பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் வெற்றிகரமான இரண்டாவது கூட்டமும் இந்தியா (ஐஎன்டிஐஏ) என்ற பெயர் சுருக்கத்துடன் ஒரு புதிய கூட்டணியின் தோற்றமும் மோடி ஆட்சியை திடுக்கிடச் செய்துள்ளது எனத் தெளிவாகவே தெரிகிறது. இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் புதிய கட்சிகளைக் கண்டுபிடித்தும் உற்பத்தி செய்ததன் மூலமும் டெல்லியில் அதே நாளில் ஒரு இணையான 'கூட்டணி'யின் காட்சியை அரங்கேற்ற வேண்டும் என்ற கடும் முயற்சியில், இந்த ஆட்சியின் அதிகரித்து வரும் பதற்றம் தென்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு எந்த எதிர்ப்புமின்றி இந்தியாவை ஆள்வோம் என்று பாஜக ஆணவத்துடன் மார்தட்டி சொன்னதற்கு முற்றிலும் மாறான நடவடிக்கையை இது குறிக்கிறது! இந்தியாவில் பிராந்தியக் கட்சிகளின் காலம் முடிந்துவிட்டது என ஓராண்டுக்கு முன்னர் பாட்னாவில் ஜேபி நட்டா ஆணவத்துடன் வெளியிட்ட அறிக்கையை நினைவு படுத்திக் கொள்வோம். இந்த நாட்டில் பலரின் கூட்டு வலிமையை விட ஒரு நபர் மிகவும் வலுவானவர் என நிரூபித்துள்ளார் என்று இந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி மாநிலங்களவையில் தற்பெருமையுடன் கூறிய நரேந்திர மோடியின் 'ஒரே தலைவன்' என்ற வார்த்தையை நினைவுபடுத்திக்கொள்வோம்!
2024 தேர்தலுக்கு முன்பாக, செயலற்றுக் கிடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பதாகையை உயிர்ப்பிக்கும் தீவிர முயற்சியில் அதிகார வெறிபிடித்த பாஜக இன்று ஈடுபட்டுள்ளது. பாஜகவின் ஆணவப்போக்கு, அதன் முன்னாள் நீண்டகால கூட்டாளிகளான சிவசேனா, அகாலிதளம், அய்க்கிய ஜனதாதளம் போன்றவை அதனுடன் உறவை முறித்துக் கொள்ள வழிவகுத்தது. அதே பாஜக இப்போது இந்தக் கட்சிகளைப் பிளவுபடுத்தவும், பிளவுபட்ட குழுக்களை தனது கூட்டணிக் கட்சிகளாக மாற்றவும் முயற்சி செய்கிறது. ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பிறகு லோக் ஜனசக்தி கட்சியில் பிளவை ஏற்படுத்திய அது, முன்பு தனியொரு கட்சியாக இருந்ததை, இப்போது புதிதாக கூட்டணியில் இணைந்த இரண்டு கூட்டணிக் கட்சிகளாகக் காட்டும் எண்ணிக்கை விளையாட்டில் ஈடுபடுகிறது!
மனக்கலக்கமுற்ற மோடி முகாம் இப்போது இந்தியாவை, பாரதத்திற்கு எதிராக நிறுத்த முயற்சி செய்கிறது. அதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான அதன் வெறுப்பினை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. "இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு கூறுகிறது. இந்தியாவிற்கும் பாரதத்திற்கும் இடையே பிளவை ஏற்படுத்த மோடி அரசாங்கம் விரும்புகிறது. மேலும் அது இந்திய மாநிலங்களை அதீத மய்யப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசாங்கத்தின் காலனிகளாக மாற்ற விரும்புகிறது.
மோடி அரசாங்கத்திற்கு ஒரே மாதிரியான ஆட்சிமுறை தான் தெரியும். இந்திய ஜனநாயகத்தின் அரசமைப்புச் சட்ட அடித்தளம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு, இந்திய சமூக கட்டமைப்பின் ஒருங்கிணைந்த கலாச்சாரம், பன்முகத்தன்மை, இந்திய குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள், கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்களின் உயிர்த்திருத்தல் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் மீது ஒரு
மாறாதப் போரை நடத்துவதைத் தவிர வேறு வழியில் அதனால் ஆட்சி செய்ய முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் போது டாக்டர் அம்பேத்கர் நமக்கு முன்னறிவித்த இந்தப் பேரிடரை முறியடிக்க இந்தியா தனது முழு வலிமையையும் ஒன்றுதிரட்டிக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் மீது மோடியின் ஆட்சி சுமத்தியுள்ள அனைத்து வகை அராஜகங்கள், நெருக்கடிகள் என்ற கொடுங்கனவை வீழ்த்தி, இறையாண்மைமிக்க சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற அரசமைப்புச் சட்ட நோக்கம் வெற்றிபெற வேண்டும்.
பாட்னாவிலிருந்து, பெங்களூருலிருந்து வரும் செய்திகள், இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களுக்கு
எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஆற்றல்மிகு மக்கள் இயக்கங்கள் மூலமாகப் போராடி, எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். போர் இப்போதுதான் தொடங்கியுள்ளது. *நாம் போராடுவோம்! வெற்றி பெறுவோம்!*
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)