்களது மிகப்பெரிய சாதனையாக காட்சிப்படுத்தி இராமரின் பெயரில் உங்களுடைய வாக்குகளை கேட்பதில் சுறுசுறுப்பாக செயல்படுவது மக்களுக்கு இழைக்கப்படும் குரூர அவமதிப் பாகும்.

பல தலைமுறைகளைத் தாண்டியும் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களைக் கவர்ந்ததாக இராமாயணம் திகழ்கிறது. உண்மை, நீதி, அனைவருக்குமான நன்மையின் புகழ்மிகு இந்திய உருவகமாக எப்போதும் ராமராஜ்யம் அழைக்கப்படுகிறது. பிரிவினைவாதம், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை முன்வைக்கிற நவீன 21ஆம் நூற்றாண்டு ராமராஜ்யத்தின் நுழைவாயிலாக அயோத்தியின் ராமர் கோவில் இருக்கப்போகிறதா? பத்தாண்டு கால மோடி அரசாங்கமானது நம்மை சிக்கவைத்துள்ள அனைத்து மட்ட நெருக்கடியின் யதார்த்தத்தைக் காண்பதிலிருந்து, கண்கவர் காட்சியாகப் போகும் ராமர் கோவிலின் தொடக்க விழா நமது கண்களை குருடாக்காமல் இருக்கட்டும். உலகின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு அரசியல் சாசன சட்டம் உறுதியளித்துள்ள நவீன மதச்சார்பற்ற ஜனநாயகத்தை கேலிசெய்கிற, ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சமிக்ஞைகளை நாம் புறக்கணிக்காமல் இருக்க வேண்டும்.

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை இடித்த செயல்,இந்திய அரசியல் சாசன சட்டத்தை அருவருக்கத்தக்க விதத்தில் மீறியதாகும் என 2019ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறியது. இருந்த போதிலும் வழிபடும் இடத்தின் மீதான தாவா என்றென்றைக்கு மாக முடிவுக்கு வந்துவிடும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் காலத்திற்கு அது இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் அந்நிலத்தின் உரிமையை கோயிலின் அறக்கட்டளைக்கு அது வழங்கியது. ஆனால் சங்கிப் படையணி அத்தகைய மோதல்களை நாடு முழுவதும் விரிவாக்க விரும்பு கிறது. அனைத்து வழிபாட்டு இடங்களும் ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்தது போலவே தொடர்ந்து நிலைத்திருக்கும் என உத்தரவாதம் வழங்கிய 1991 வழிபாட்டு இடங்கள் சட்டத்தை நீக்கவும் அது விரும்புகிறது. மேலும் இன்றைக்கு நடந்து கொண்டிருப்பது போல, அயோத்தியின் கோயிலை அரசின் முதன்மை செயல்திட்டமாக்கச் சொல்லி மோடி அரசாங்கத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்கவுமில்லை.

பொதுப் போக்குவரத்து, பொதுத்துறை நிறுவனங்களாகட்டும், அல்லது கல்வி, உடல்நலம் போன்ற அத்தியாவசிய பொது சேவைகளாக இருக்கட்டும், அடிப்படையில் பொதுவாக இருக்க வேண்டிய இவையனைத்தையும் ஒட்டு மொத்த மாகவோ அல்லது சிறிது சிறிதாகவோ மோடி அரசாங்கம் தனியார்மயமாக்குகிறது. மேலும் ஒரு குடிமகன்/குடிமகளின் முற்றிலும் தனிப்பட்ட விசயமான மதம், மத நம்பிக்கை அல்லது உணர்வை அரசாங்கம் ஒட்டுமொத்தமாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங் கத்தின் பிரதம அமைச்சர், தானொரு மதகுரு போல நடந்து கொள்கிறார்; மக்களுக்கும் அவர்களுடைய நாடாளுமன்றத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய வராக இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட தெய்வீகப் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்துகிறார். இது ஜனவரி 26, 1950 இல் சுதந்திர இந்தியா தனக்குத் தானே பிரகடனப்படுத்திக்கொண்ட நவீன குடியரசின் அடிப்படை கருத்தையே ஒட்டுமொத்தமாக மறுக்கும் செயலாகும்.

