2024 இடைக்கால நிதிநிலை அறிக்கை தேர்தல் பரப்புரையில் ஒரு பகுதியாகவே உள்ளது. பொறுக்கி எடுத்த தரவுகள், அரைகுறை உண்மைகள், திரிப்பு வேலைகளையும் நம்பியிருக்கிறது. இதன்மூலம் கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து, தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.

அரசாங்கத்தின் பல முதன்மைத் திட்டங்களுக்கு உண்மையில், திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, ஒதுக்கீடு செய்யமுடியவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பெரிதும் பேசப்படும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.54,103 கோடி (நிதிநிலை அறிக்கை 2023 இன் மதிப்பீடு ரூ.79,590 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத் திற்கு ரூ.2,550 கோடியும் (நிதிநிலை அறிக்கை 2023 இன் மதிப்பீடு ரூ.5,000 கோடி), பிரதம மந்திரி ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் கட்டமைப்பு திட்டத் திற்கு ரூ.2,100 கோடியும் (நிதிநிலை அறிக்கை 2023 இன் மதிப்பீடு ரூ.4,000 கோடி) நிதியாண்டு 2023-24 ஆண்டிற்கான உண்மையில் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீடுகளில் முன்வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதைப் பற்றி இந்த அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின் உண்மையான எண்கள் வேறு காட்சியை நம்முன் வைக்கின்றன. யூரியா, (விவசாயத்துக்கான) நுண்ணுயிர்ச் சத்துகள் மானியத்திற்காக 2022-23 நிதி யாண்டில் உண்மையிலேயே செலவிடப்பட்ட தொகை ரூ.1,65,217 கோடி. தற்போது அதைவிட குறைவாக, ரூ.1,28,594 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊட்டச்சத்திற்காக 2022-23இல் உண்மையிலேயே செலவிடப்பட்டது ரூ.86,122 கோடி. தற்போது ரூ.60,300 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்த அரசாங்கம் விவசாயிகளிடம் ஒரு கையில் உள்ளதைப் பிடுங்கிக் கொண்டு,அவர்களுக்கு பிரதம மந்திரி விவசாயிகள் நிதி என்ற வடிவில் ஆதரவு வருமானமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6,000 த்தை வேறொரு கை மூலம் கொடுக்கிறது எனத் தெளிவாகிறது. யூரியா மற்றும் ஊட்டச்சத்துக்கள் மானியத்திற்கு கடந்த ஆண்டி லிருந்து உண்மையிலேயே குறைக்கப்பட்டுள்ள தொகையான ரூ.62,445 கோடி, பிரதம மந்திரி விவசாயிகள் நிதிக்கு செலவிடப்பட்டுள்ள ரூ.60,000 கோடியை விட அதிகமானதாகும். யூரியா மற்றும் ஊட்டச்சத்துக்கள் மானியத்திற்கு நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ரூ.1,19,000 கோடி மற்றும் ரூ. 45,000 கோடி உண்மையிலேயே செலவழிக்கப்பட்டுள்ளதை விடவும் குறைவாக உள்ளது. இது இந்த மானியங்கள் மேலும் மேலும் குறைக்கப்படும் என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள உணவுக்கான மானியம் ரூ.2,05,250 கோடி என்பது மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின் ரூ.2,12,332 கோடி என்பதையும் விட குறைவானதாகும். இது வறியவர்களுக்கான நல்வாழ்வு (கரிப் கல்யாண்) என்ற கூற்று இருந்த போதிலும் கூட நிகழ்ந்துள்ளது.

இளைஞர்களைத் திறன்மிக்கவர்களாக வளர்த்தெடுப்பதற்காக பெரிதும் பேசப்பட்டது திறன் வளர்ப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் நாட்டி லுள்ள வேலையில்லாத, குறை வேலை வாய்ப்பு பெறும் இளைஞர்களுக்கு தேவைப்படுகிற, திறன் வளர்க்கவும் மறுதிறன் வளர்க்கவும் அற்பமாக வெறும் ரூ.538 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அதிஉயர் பணக்காரர்கள் மீதான வரியை அதிகரிக்க மறுப்பதன் விளைவாக பெரும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீடுகளில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீத மாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான வீதம் கடந்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 67% திலிருந்து 82% என மோசமான நிலையை எட்டியுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீடுகளின் படி மொத்தமாக செலவிடப்பட்ட ரூ.44.90 லட்சம் கோடிகளில், வாங்கிய கடனுக்கான வட்டியை திரும்பக் கொடுப்பதற்கே ரூ.10.55 லட்சம் கோடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது சுமாராக ஒவ்வொரு ரூ.4 க்கும் ரூ.1 என செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம், தான் முன்வைக்கும் இலக்குகளை மாற்றியமைப்பதற்கும் கவனத்தை தீவிரமாக சிதறடிப்பதற்கும் பெயர் பெற்றதாகும். இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கை 2024 லும் கூட அதையே செய்கிறது.

அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அது ஒரு மாதத்திற்கு  ரூ.25000, ரூ.10000, ரூ.5000 என்பதை விடவும் குறைவாக சம்பாதிக்கிற,குறை வருமான வகையினத்தின் கீழ் இருக்கிறவர்களில் 80 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் மோடியின் பொருளாதாரக் கொள்கைகளின் கடும் தாக்குதலை எதிர்கொள்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வருமான வகையினத்திலுள்ள மக்கள் கடந்த ஒரு ஆண்டில் தங்களுடைய பொருளாதார சூழல் மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது என்பதை காண்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் எதார்த்த நிலையை புரிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்த பிகாரின் அண்மைய சாதிவாரி கணக் கெடுப்பு பொருளாதாரத்தின் நிலை பொதுவாக அனைவருக்கும் மோசமாகியிருக்கிறது என்ற தகவலை கூறுகிறது. இருந்தபோதிலும் எஸ்சிஎஸ்டி, ஓபிசியினரும் சிறுபான்மையினரும் பொருளாதார ரீதியில் மிகவும் வறுமையில் இருக்கிறார்கள் என வறுமையின் உண்மையான அளவினை குறிப் பிட்டுக் காட்டியுள்ளது. பணக்காரர்களால் ஊக்கு விக்கப்படும் 'நல்ல நாள்', 'அமுத காலம்' என்ற பெயரிலான மோடி-ஷா அரசாட்சியால் பொருளாதார வளர்ச்சி குறித்து உருவாக்கப்படும் உணர்தல் களும் பொய்யான கூற்றுகளும், அடல்-அத்வானி காலத்து 'ஒளிரும் இந்தியா' தம்பட்டம் எட்டிய அதே முடிவையே வரவிருக்கிற மக்களவைத் தேர்தலிலும் எட்டும்.

மத்தியக் கமிட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை