(நவம்பர் 7, 2023 அன்று மாலெ தீப்பொறி ஆசிரியர் ஜி.ரமேஷ் உள்ளிட்ட குழுவிற்கு விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல். திருமாவளவன் தாய்மண் அலுவலகத்தில் அளித்த நேர்காணலின் நிறைவுப்பகுதி. நேர்காணலை முழுமையாக வாசிக்க www.tamilnadu.cpiml.net சொடுக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.) 

பிப்ரவரியில் (2023) மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு பாட்னாவில் நடந்தது. நீங்களும் அதில் கலந்து கொண்டீர்கள். அந்த மாநாட்டில்தான் எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கான முதல் மணி அடிக்கப்பட்டது. அதற்குப்பிறகு இந்தியா கூட்டணி உருவாகி இருக்கிறது. இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதற்கான உங்க ளுடைய ஆலோசனைகள்?

கடந்த 10 ஆண்டுகளாகவே நாங்கள் இதுபற்றி பேசி வருகிறோம். காங்கிரஸ், பிஜேபியினுடைய அரசியல் எதிராளியாக இருக்கிற நிலையில், காங்கிரசுக்கு தேசிய அளவில் கணிசமான வாக்கு வங்கி உள்ள நிலமையில், காங்கிரசோடு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஏற்படும் போதுதான் பிஜேபியை வீழ்த்த முடியும் என்கிற புரிதல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கிறது. விடுதலை சிறுத்தைகளுக்கும் காங்கிரசுக்கும் முரண்கள் உண்டு. 2019 தேர்தலின் போது, சிபிஐ-ன் அப்போதைய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரி தலைவர் களை சந்தித்து இந்தக் கருத்தை வலியுறுத்தினோம். காங்கிரஸையும் பிஜேபியும் சமதூரத்தில் வைத்துப் பார்க்கவேண்டாம். இந்த இரண்டு கட்சிகளும் ஒரே தன்மை உள்ளதாக இருந்தாலும் கூட கருத்தியல் ரீதியாக பாஜக மிகவும் ஆபத்தானது என்பதை எடுத்துக் கூறினோம். பிஜேபியை வளரவிடாமல் தடுப்பதற்கு நீங்களெல்லாம் ஒரு அணியில் இருக்க வேண்டுமென்று பேசினோம். எழுத்துபூர்வமாகவே கொடுத்திருக்கிறோம். டிஆர்எஸ்-பிஆர்எஸ் ஆக மாறிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பிஜேபி எதிர்ப்பு நிலையில் இருக்க வேண்டும். காங்கிரஸ் ஆதரவு நிலை எடுக்க வேண்டும் என்று அந்த கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.

திமுக தலைமையிடம் தனிப்பட்ட முறையில் பேசும்போதும் பொதுக்கூட்டங்களில் பேசும் போதும் இந்த கருத்தை வலியுறுத்தியிருக்கிறோம். நீங்கள் முன் முயற்சி எடுங்கள். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணையுங்கள். ரொம்ப ஆபத்தான நிலையில் இந்தியாவும் இந்திய அரசமைப்புச் சட்டமும் உள்ளன. பிஜேபியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் இது மாதிரியான வேட்கை இருந்ததனால்தான் நாமெல்லாம் ஒன்றாக சேர்ந்து இருக்கிறோம். 28 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இதே கருத்து, சிபிஐஎம்எல்க்கும் இருந்ததனால்தான் பாட்னா மாநாட்டில் நிதிஷ்குமார், தேஜேஸ்வி இன்னும் பலரும் வந்து பேசினார்கள்.

காங்கிரஸ் ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டு, விட்டுக் கொடுத்து பிற எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒத்துழைப்பை நல்குகிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். மம்தா பானர்ஜி வரமாட்டாங்க. நிதிஷ்குமார் வரமாட்டார், கெஜிரிவால் வரமாட்டார். உத்தவ் தாக்கரே வரமாட்டார் என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில், இன்றைக்கு ஒரே அணிக்குள் எல்லோரையும் கொண்டு வந்து, இந்தியா கூட்டணி என்ற ஒரு வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாகி யிருக்கிறது. நாம் எல்லோருமே முயற்சி எடுத்திருந் தாலும் காங்கிரஸ் பரந்த பார்வையோடு அணுகியதும் எல்லாரையும் அரவணைத்துச் சென்றதும்தான் இந்த அணி உருவாவதற்கு முக்கியமான காரணம். இந்த அணி சிதறாமல் இருக்க வேண்டுமென்றால், இன்னும் வலுப்பெற வேண்டுமானால், காங்கிரஸ் இன்னும் வளைந்து கொடுத்து, தளர்வோடு இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, முரண்கள் இருக்கக் கூடிய மேற்குவங்கம், கேரளா, பஞ்சாப், தில்லி, பிஹார், மாநிலங்களில் அங்கு உள்ள கட்சிகளோடு காங்கிரஸ் மிகமிக இணக்கமாகப் போகவேண்டிய தேவை உள்ளது. தெலுங்கானா, ஆந்திரா மாநிலங் களையும் இந்த அணிக்குள்ளே கொண்டு வரவேண்டும். ஒய்எஸ்ஆர்சிபி, பிஆர்எஸ் இரண்டு கட்சிகளையும் இந்த அணிக்குள் கொண்டு வருவதற்கு ஒரு சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும். ராகுல் காந்தி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில கட்சித் தலைவர்களை நேரில் சென்று சந்தித்து வேண்டுகோளை வைக்க வேண்டும். ராகுல் காந்தி, மம்தாவை பார்க்கிறார், சந்திரசேகர்ராவை பார்க்கிறார் என்றால் அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதில் எந்தவிதமான பொய்யான பெருமையோ, அகந்தையோ கூடாது. காங்கிரஸ் நூறு ஆண்டுகால பெரிய கட்சிதான்; நீண்ட காலமாக இந்தியாவை ஆண்ட கட்சிதான். ஆனால் இன்றைக்கு இருக்கிற நெருக்கடியில் காங்கிரஸ் எந்த அளவுக்கு விட்டுக் கொடுத்து போகிறதோ; நெகிழ்வான அணுகு முறையை கையாள்கிறதோ அந்த அளவுக்கு இந்தியா கூட்டணி வலுப்பெறும். பிஜேபி வீழ்த்தப்படும்.

இப்போது நடைபெற இருக்கிற ஐந்து மாநில தேர்தல்களில் அந்தந்த மாநிலத் தலைவர்களின் பேச்சு வார்த்தையில் நெகிழ்வுத்தன்மை காணப்படவில்லை. அகிலேஷ் யாதவும் சரி மற்றவர்களும் சரி வெளிப்படையாக தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். நிதிஷ்குமார் அவர்களே கூட அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இது எந்த வகையிலும் நல்ல அறிகுறி இல்லை. அதனால், மற்ற கட்சிகளுக்கு விடுக்கிற வேண்டுகோள் என்பதைவிட காங்கிரஸ் கட்சிக்கு நான் வைக்கிற வேண்டுகோள், ஐந்து மாநில தேர்தல்கள் மட்டுமல்ல அடுத்து வரும் மக்களவை தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகளோடு நல்ல இணக்கமான உறவுகளை தொடர முன்வர வேண்டும். ராகுல் காந்தி தொலை நோக்குப் பார்வை உடையவராக இருக்கிறார். முற்போக்கான சிந்தனை கொண்டவராக இருக்கிறார். சாதாரண மக்களிடம் நெருங்கி பழகுவது, அவர் களோடு இருந்து வேலை செய்வது, தன்னுடைய பாதுகாப்பைப் பற்றிகூட கவலைப்படாமல், தனது பாட்டியை படுகொலை செய்யப்பட்டதையும் கருத்தில் கொள்ளாமல், வெறுப்பை வெளிப்படுத் தாமல், பொற்கோவிலில் உட்கார்ந்து சேவைசெய்யும் அந்த முயற்சி பாராட்டுக்குரியது. இது வெறும் நடிப்பு, என்று கடந்து சென்றுவிட முடியாது. உண்மையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவர் தன்னுடைய பாதுகாப்பையும் தாண்டி, 4000 கிலோமீட்டர் ஒரு பாரத ஒற்றுமை யாத்திரையை நடத்திக்காட்டி இருப்பது பெரிய சாதனை. இந்தியாவை பாதுகாப்போம் என்கிற அடிப்படையில்தான் அந்தப்பயணம் அமைந் திருந்தது. அடிப்படையில் பார்க்கும்போது ராகுல் காந்தி, இந்த தேசத்தைப் பாதுகாக்க வேண்டும், நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும், அரச மைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்; இந்த வலதுசாரி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்; சனாதன அரசியல் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் 100 விழுக்காடு பொருந்திப் போகிறார். மாநிலங்களில் இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர்கள், ராகுல் காந்தியின் இந்த பார்வைக்கு ஏற்ப, அவருடைய அணுகுமுறைகளுக்கு ஏற்ப ஒத்துழைத்தால் இந்தியா கூட்டணி இன்னும் வலுப்பெறும்; கட்டாயமாக பிஜேபி வீழ்த்தப்படும்.

முன்பு சொன்னதுபோன்ற, இந்தியா கூட்டணிக்குள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வதில்,கூட்டணியை வலுப்படுத்துவதில், அதை பாதுகாப்பதில், திமுகவுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.திமுக உடனடியாகத் தலையிட வேண்டும் என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து.

ஆனால், திமுக இதை சரிசெய்ய வேண்டுமென்பதை விடவும் காங்கிரஸ் கட்சி சரிசெய்ய வேண்டும். ராகுல் காந்தி சரிசெய்ய வேண்டுமென்பதுதான் மிக முக்கியமானது. இந்தியா கூட்டணியைப் பாதுகாப் பதில், அதை வலுப்படுத்துவதில் ராகுல் காந்தி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வட இந்தியா போல் பிஜேபி இங்கு வலுப்பெற முடியுமா? தமிழ்நாட்டில் அதன் முயற்சிக்கு எந்த அளவு பலன் இருக்கும்?

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகள் இடையேதான் மாநில அரசியல் சுழன்று கொண்டு இருக்கிறது. கலைஞர் எம்ஜிஆர், கலைஞர், ஜெய லலிதா என்று அரசியல் இருந்து வந்தது. திராவிட கட்சிகளே ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்ததால் தேசிய கட்சிகளுக்கு இங்கு வேலை இல்லை என்றாகிவிட்டது. காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டில் வெற்றிவாகை சூட முடியாததற்கான காரணம் அண்ணா திமுக தான். அதிமுக என்ற ஒன்று உருவாகாமல் இருந்திருந்தால் திமுக மற்றும் காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்க முடியும். திமுகவின் வலிமைக்கு எதிராக அதிமுகவும் வலிமை யாக இருந்தது. அதிமுக அல்லது திமுக இந்த இரண்டு கட்சிகளில் எந்த கட்சி பலவீனப்பட்டாலும் அது பிஜேபிக்கு லாபமாகவே அமையும். கலைஞர் இல்லை, ஜெயலலிதா இல்லை என்கிற சூழ் நிலையில், இன்று திமுக ஆளும்கட்சியாக இருக்கிறது. அறுபதுக்கு மேற்பட்ட இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும் கூட, தான்தான் எதிர்க்கட்சி என்பதை அதிமுகவால் நிறுவமுடிய வில்லை. ஜெயலலிதா அளவிற்கு வலுவான அரசியல் தலைமை இல்லை. திமுகவை விமர்சிப்பதற்கும் களத்தில் எதிர்கொள்வதற்கும் எதிர்க்கட்சி பாத்திரம் ஆற்றுவதற்கும் அதிமுகவிடம் செயல் திட்டம் இல்லை.

இந்த ஓட்டையைப் பயன்படுத்தி பிஜேபி முன்னுக்கு வரப்பார்க்கிறது. இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். பிஜேபி நிகழ்ச்சிகளுக்கு யார் போகிறார்கள் என்றால், அந்த கூட்டணியில் இருக்கக்கூடிய அதிமுக, பாமக நபர்களும் அந்த கூட்டணியில் இருக்கக்கூடிய பிற கட்சிகளில் உள்ள அதிதீவிர இந்துத்துவ ஈடுபாடு உடைய தொண்டர்களும்தான் போகிறார்கள். அண்ணாமலை பயணத்தில் கூட இதைப்பார்க்க முடிகிறது. கூட்டணி கட்சிகளை வலுவிழக்கச் செய்வது, விழுங்குவது பிஜேபி-ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தில் ஒன்று. தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ச்சி என்பது பாமக, அதிமுகவின் வீழ்ச்சி. ஆனால், இது பெரிய அளவிலே பலனளிக்குமென்று தோன்றவில்லை. ஏனென்றால் அண்ணா திமுக வாக்கு வங்கி இன்னும் சிதறவில்லை. ஜெயலலிதா மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த வாக்கு வங்கி, திமுகவுக்கோ வேறு கட்சிகளுக்கோ போய்விடவில்லை. அதிமுக என்பதே, திமுக எதிர்ப்பு வாக்கு வங்கிதானே. அந்த வாக்கு வங்கி கட்டுக் குலையாமல் இருக்கிறது. அதிமுகவும் பாமகவும் தங்கள் தொண்டர்களுடன் உரிய செயல் திட்டங் களோடு களத்தில் இறங்கினால், பிஜேபி பெரிய சக்தியாக காலூன்ற முடியாது. இன்று பிஜேபியை ஒரு சக்தியாக தோற்றம்பெற வைப்பதே அதிமுக, பாமக வின் பலவீனம்தான்.

அதிமுக-பாஜக பிரிவு நீடிக்கும் என்று கருதுகிறீர்களா?

எனக்கு இன்னும் அந்த நம்பிக்கை வரவில்லை. பிஜேபி-அதிமுக பிரிவு நீடிக்குமென்று நான் கருதவில்லை. அதிமுக தனியாக நின்று தேர்தலை சந்திப்பார்கள் என்றும் தோன்றவில்லை. கடைசி நேரத்தில், மோடி, அமித்ஷா எடப்பாடியை அழைத்துப் பேசினால் எல்லாம் மாறிவிடக்கூடும். இது அவர்களின் செயல்தந்திரமாகக்கூட இருக்க லாம். பிஜேபி -அதிமுவுக்கும் இடையிலான பிரச்சனை என்பதாக தெரியவில்லை. அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் இடையிலான பிரச்சனையாகக்கூட இருக்கலாமெனத் தோன்றுகிறது.

ஆளுநர் மாளிகை அரசியல் பற்றி?

பிஜேபி-ஆர்எஸ்எஸ்சின் முழு நேர அரசியல் தொண்டராக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்பட்டு வருகிறார். அவர் திராவிட அரசியலை குறிவைத்து காய்களை நகர்த்துவதற்குக் காரணம், பெரியார் மீது உள்ள வெறுப்பு. திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியை உடைக்க வேண்டுமென்பது அவர்கள் திட்டம். அதை உடைக்கும் நோக்கத்தோடு திராவிடம் என்பது பொய். பெரியாரியம் தேவை யில்லாதது போன்ற கருத்தை விதைத்து வருகிறார்கள். இதன் மூலம் புதிய தலைமுறையை தம் பக்கம் இழுக்க முடியுமா? முதல் தலைமுறை வாக்காளர்களை வளைக்க முடியுமா? என்று பார்க்கிறார்கள்.ஆர்.என்.ரவி, நாகலாந்து ஆளுநராக இருந்தபோது,அங்குள்ள மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி பதட்டத்தை உருவாக்கினார் என்பது தெரியும்.அவரை தமிழ்நாடு ஆளுநராக அறிவித்த உடனேயே விடுதலை சிறுத்தைகள் சார்பாக ஒரு அறிக்கை வெளியிட்டோம். இவரால் தேவையில்லாத பிரச் சனைகள் வரும்; பதற்றம் உருவாகும் என்று கூறினோம். அதுதான் இப்பொழுது நடக்கிறது. அவர் திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதைவிட தமிழ் நாட்டில் நிலை கொண்டிருக்கிற திராவிட அரசியலை பலவீனப்படுத்த வேண்டும். தமிழ் தேசிய அரசி யலை பலவீனப்படுத்த வேண்டும். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் இவற்றை யெல்லாம் பலவீனப்படுத்தும் நிகழ்ச்சிநிரல்தான் ஆளுநருடையது. அதற்கான செயல் திட்டங் களைத்தான் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்து கிறார். இங்கு ஆரியமும் இல்லை, திராவிடமும் இல்லை; எல்லாம் பொய் என்று சொல்வதும் வள்ளுவரையும் வள்ளலாரையும் சனாதனத்தின் அடையாளமாகக் காட்ட முற்படுவதும் இதற்கான சான்றுகள்தான். இவை அப்பட்டமான திரிபுவாதம். சிதம்பரத்திற்கு பக்கத்தில் உள்ள நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமத்திலுள்ள தலித்துகளுக்கு பூணூல் போடுவது போன்ற சதிச் செயல்களில் இறங்குகிறார். பிஜேபி ஆதரவாளர்களை பல்வேறு கிராமங்களி லிருந்து அங்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் திட்டமிட்ட அரசியல் சதி.