பல்கலைக்கழகங்களிலிருந்து ரயில் நிலையங்கள் வரை எல்லா இடங்களிலும் மக்களின் வரிப்பணத்தை செலவழித்து மோடியுடன் செல்பி எடுக்க இடங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். அரசாங்கத்தின் பரப்புரை மட்டுமே நிரந்தர அடிப்படையிலானது. மற்றவை அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலேயே செயல் படுத்தப்படுகின்றன. நிரந்தர வேலைகள் என்ற கருத்தே இந்திய இளைஞர்களிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. இராணுவத்திற்கு தெரியாமலேயே எவ்வாறு அக்னி வீரர்கள் திட்டம் திணிக்கப்பட்டது என இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி இப்போது நமக்குச் சொல்கிறார். மிகச் சரியாக இதே வழியில்தான் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களும் அவற்றை தொடர்ந்து, பணமதிப்பகற்ற லுக்குப் பிறகு வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளும் கூட, இந்திய வங்கியாளர்கள், பொருளாதார வல்லுநர் களிடம் கூட எவ்வித ஆலோசனையும் கேட்கப்படாமலேயே தடை செய்யப்பட்டன.

கடந்த அனைத்து ஆண்டுகளிலும் இந்தியாவிற் குள் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக புலம் பெயர்வதற்கு முயற்சிப்பதாக அரசாங்கம் நமக்குச் சொன்னது. தற்போது இந்தியர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அடையாளம் காணப்பட்டு வெளிநாடுகளில் இருந்து திரும்ப அனுப்பி வைக்கப் படுவது குறித்து அடிக்கடி நம்மால் கேட்க முடிகிறது. சில நாட்களுக்கு முன்னதாக, முழுவதும் இந்திய பயணிகளை, அதில் பெரும்பாலானோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், கொண்ட ஒரு விமானம் பிரான்சில் தரையிறங்கியது; அந்த பயணிகள் அனைவரும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப் பட்டனர். பணக்கார இந்தியர்கள், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மேலும் பல மேற்கத்திய நாடுகளின் குடிமக்களாவதற்காக இந்தியக் குடி யுரிமையை விட்டு விடுகின்றனர். பல்வேறு இந்திய முதலாளிகள் இந்திய வங்கிகளில் பெருமளவு கடனை வாங்கி விட்டு நாட்டை விட்டே ஓடி விட்டனர். அதேவேளையில், இந்த அரசாங்கம் இந்தியத் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அதிகரித்த அளவில் ஏற்றுமதி செய்கிற போது, பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்து கொண்டேயிருக்கிறது. இஸ்ரேலுக்கு சென்று தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணி செய்வதற்கு இந்தியத் தொழிலாளர்களை அனுப்ப பாஜக அரசாங்கங்கள் ஆவலுடன் இருக்கின்றன.

பெரும்பிரிவு இந்தியக் குடிமக்களின் வாழ்வு அதிகரித்த அளவில் பாதுகாப்பற்றதாக மாறி யுள்ளது. முஸ்லிம்கள் கும்பல் கொலைகளையும் புல்டோசர்களையும் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் வழக்கமானதாக மாறியுள்ளது. நகரங்களிலிருந்து ஏழைகள் பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றப்படுவதை எதிர்கொள்கின்றனர். தலித்துகள், பழங்குடியினர் மீது கொடுமைகள் நிகழ்த்தும் குற்ற நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்த போதும் கூட, அத்தகைய கொடுமைகள் புரியும் குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்படுவதே யில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறையை மேற்கொள்ளும் குற்றவாளிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் முதல் மாநில சட்டமன்றங் கள், நாடாளுமன்றம் வரை அனைத்து மட்டங் களிலும் பதவிகள் வழங்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள்.

சமூக, பொருளாதார, அரசியல் நீதியை அரசியல் சாசன சட்டம் நமக்கு வாக்களித்துள்ளது. இருப் பினும் இன்றைக்கு நீதியை கோரும் மக்கள் பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப் படுகின்றனர். விவசாயிகளின் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க, வேளாண் சட்டங்களையும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் பயன் படுத்திய பிறகு, மோடி அரசாங்கம் தற்போது இந்தியாவை மெய்யான காவல்துறையின் ஆட்சியாக மாற்ற, குற்றவியல் சட்டங்களின் ஒட்டுமொத்த தொகுதியையும் மாற்றுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான ஒவ்வொரு எதிர் கருத்தும் போராட்டமும் தற்போது பயங்கரவாத நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு காரணமாக்கப்படுகிறது. மேலும் கொடூர பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் கடுமையான ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப் படுகிறது.

