டிசம்பர் 4ல், விஜயவாடாவில் மக்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. சிபிஐ(எம்எல்) நடத்திய இம்மாநாட்டில், கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஸ்வதேஷ், கட்சியின் ஆந்திரா பொறுப்பாளர் வீ. சங்கர், தெலுங்கானா பொறுப்பாளர் மூர்த்தி, மத்திய கமிட்டி உறுப்பினர் நாகமணி ஆகியோர் உரையாற்றினர். மாநிலச் செயலாளர்  பங்கார் ராவ் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்.

"சூப்பர் ஆறு போதுமா? மக்கள் கோரிக்கை ஆறு தேவை!"

"மாநிலத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் இயக்கங்களைக் கட்டி எழுப்புவோம்!"

"காவி பாசிசத்திற்கு எதிராக செம்பதாகையை உயர்த்திப் பிடிப்போம்!"

எனும் முழக்கங்களை மையமாகக் கொண்டு மக்கள் உரிமை மாநாடு நடைபெற்றது.

 ஆந்திர கார்ப்பரேட்டுகளின் நண்பர், அரசு சலுகைசார் முதலாளித்துவம் மீண்டுமொருமுறை மூர்க்கத்தனமாக திரும்பி வந்திருக்கிறது. அரசு சலுகை சார் முதலாளித்துவ சக்திகளின் கை மீண்டும் மேலோங்கி இருக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க் கட்சி இரண்டுமே ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசையும் அதன் அரசியலையும் ஆதரித்த ஒரே மாநிலம் ஆந்திராதான். அத்தகைய நிலைப்பாட்டுக்கு பெருத்த விலையாக ஜகன்  தனது ஆட்சி பீடத்தையே பலி கொடுக்க வேண்டியதாகி விட்டது. வலுவான ஒரு எதிர்க் கட்சி இல்லாததோர் அரசியல் சூழலில் தெலுங்கு தேசம், ஜன சேனா போன்ற கட்சிகளை ஆதரிக்கும் அவசியம் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்டு விட்டது. சந்திரபாபு நாயுடு முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தது ஒரு முக்கியமான செயல்தந்திரமாக பார்க்கப்படுகிறது. மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு, பிஜேபிக்கு ஒவ்வாதது என்றாலும் தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவதை பிஜேபி தவிர்த்தது.

வேலையின்மை, வறுமை, நில உரிமைச் சட்டம் மூலம் கடும்பாடு பட்டு பெற்ற நிலத்தை இழந்து விடுவோம் என்ற பயம், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் அமைப்புகளின் குரல்வளையை நசுக்கும் அதிகாரத்துவம் ஆகியவற்றின் முன்னால் ஜெகனின் ஒய் எஸ் ஆர் சி பி யின் நலத் திட்ட கவர்ச்சிவாதம் தோற்றுப் போனது. சந்திரபாபு நாயுடுவைக் கைது செய்ததை ஒரு மலிவான அரசியல் என பலரும் கருதினர். உள்கட்டுமானம்,மூலதனம், வேலை வாய்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கான தேடுதல் என்பது ஜெகனின் சேமநல வாதத்தை வெற்றி கொண்டுவிட்டது என ஊடகங்கள் சித்தரிக்கின்றன. மாறாக, முதியவர்களுக்கு ரூ 4000 பென்சன், ரூ 3000 வேலையில்லா நிவாரணம், ரூ 15000 விவசாயிகள் உதவி, ரூ 1500 பெண் மாணவர் உதவி, பெண்களுக்கு இலவச பஸ், இலவச எரிவாயு உருளைகள் என தேசிய ஜனநாயக கூட்டணி முன்வைத்த சூப்பர் ஆறு உத்தரவாதங்கள் மக்களைக் கவர்ந்தன. முஸ்லீம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு என்கிற மாபெரும் செயல் தந்திரம் சிறுபான்மை வாக்குகளைப் பெற உதவியது. அது பெரும் மாற்றத்திற்கு வழி வகுத்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி பிற்போக்கு சக்திகளின் வெற்றியாகும். ஏனென்றால் அது தலித்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிராக ராஜு-கம்மா-காப்பு போன்ற ஆதிக்க சமூக சக்திகளைக் கொண்ட கூட்டணியின் அரசியல் அறுதியிடலைக் குறிப்பதாகும்.

பென்சன் ரூ 1000 அதிகரித்திருப்பதைத் தவிர வேறு எந்த வாக்குறுதிகளும் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை. வேலையின்மை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாளுக்கு ரூ 600 கூலி வழங்கப்பட வேண்டும், நூறு நாள் வேலையை நகர்ப்புறத்திற்கு நீட்டிக்க வேண்டும், ரூ 35000 குறைந்தபட்ச ஊதியம், இலவச கல்வி, சுகாதாரம் வழங்கப்பட வேண்டும் என சிபிஐ எம் எல் கோருகிறது. அமராவதியை சிங்கப்பூராக்குவது பற்றி, கடல் விமானங்கள் பறக்க விடுவது பற்றி மட்டுமே சந்திரபாபு நாயுடு கவலைப் படுகிறாரே தவிர மக்கள் கோரிக்கை ஆறு பற்றி கொஞ்சமும் கவலைப் படுவதில்லை. மிகவும் பிந்தங்கிய, வறுமை பீடித்துக் கிடக்கும் ராயலசீமா பகுதிகளை, வட ஆந்திரப் பகுதிகளை முன்னேற்றுவது குறித்து சற்றும் சிந்திப்பதில்லை. எனவே தான், மக்கள் கோரிக்கை ஆறு நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது சிபிஐ எம் எல்.

ஆந்திர மாநிலத்தின் மதச் சார்பற்ற மரபை சிதைக்கக் கூடிய, ஆந்திராவில் வளர்ந்து வரும் கார்ப்பரேட், மதவெறி பாசிச சக்திகளை முறியடித்தே தீர வேண்டுமென சிபிஐ எம் எல் உறுதி பூண்டுள்ளது. ஆந்திராவில் பிஜேபி வேரூன்றுவதைத் தடுத்திட தன்னாலான அனைத்தையும் செய்திட சிபிஐ எம் எல் உறுதி பூண்டுள்ளது. சந்திரபாபு நாயுடு மொத்த மாநிலத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விலை கூவி விற்பது மட்டுமல்ல, ஆர் எஸ் எஸ் – பிஜேபியை தனது தோள்களின் மீது சுமந்து, மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் படரச் செய்கிறார். பவன் கல்யாண் தனது சொந்த கட்சி ஜன சேனாவை விட பிஜேபிக்கு, அதன் பிற்போக்கு வெறுப்பு அரசியலுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார். ஆந்திர மண்ணில் சனாதன தர்மத்தை காப்பாற்றும் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சி நிரலை தனது தோள்களின் மீதே சுமந்து கொண்டிருக்கிறார்.

ஜெகனும் கூட அதே ஆளும் வர்க்கத்தைதான் பிரதிநிதித்துவப் படுத்தினார் என்றாலும், அதன் மிகவும் பிற்போக்கான ஆதிக்க சாதிகளையும், பகல் கொள்ளையில் வாழ்ந்து வந்த சலுகை சார் லும்பன் முதலாளிகளையும் பிரதிநிதித்துவப் படுத்துபவராகவும் இருந்தார். ரெட்டி ஆதிக்கம் மங்கிப் போய், சலுகைசார் முதலாளித்துவ சக்திகளும் ஆதிக்க நடுச் சாதிகளும் தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றன.

தீவிர இடதுசாரி அரசியலுக்கும் முற்போக்கு அரசியலுக்கும் பெயர் பெற்ற அந்த ஆந்திரா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை மத வெறி அரசியலின் வெற்றி என குறிப்பிட முடியாவிட்டாலும், வலதுசாரி சக்திகள்தான் வெற்றி பெற்றிருக்கின்றன என்பதை காணத் தவறக் கூடாது.

துரதிருஷ்டவசமாக, எதிர்க்கட்சி முகாமைச் சார்ந்த இடதுசாரிகளும் காங்கிரசும் ஒரஞ்சாரத்திற்குத் தள்ளப்பட்டு விட்டனர். தேர்தல் செயல்பாடு அடிப்படையில் மிகமிக சின்னஞ்சிறு சக்தியாகிப் போய் விட்டார்கள். காங்கிரசின் சமூக அடித்தளம் சிதறுண்டு போய் விட்டது. இடதுசாரிகள் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

இத்தகைய பின்னணியில், மாநில அரசியலில் முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரி அரசியல் மீட்சியைப் பற்றி கற்பனை செய்வதற்குக் கூட தலித்துக்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் அரசியல் அறுதியிடல் மிகமிக அவசியமானதாகிறது. இந்தச் சவாலை கட்சி ஏற்றுக் கொள்கிறது. கார்ப்பரேட், மதவெறி பாசிச சக்திகளை ஆந்திர மண்ணிலிருந்து அகற்றிட சூளுரைக்கிறது.