சனவரி, 2025 ல், தமிழ்நாடு அரசு வெளியிட்ட "தமிழ்நாடு இரும்பின் தொன்மை" ஆய்வறிக்கை தமிழ்நாட்டு இரும்பின் காலத்தை 5300 ஆண்டுகளுக்கு முன்கொண்டு சென்றது; உலகிற்கு எஃகு இரும்பை முதலில் தமிழர் தான் அறிமுகப்படுத்தினார்கள் என்ற உண்மையையும் நிறுவியது.
தமிழகத்தில் அண்மைக் காலங்களில் ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை , கீழ்நமண்டி, மாங்காடு மற்றும் தெலுங்கனூர் ஆகிய தொல்லியல் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இரும்பாலான பொருட்கள் கிடைக்கும் இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 20 மாதிரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட அறிவியல் அடிப்படையிலான காலக்கணக்கீடுகள், தொன்மையான தொழில்நுட்பம் தொடர்பான முந்தைய கருதுகோள்களை மாற்றி அமைத்துள்ளன. தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டின் தொடக்கம் என்பது கி.மு. நாலாயிரத்தின் முற்பகுதியைச் சார்ந்தது என்பதை, அதாவது இரும்பின் தொன்மை 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் துணைகொண்டு நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகள், இருவேறு அறிவியல் அணுகுமுறைகளின் அடிப்படையில் , பீட்டா அனலிட்டிக்ஸ் ஆய்வகம், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வகம், இன்டர் யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் மையம் (IUAC, புதுதில்லி), பீர்பால் சஹானி பேலியோ சயின்சஸ் நிறுவனம் (BSIP, லக்னோ) மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL, அகமதாபாத்) ஆகிய ஐந்து ஆய்வகங்களில் சோதனையிடப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன ; ஆய்வு முடிவுகள் சற்றேறக்குறைய ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. தூத்துக்குடி மாவட்ட சிவகளையில் கண்டறியப்பட்ட இரும்புக் கருவிகளின் காலம் தான் மிகவும் தொன்மையானதாக, புளோரிடாவில் உள்ள பீட்டா அனலிட்டிக்ஸ் சர்வதேச ஆய்வகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகாறும், வட இந்தியாவில் கண்டறியப்பட்ட இரும்பின் பயன்பாடு கி.மு. இரண்டாயிரம் ஆண்டாக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் அது கி.மு. மூவாயிரம் ஆண்டாகக் கண்டறிந்திருப்பது, இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்திற்கும் மேலாக, சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் தெலுங்கனூரில் கிடைத்த இரும்பு வாளை உலோகவியல் ஆய்வுக்குட்படுத்திப் பெறப்பட்ட முடிவுகள், தென் இந்தியாவில் உயர்-கார்பன் எஃகு தொழில்நுட்பத்தின் தோற்றத்தின் மீது புதிய ஒளியினைப் பாய்ச்சியுள்ளது.
இதுகாறும், இரும்புத் தொழில்நுட்பம் ஆசியா மைனரில் ( ஹிட்டைட் அரசில்) தான், கி.மு. 1300 ஆண்டுவாக்கில் தோன்றியதாகவும் பின்னர் தொழில்நுட்ப பரவலின் ஒரு பகுதியாக உலகின் பிற பகுதிகளுக்குச் சென்றடைந்ததாகவும் கருதப்படுகிறது. அதாவது, ஹிட்டைட் அரசில் காணப்பட்ட எஃகு தான், உலகிலேயே காலத்தில் முந்தையதாக கருதப்பட்டு வந்தது. புதிய ஆய்வு முடிவுகள் தமிழ்நாட்டில் முதன்முதலாக கண்டறியப்பட்ட எஃகு தொழில்நுட்பத்தில் தயாரான கருவிகள் தான், இந்தியாவுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் பரவியது என்பதை அறிவித்தன.
¶ பாஜக ஆட்சி ஏற்கமறுக்கிறது !
3,500 ஆண்டுகால வேதகால ஆரிய நாகரிகத்தை தான் பாஜக அரசும், சங்கப் பரிவாரங்களும், இந்தியாவின் நாகரிகமாக போற்றிப்பாடி வருகின்றன. வரலாற்றில் இல்லாத சரஸ்வதி நாகரிக கட்டுக்கதையை கட்டமைக்க ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி செலவு செய்துவருகிறது. ஆனால், "தமிழ்நாட்டில் 5,345 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இரும்புக் காலம் நிலவியது" என்று அறிவியலின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் பற்றி இதுவரை எவ்விதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
இந்த ஆய்வு முடிவுகள், இந்தியாவில் இரும்பின் தோற்றம் மீதான மிகத்தொன்மையான கண்டுபிடிப்பாக திகழ்வது மட்டுமல்லாமல், , எஃகு இரும்பு தயாரிப்பில், உலகிலேயே இந்தியா / தமிழ்நாடு தான் முதன்மையாக திகழ்ந்தது என்ற சர்வதேச பெருமையையும் சேர்ப்பதுமாகும். எனினும், ஒன்றிய பாஜக அரசாங்கம், அதன் கலாச்சார அமைச்சரகம், அதன் கீழ் இயங்கும் இந்திய தொல்லியல் துறை - ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா, எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் அலட்சியம் செய்கிறது. ஏன்?
¶ 2022 ல் மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் வெளியான போதும் புறக்கணிக்கப்பட்டோம் !
'தமிழக நிலப்பரப்பில், 4200 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்புக் கருவிகளின் பயன்பாடு நிலவியது' என்பதை உறுதிப்படுத்திய, பேராசிரியர் கா.ராஜன் தலைமையிலான தொல்லியல் ஆய்வுக் குழுவினர் தயாரித்த மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகளை மே 2022 ல், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்; "இந்திய துணை கண்டத்தின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்படும்" என்றும் பெருமிதத்துடன் அறிவித்தார்.
அதாவது, 4200 ஆண்டுகளுக்கு முன்னர், கிமு 2200 ல், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்துவெளி நாகரிகம் செழித்தோங்கிய காலகட்டத்தில், தமிழ்நாட்டில் இரும்பை வெட்டி எடுத்து, உருக்கி, இரும்பு கருவிகள் தயாரித்து வெளிநாட்டு வணிகத்திற்கும், உள்நாட்டு பயன்பாட்டுக்கும் பயன்படுத்திய நிலையில் தமிழர் நாகரிகம் வளர்ந்திருந்தது என்பது உறுதியானது.
எஃகு இரும்பு தயாரிப்பில் கிமு 1400 க்கு முன்னரே சிறந்திருந்த
தமிழ் வணிக அரசுகள், வெளிநாடுகளில் அமைத்த வணிக செட்டில்மெண்ட்கள் மூலமாக ஹிட்டைட் அரசுக்கு இரும்பு தொழில்நுட்பம் சென்றது என்ற கருதுகோள் உறுதியானது. தமிழகத்திலிருந்து சென்ற உருக்கு இரும்பு மூலமாக, கிமு 600 ல் சிரியாவின் டமாஸ்கஸ் வாள் தயாரிக்கப்பட்டது என்பதும், ஏற்கெனவே அங்கே கிடைத்த தொல்லியல் சான்றுகள் உதவியுடன் பல ஆய்வாளர்களாலும் ஏற்கப்பட்டுள்ளது.
எனினும், 2022 ல் வெளியான மயிலாடும்பாறை அறிக்கையையும், தமிழ்நாட்டின் இரும்பின் காலத்தை 5300 ஆண்டுகளுக்கு முந்தையதாக நிறுவியுள்ள சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட தற்போதைய 2025 ம் ஆண்டு புதிய ஆய்வுகளையும் பாஜக அரசு ஏற்கவில்லை
¶ இந்திய தொல்லியல் துறை ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பாக திகழ்கிறது!
இந்திய தொல்லியல் துறை - ஏஎஸ்ஐ ஆர்எஸ்எஸ் பிடியில் உள்ளது. இந்தியாவில் நடைபெறும் தொல்லியல் முடிவுகளில் ஆரியசார்பு, ஆர்எஸ்எஸ் சார்பு ஆய்வாளர்கள் தொடர்ந்து தலையீடு செய்கின்றனர். அவர்களது முடிவுப்படி, இந்தியாவில் இரும்பு பயன்பாடு காலம் கிமு 1300- 1400 தான். அதிலும் தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாட்டு காலம் கிமு 600 மட்டுமே ஆகும். அதாவது, வட இந்தியாவில் தான் இரும்பு முதலில் தோன்றியதாகவும், தமிழ்நாடு மிகத் தாமதமாக தான் இரும்பு நாகரிகத்துக்கு வந்ததாகவும், அதுவரை வேட்டையாடும் சமூகமாகவே தமிழர் நாகரிகம் இருந்ததாகவும் அவர்கள் விளக்கி வந்தனர். தமிழ்நாடு நிலப்பரப்பில், காலத்தில் தொன்மையான இரும்பு தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்ட ஒவ்வொரு முறையும், 'ஓரிடத்தில் மட்டும் கிடைத்தால் போதாது, பல்வேறு இடங்களிலும் இதேமாதிரியான காலகட்ட முடிவுகள் கிடைக்க வேண்டும்' எனவும் ஆய்வுகளை புறந்தள்ளி வந்தனர்.