பாஜகவினர் ஏற்கனவே பல சமூகங்களில், சாதிகளில் ஊடுருவியுள்ளனர். அவர்கள் கைக்குச் சிக்காமல் இருப்பது வட மாவட்டங்களில் அடர்த்தியாக இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர்கள். அந்தப் பிரிவை குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள். இதை மக்களை புரிந்து கொள்ளச் செய்யவேண்டும். நமது கருத்தியல், அரசியல் பரப்புரை இயக்கத்தை இன்னும் பலப்படுத்திட வேண்டும். இந்திய அளவில் இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணியை ஏற்படுத்தியிருக் கிறோம். இந்தக் கூட்டணியை பலப்படுத்தியாக வேண்டும். பிஜேபி கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாதவாறு நமது பரப்புரை இயக்கம் வலுவாக இருக்க வேண்டும்; ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய உடனடித் தேவை. அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் வென்றாலும் கூட அது வலதுசாரிகளுக்கு ஆதரவாகவேப் போய்முடியும்.

ஒன்றிய ஆட்சியில் பாசிச பாஜக இருக்கிறது.எனவே, தமிழ்நாட்டிலுள்ள திமுக ஆட்சியிடம் மக்கள், ஜனநாயக சக்திகள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தலித் மக்கள் கடுமையாக தாக்கப்படுவது கொல்லப்படுவது தொடர்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாகக் கூட தலித் இளைஞர்கள் மீது சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது போன்ற விஷயங்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசு என்ன செய்யவேண்டும்? நம்மைப் போன்ற இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தினாலே இது போன்ற கொடுமை களை ஓரளவுக்குத் தடுக்க முடியும். இதில் அரசாங்கத்துக்கு உடன்பாடு இருந்தாலும் இதை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகளிடையே ஒரு பெரிய தயக்கம் இருக்கிறது. காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் சரி, வருவாய்த்துறை அதிகாரிகளாக இருந்தாலும் சரி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் போதுமானது. ஆனால், அதிகாரவர்க்கம், ஆட்சி யாளர்களுக்கே அறிவுரை சொல்லக்கூடிய சூழ்நிலைதான் இருக்கிறது. இந்தச் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினால் அது எஸ்சி, எஸ்டிக்கு ஆதரவாக இருக்கிற ஒரு முத்திரையை ஏற்படுத்தி விடும். தேர்தல் அரசியலில் பாதிப்பு ஏற்படுத்தி விடுமென ஆட்சியாளர்களையே ஒப்புக் கொள்ளச் செய்கிற அளவுக்கு அதிகாரவர்க்க துறைகள் இருக்கின்றன. இது ஒரு பொது இயல் பாகவே இருக்கிறது. இந்தச் சட்டத்தை நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தாமலேயே வைத்திருந் தார்கள். 1989இல் இந்தச் சட்டம் வந்தது. 1996ல் இதற்கு விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதற்குப் பிறகு ரொம்ப ரொம்பக் குறைவாகத்தான், வருசத்துக்கு 2% என்ற அளவில்தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் போன்ற இயக்கங்கள் போராட்டம், பேரணி நடத்தி அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன பிரிவில் வழக்குப் போட வேண்டுமென்பதையெல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்லி வழக்கு போட வைத்தோம். அப்படித்தான் மாற்றத்தை உருவாக்கினோம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே இதுபோல்தான் நடைபெறுகிறது. எஸ்சி எஸ்டி மக்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற ஒரு நிலை உள்ளது. அப்படி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது ஓபிசிக்கு எதிராக போய்விடும் என்ற கருத்து உள்ளது. இது அதிகார வர்க்க மனநிலையாகவே மாறியுள்ளது. தென் மாவட்டங்களில் இந்த அளவுக்கு பிரச்சனை தொடர்வதற்கு காரணம்,அதிகாரிகள் தலித்துகளுக்கு விரோதமாக இருக்கிறார்கள். இரண்டாவது இந்த வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை அமல்படுத்துவதில் ஆர்வமில்லாத நிலை.மூன்றாவது அந்த மக்களுக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ள கூடிய இயக்கங்களோ தலைவர்களோ சட்டத்தை நடைமுறைப்படுத்துங்களென்று பெரிதாகக் கோருவதில்லை. இந்த மாதிரி பிரச்சனைகள் நடக்கும் போது ஒரு எதிர்வினையாக செயல்பாடுகள் இருக்கிறதே தவிர, அதைத் தடுப்பதற்கு, இரண்டு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, பாதிக்கப்படுகிற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு விழிப்புணர்வுஏற்படுத்துவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள இயக்கங்கள் முனைப்பு காட்டுவதில்லை. மாநிலம் தழுவிய இந்தப் பிரச்சனையை நாம் கையிலெடுக்கிறபொழுது, நீ ஏன் இந்த பிரச்சினையில் தலையிடுகிறாய் என்று கேட்கும் உதிரிக் குழுக்கள்அதிகமாக உருவாகியிருக்கின்றன. சாதியவாதிகளும் மதவாதிகளும்தான் நிறைய பேர் களத்தில் இருக்கிறார்கள். முற்போக்கு சிந்தனையாளர்கள் எண்ணிக்கை மிகமிக அருகி வருகிறது. கண்ணுக்கெட்டிய தூரத்திலே வலதுசாரி பிற்போக்காளர்களைத்தான் பார்க்கமுடிகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகான தமிழ்நாட்டின் எதிர்காலம், இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. இன்று உதிரிகளாக இருக்கக்கூடியவர்கள்தான் நாளைய அரசியல் தலைவர்களாக இருக்கப்போகிறார்கள் எனும்போது நமக்கு மிகுந்த கவலை ஏற்படுகிறது. ஜனநாயக சக்திகள் வலியுறுத்துவது, ஆட்சி யாளர்கள் தேர்தல் அரசியலை மட்டுமே கவனத்தில் கொண்டு தலித்துகளுக்கும் தலித் அல்லாத மக்களுக்கும் இடையில் இருக்கின்ற முரண்களை கண்டும் காணாமல் விட்டுவிடக்கூடாது. அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டும். அவர்களை தலித்துகளென்றோ தலித்துகள் அல்லாதவரென்றோ பார்க்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பதுதான் அரசாங்கம். அதுதான் சட்டம். அதுதான் ஜனநாயகம்.

வெல்லும் ஜனநாயகம் மாநாட்டின் முக்கிய செய்தி?

வெல்லும் ஜனநாயகம் என்றால் வெல்லும் இந்தியா என்பது பொருள். வெல்லும் இந்தியா என்பதைத்தான் வெல்லும் ஜனநாயகம் என்று அழைக்கிறோம். ஜனநாயகம் என்பது அடிப்படை கருத்து. வெல்லும் இந்தியா என்பது தேர்தலை அடிப் படையாகக் கொண்டது.எனவேதான் வெல்லும் இந்தியா என்பதை 'வெல்லும் ஜனநாயகம்' என்று வைத்திருக்கிறோம் சனாதனத்தை வீழ்த்துவது ஜனநாயகம்தான். இறுதிப் போரில் ஜனநாயகமே வெல்லும். அந்த வகையில்தான் "வெல்லும் ஜனநாயகம்" மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம். இந்த மாநாட்டிற்கு அகில இந்திய அளவில் நான்கு தலைவர்களை அழைத்திருக்கிறோம். சிபிஐ தோழர் ராஜா, சிபிஐஎம் தோழர் சீதாராம் யெச்சூரி, சிபிஐஎம்எல் தோழர் திபங்கர், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.