370 வது அரசியல் சாசன சட்டப்பிரிவு நீக்கப் பட்டதை உறுதி செய்து, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மறுத்ததன் மூலம் அரசியல் சாசன சட்டம் அருவருக்கத்தக்க விதத்தில் மீறப்பட்டதற்கு அரசு நிர்வாகத்தை பொறுப்பாளியாக்குவதில் இன்று உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது. அரசியல் சாசன சட்டத்தையும் அதன் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் உச்ச நீதிமன்றம் உண்மையில் கைகழுவிவிட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசன சட்டப்பிரிவு 370, இறையாண்மையை கொடுக்கவில்லை என்றபோதும் அது இந்திய ஒன்றியத்துடன் இணை வதற்கு முக்கியப் பங்காற்றியது. உச்ச நீதிமன்றம் கூறுவது போல, சட்டப்பிரிவு 370இன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அரசியல் சாசன பாதுகாப்பு என்பது "சமச்சீரற்ற கூட்டாட்சி" என்பதோடு சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமல்ல; ஆனால் இந்தியாவுடன் அந்த மாநிலம் ஒன்றிணைந்த குறிப்பான வரலாற்றில் வேர் கொண்டுள்ளது.

இந்திய ஒன்றியத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 ஐ ஒத்த சில சிறப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து அனுபவிக்கும் பல்வேறு பிற மாநிலங் களும் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக "சமச்சீரற்ற கூட்டாட்சி" என்பதாக ஜம்மு காஷ்மீரை மட்டும் உச்ச நீதிமன்றம் தனியாக குறிவைத்துள்ளது. மேலும் சமச்சீரற்றதாக தோன்றுவதை சரிசெய்வது என்னும் பெயரில் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தையே பறித்துக் கொண்டு அதனை இரண்டு ஒன்றியப் பகுதிகளாக (யூனியன் பிரதேசங்கள்) தகுதி இறக்கம் செய்த ஒன்றிய அரசாங்கத்தின் செயலையும் பொருட்படுத்தாமல் விட்டு விட்டது.

ஜம்மு காஷ்மீரின் மக்கள் தங்களது மாநில அந்தஸ்தையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத் தின் மூலமாக பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கான உரிமையையும் இழந்து ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இந்த செயலின் அரசியல் சாசன சரி(யற்ற)த் தன்மை பிரச்சினையி லிருந்து உச்ச நீதிமன்றம் நழுவிக்கொண்டு, மாநில அந்தஸ்தை திரும்ப வழங்குவது, சட்டமன்ற தேர்தல் களை நடத்துவது என்ற ஒன்றிய அரசாங்கத்தின் வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு அதனை தப்பிக்க விட்டுவிட்டது துரதிர்ஷ்டவசமானதாகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசியல் எதிர்ப்பையும் அடிப்படை உரிமைகளையும் ஒடுக்குதல், ஏற்கனவே நாடு முழுவதும் ஜனநாயகத்தை மறுப்பதற்கான வார்ப்புருவாகிவிட்டது. ஜம்மு காஷ்மீர் தொடர்பாக ஒன்றிய அரசாங்கம் செய்யத் தவறியதற்கும் தவறாக செய்ததற்கும் கிடைத்த உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல், இந்தியாவில் கூட்டாட்சியை மேலும் கீழ்மைப்படுத்தி சிதைப்பதற்கான வாய்ப்பாக மோடி அரசாங்கத்திற்கு துணிவை வழங்கும்.