இப்படியாகத் தான், இரும்பு கனிமவளம் செறிந்த சேலம் மாவட்ட தெலுங்கானூரில் கண்டறியப்பட்ட உருக்கு/ ஊட்ஸ் எஃகிலான வாள் ஒன்றின் முனையில் எடுத்த துகளின் கரிம காலக் கணக்கீடு மற்றும் ஹைதராபாத் பகுதியில் அகழாய்வு ஒன்றில் கிடைத்த இரும்பு துகளின் ஆய்வு முடிவுகள் கிமு 2000 யை கடந்தபோதும், இந்திய தொல்லியல் துறை அவற்றை நிராகரித்தது.
¶தமிழர் நாகரிகத்தின் தொன்மை தொடர்ச்சியாக ஏன் மறுக்கப்படுகிறது ?
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம் 'ஒற்றை தேசம், ஒற்றை பண்பாடு, ஒற்றை மொழி, ஒற்றை வரலாறு' என்பதாகும்; இது பிற அனைத்து இனங்களின் வரலாறு, பண்பாடு - பாரம்பரியங்களை நிராகரிக்கிறது. தமிழர் தொன்மையை ஏற்பது, ஆரியப் பெருமிதத்திற்கு எதிராக திராவிடத்தை ஏற்பதாகவும், வேதகால நாகரிகம், சரஸ்வதி நாகரிகம் என்ற பெருமைக்கு எதிராக தமிழர் நாகரிகத்தின் தொன்மையை அங்கிகரிப்பதாகும். இது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் தற்கொலைக்கு ஒப்பானதாகும். எனவே தான், பாஜக - ஆர்எஸ்எஸ் தமிழ்மொழி, பண்பாடு /கலாச்சாரம், வரலாற்றுக்கு உரிய அங்கீகாரம் தருவதில்லை.
¶ இந்தியா பற்றிய ஆர்எஸ்எஸ் சித்திரமும், குருஜி கோல்வால்கர் சிந்தனைகளும்,
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் - ஆர்எஸ்எஸ், 1925 ஆம் ஆண்டு டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவரால் நிறுவப்பட்டது என்றாலும், அவரது வாரிசான மாதவ் சதாசிவ் கோல்வால்கரின் சித்தாந்தத்தை தான் அடிப்படையாக கொண்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு ஹெட்கேவரின் மரணத்திற்குப் பிறகு, குருஜி கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ் ஸின் சர்சங்சாலக் - தலைவராகப் பொறுப்பேற்றார் ; 1973 ல் இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார். எம்எஸ். கோல்வால்கரின் எழுத்துக்கள் மற்றும் உரைகள் கொண்ட "சிந்தனைகளின் தொகுப்பு" , இன்றுவரை சங்கத்தின் கீதா உபதேசமாக உள்ளது.
ஆர்க்டிக், அண்டார்டிக் எனப் படும் வட, தென் துருவங்கள் 130 மில்லியன் ஆண்டுகளாக இருந்த இடத்திலேயே இருக்க, "ஆரியர்கள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வரவில்லை. பீஹாருக்கு அருகில் இருந்த ஆர்க்டிக்தான் வடக்கு நோக்கி நகர்ந்துவிட்டது. அதில் வாழ்ந்த ஆரியர்கள் பீஹாருக்கு அருகிலேயே இருந்து விட்டனர். ஆரியர்கள் புலம் பெயர்ந்தவர்கள் அல்ல, இந்தியாவின் பூர்வகுடிகள் தான்" என எம்எஸ் கோல்வால்கர் எழுதியிருக்கிறார். இப்படியாக அறிவியலற்ற, வரலாற்று புரட்டுகள் கொண்ட ஆரிய பெருமிதத்தை கட்டமைப்பதையே, சங்கப் பரிவாரம் தொடர்ந்து செய்துவருகிறது.
¶ கலாச்சார துறை ஆர்எஸ்எஸ் பள்ளியில் பயின்றவர்கள் பிடியில் உள்ளது!
கடந்த 2023 செப்டம்பரில் தமுஎகச அமைப்பு மாநாட்டில், சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து மீது, "சனாதனத்துக்கு எதிராக யார் பேசினாலும் நாக்கை பிடுங்குவோம். கண்களையும் தோண்டுவோம் " எனப் பேசியவர் தான், இந்தியாவின் தற்போதைய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆவார். இவரது நேரடிப் பொறுப்பில் தான் இந்திய தொல்லியல் துறை உள்ளது. அதன் கூடுதல் தலைமை இயக்குநராக 2021 ம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டு, தற்போது வரை பணியாற்றி வரும் அலோக் திரிபாதியும் கடைந்தெடுத்த சங்கி ஆவார். எனவே தான், தமிழ்நாட்டின் இரும்பின் தொன்மையை பாஜக ஆட்சி ஏற்க மறுக்கிறது.
¶தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உறுதியாக நிறுவிட, ஆரிய - ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மீதான கருத்துப் போராட்டங்களை தீவிரப்படுத்திட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)