இவையெல்லாம் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக, வலுவான ஜனநாயகமாக மாறுவதன் அடையாளங் களல்ல. இவை ஒரு நிரந்தர, நிறுவனமயமாக்கப் பட்ட பயங்கரத்தின் ஆட்சி, ஒடுக்குமுறை என்ற பாசிசத்தின் அடையாளங்களாகும். நமது அரசியல் சாசன சட்டத்தின் முகவுரையை நாம் வாசித்து விட்டு, தனிப்பட்ட குடிமக்களாக நமது சொந்த வாழ் நிலைமைகளையும், ஒரு குடியரசாக கூட்டாகவும் நோக்கினால் எவ்வாறு நமது நாடு அரசியல் சாசன சட்ட இலக்குகளுக்கும் கடமைகளுக்கும் எதிர்த் திசையில் ஒவ்வொரு நாளும் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நம்மால் காணமுடியும். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப பதவி நீக்கம் செய்யப்படுகிற,இடைநீக்கம் செய்யப்படுகிற, எதிர்கட்சிகளற்ற நாடாளுமன்றம் என்ற நிலைமைக்கு மோடி அரசாங்கத்தின் பத்து ஆண்டுகள் ஏற்கனவே நம்மை தள்ளி விட்டுள்ளது. அரசியல் சாசன சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு மாறாக, இந்தியா நீட்டிக்கப்பட்ட டெல்லி அரசவையாக அதிகரித்த அளவில் காணப்படுகிறது. இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு மேலாக ஆளுநர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்; இங்கே ஜம்மு காஷ்மீர் அதன் அரசியல் சாசன சட்ட உரிமைகள் அகற்றப்பட்டு, ஒன்றியத்தின் இரு பகுதிகளாக (யூனியன் பிரதேசங் கள்) பிரிக்கப்பட்டுள்ளது; இங்கே மணிப்பூர் பல மாதங்களாக பற்றி எரிந்து கொண்டி ருக்கிறது; பிரதமர் ஒரு நாளைக்கு அங்கு சென்று பார்ப்பது இருக்கட்டும், நாடாளுமன்றத்தில் அந்த மாநிலத் தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசத் தயாரில்லையே பிரதமர்.

காஸாவில் பாலஸ்தீனிய குழந்தைகளை ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் படுகொலை செய்வது குறித்து ஒட்டுமொத்த உலகமும் கவலைப்படுகிறது. மனிதநேயத்தின் மீதான இந்தப் போரில், உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா, இந்தியாவின் முன்னாள் காலனிய ஆட்சியாளரான பிரிட்டன் ஆகியோரின் முழுமையான ஆதரவு இஸ்ரேலுக்கு உள்ளது. காலனிய ஆட்சியின் போது, ஜாலியன் வாலாபாக் போன்ற அநேக படுகொலை களை அனுபவித்த ஒரு நாடாக, காஸாவில் உடனடியான போர் நிறுத்தத்தை கோருவது மட்டுமல்லாமல், இஸ்ரேலின் போர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, கடும் சோதனை களை சந்திக்கும் பாலஸ்தீனியர் களுக்கு ஆதரவாக இந்தியா நிற்கவேண்டும். இனவாதத்திற்கும் காலனியவாதத்திற்கும் எதிராக வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை காந்தி தொடங்கிய நாடான, 20 ஆம் நூற்றாண்டு முடியும் தருவாயில் நிறவெறியின் கொடிய ஆட்சியை இறுதியில் தோற்கடித்த நாடான, தென்னாப்பிரிக்கா, இன்று சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரு கிறது. ஆனால் மோடி அரசாங்கத்தின் கீழ் அமெரிக்க இஸ்ரேல் போர் எந்திரத்தோடு நெருக்கமாக இணைந்து, நீதி, சுதந்திரம், அமைதியின் உலகளாவிய குரலிலிருந்து இந்தியா தனிமைப்பட்டு நிற்கிறது.

பேரழிவுமிக்க மோடி அரசாட்சியின் மற்றுமொரு ஐந்து ஆண்டுகளை இந்தியாவால் தாங்கிக்கொள்ளவே முடியாது. சுதந்திர இந்தியாவில் பழுப்பு கொள்ளையர்கள் பகத்சிங் நம்மை எச்சரித்திருந்தார்.மதமும் அரசாட்சியும் இணையும் போது அரசியலில் வழிபாடு (பக்தி) நிச்சயமான நிகழ்வாகும்; அது சர்வாதிகாரத்திற்குத்தான் வழிவகுக்கும் என அம்பேத்கர் நம்மிடம் கூறியிருந்தார். நமது குடியரசின் 74 வது ஆண்டுவிழாவை அனுசரிக்கும் போது இந்த எச்சரிக் கைகள் எப்போதையும் விட உண்மையானதாக ஒலிக்கின்றன.

அதனால் இந்தக் குடியரசை மீட்டெடுக்க நாம் உறுதி பூண வேண்டிய நேரம் இதுவாகும். இந்தியாவை உண்மையாகவே உருவாக்கியவர் களான தொழிலாளர்களும் விவசாயிகளும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்றாக வேண்டும். இளைய இந்தியாவிற்கு பாதுகாப்பான எதிர்காலம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்திய பெண்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு, வறுமை யில் வாடும் பரந்த மக்களுக்கு முழுமையான சுதந்திரம், நீதி, கவுரவம் கிடைக்க வேண்டும். மத, மொழி சிறுபான்மையினர் வளம் பெறுவதற்கு சம உரிமைகளும் வாய்ப்புகளும் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். சீரான ஒற்றைத்தன்மை என்ற பெயரில் இந்தியாவின் உயர்ந்த பன்மைத்துவத்தை ஒழித்துக் கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை யுடன், இறையாண்மைமிக்க ஜனநாயக குடியரசாக இந்தியாவை பிரகடனப்படுத்திய, நமது விடுதலைப் போராட்ட இயக்கத்திலிருந்து நாம் பெற்ற அரசியல் சாசன சட்டம் இப்போதும் நம்மிடம் உள்ளது. அம்பேத்கரின் தலைமையில் எழுதப்பட்ட இந்த அரசியல் சாசன சட்டமானது, காலனிய அரசியல் சாசன சட்டம் என மோடியின் அரசாட்சியில் உள்ள பலரும் வெளிப்படையாக விளக்கத் தொடங்கி விட்டனர். சட்டங்களை மாற்றி எழுதுவது போன்று, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை அதிபரின் சர்வாதிகாரமாக மாற்றிவிடும் எண்ணத்துடன் புதிய அரசியல் சாசன சட்டம் வேண்டும் என சங்கிப் படையணியிலிருந்தும் மோடி முகாமிலிருந்தும் உரத்த கூச்சல் வெளி வருகிறது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களையும் பெண்களையும் அடிமைப்படுத்துகிற பழங்கால சட்டமான மனுஸ் மிருதியை நவீன இந்தியாவின் அரசியல் சாசன சட்டமாக கொண்டுவர ஆர்எஸ்எஸ் திட்டமிடுகிறது என்பதை நாம் கண்டிப்பாக மறந்து விடக்கூடாது.

எனவே நம்முடைய ஒவ்வொரு வாக்கும், 2024 மக்களவைத் தேர்தலில் பேரழிவுமிக்க மோடி அரசாட்சி தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். பாசிச மோடி அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக இகக (மாலெ) தொடக்கத்திலிருந்து பாடுபட்டி ருக்கிறது. இந்தியா கூட்டணியின் ஒரு அங்கமாக வர இருக்கிற தேர்தல்களில் அனேகமாக வெகுசில தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடுவோம். ஆனால் நமது இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக அனைத்து இடங்களிலும் நாங்கள் வேலை செய்வோம். கார்ப்பரேட் கொள்ளை, மத வெறுப்புணர்வு, சமூக அடிமைத்தன சக்திகளை சுதந்திரமும் நீதியும் வெல்லட்டும்.

பிரிட்டீஷ் காலனிய ஆட்சி முதல் ஜமீன்தாரி முறை, பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் வரை அநீதி, ஒடுக்குமுறையின் அனைத்து சக்திகளையும் வரலாற்று ரீதியாக வெற்றிகொண்ட இந்திய மக்கள், பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத் திற்கான இந்தப் போராட்டத்திலும் வெற்றியாளர் களாக மேலெழ வேண்டும். மிகச் சமீபத்தில் வெற்றிகரமான விவசாயிகளின் இயக்கம் மக்களின் ஒன்றுபட்ட, தீர்மானகரமான போராட்டத்தின் சக்தியை நமக்கு காண்பித்தது. ஒற்றுமையுடன் நிச்சயமாக நம்மால் இந்த சங்கிப் பாசிஸ்டுகளை வெற்றி கொள்ள முடியும்.

போராடுவோம்!

வெற்றி பெறுவோம்!

மத்தியக் கமிட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை