பரவலாக எதிர்க்கப்பட்ட வேளாண் அவசர சட்டத்தை மோடி அரசாங்கம் மசோதாவாக மாற்றி, பின்பு நாடாளுமன்றத்தின் எதிர்ப்புகளை சுக்குநூறாக்கி சட்டமாக மாற்றி 14 மாதங் களுக்குப் பிறகு, இதுவரை கண்டிராத விவசாயி களின் எதிர்ப்பியக்கத்துக்கு பிரதம மந்திரி தலை பணிந்து, பிரச்சினைக்குரிய 3 வேளாண் சட்டங்க ளையும் நீக்கி விடுவதாக அறிவித்திருக்கிறார். துணிச்சல் மிக்க, விடாப்பிடியான மக்களின் இயக்கம் கொடுங்கோன்மை ஆட்சியை மண்டி யிடச் செய்திருக்கிறது. அரசு அதிகாரத்தின், ஆளும் மேட்டுக்குடியின் அராஜகத்தையும் மிருகத்தனத்தையும் மக்களின் சக்தி அடிபணிய வைத்த அந்த தருணம் வரலாற்று நிகழ்வாக என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். நரேந்திர மோடி, பின்னோக்கி திரும்பும் (ஹி tuக்ஷீஸீ) இந்த அறிவிப்பை வெளியிட சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் பிறந்த தினத்தை தேர்ந்தெடுத்திருந்தார். கோபமடைந்திருக்கும் சீக்கிய சமூகத்தினரை சமாதானப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் வரவிருக்கும் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் அதிக இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ஐயப்பாட்டை கணக்கில் கொண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பது வெள்ளிடை மலை.
மோடியின் ஊடக செல்லப் பிள்ளைகளாக இருந்து எல்லா நேரத்திலும் வேளாண் சட்டங்களை உற்சாகமாக வரவேற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், கருத்தாளர்கள் இப்போது தார்மீக நெறியிழந்து, மிகவும் குழப்பமுற்று காணப்படுகின்றனர். சிலர் இந்த அரசாங்கம் மற்ற பிரச்சனைகளான குடியுரிமை திருத்த சட்டம், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ஆகிய வற்றிலும் கூட வளைந்து கொடுக்குமோ என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இதை ராஜதந்திரியின் புத்திசாலித்தனம் என அழைக்கிறார்கள். இன்னும் சிலர் இதை தேச நலனில் இருந்து உந்தித்தள்ளப் பட்டதாக சொல்கிறார்கள். வேறு சிலரோ காலதாமதமான இந்த அறிவிப்பை சிறந்த தேர்தல் வியூக நெத்தியடி என்பதாக காண்கிறார்கள். ஒரு செல்ல ஊடகத்தின் மேலாளர் இந்த பின்வாங்குதலை, சிங்கம் காலை இரண்டடி பின்னே நகர்த்தி வைப்பது என்பது தன் இரையின் மீது கவ்வி பாய தயாராக இருப்பது தானே தவிர, விட்டு விட்டு ஓடுவதற்கு அல்ல என்று சொல்லி ஒப்பிடுகிறார்.
மோடியின் இந்தத் தேர்தல் வியூக நெத்தியடி பாஜகவின் இழப்புகளை எந்த அளவு குறைக்கும் என்பதையும் எந்த அளவு துல்லியமாக விவசாயிகள் மீது அதன் தாக்கம் இருக்கும் என்பதையும் காலம்தான் சொல்ல வேண்டும். விவசாயிகளை அரக்கர்களாக காண்பித்து அவர்கள் இயக்கத்தை நசுக்க, பிளவுபடுத்த, அதன் தார்மீகத்தை இழக்கச் செய்ய, மதிப்பிழக்க வைக்க எல்லா தந்திரங்களையும் கையாண்டு முயற்சித்த பின்பும் அரசாங்கம் தோல்வி கண்டது என்ற உண்மை மட்டும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. உண்மையிலேயே விரக்தியுற்ற, நம்பிக்கையற்ற, பீதியில் இருக்கும் இந்த அரசாங்கம்தான் வேளாண் சட்டங்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. போராட்டக் களத் திலிருக்கும் விவசாயிகளும் நீதி, ஜனநாயக, மக்கள் உரிமைக்காக போராடக்கூடிய இதர சக்திகளும் இந்தத் தருணத்தை கைப்பற்றி இன்னும் பெரிய வெற்றிகளை நோக்கி முன் தள்ள வேண்டும்.
இந்த மிகப்பெரிய வெற்றியை சாத்தியமாக் கியது எது? இந்திய அரசும் சக்திமிக்க அரசாங்கங்களும் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு இந்தியாவின் விவசாயிகளை பகைத்துக் கொள்ள முடியாது, புறக்கணிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கம் மாபெரும் விவசாயிகளின் எழுச்சி, கலகத்தால் குறிக்கப்பட்டிருக்கிறதாகும். இந்திய விவசாயி களின் துடிப்புமிக்க பங்களிப்பால் சுதந்திரப் போராட்ட இயக்கம் தாக்குப் பிடித்து நிற்க வைக்கப்பட்டு, இறுதியில் காலனிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் காரணமாக இருந்தது.1947க்கு பிறகு நடைபெற்ற ஒவ்வொரு சமூக, அரசியல் கொந்தளிப்பிலும் விவசாயிகளும் இளைஞர்களும் முன்னணி பாத்திரம் வகித்தனர். கடந்த 30 ஆண்டுகளிலும் கூட இந்துத்துவ அரசியலும் சந்தை ஆளுமையின் பொருளாதார மும் உலகமயமும் பொதுவாக வளர்ச்சி முகத்தில் இருந்த போதும் விவசாயிகள் இயக்கம் பல சந்தர்ப்பங்களில் அந்த கட்டுகளை உடைத்தி ருக்கிறது.
1894 நில ஆர்ஜித சட்டத்தை சிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வந்தது. கார்ப்பரேட் நலனை அடிப்படையாகக் கொண்ட நில கையகப் படுத்தல் மற்றும் இழப்பீடு சட்டம் 2013 ஐ மோடி சீர்குலைக்க முயற்சித்தபோது விவசாயி களும் பழங்குடியினரும் அதை வெற்றிகரமாக முறியடித்தார்கள். மோடியின் 7 ஆண்டு கால ஆட்சியில் இரண்டாவது முறையாக அரசாங் கத்தை விவசாயிகள் பின்னுக்கு தள்ளியிருக்கி றார்கள். நாடுமுழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான விவசாய சங்கங்களை செயல்பாட்டின் அடிப்ப டையில் ஒன்று திரட்டி, அந்த ஒற்றுமையை தக்கவைத்து, பிரித்தாளும் சங்பரிவாரின் மதவாத பிரச்சாரத்தை புறக்கணித்து விவசாயிகள் இயக்கம் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறது. பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தானிகள் என்று முத்திரை குத்தி குறிவைத்து தனிமைப்படுத்த நினைத்த போது, ஹரியானா விவசாயிகள் அவர்களோடு இணைந்து நின்று நவம்பர் 26 அன்று டெல்லி எல்லைப்பகுதியில் கூடாரங்களை அமைத் தார்கள். ஜனவரி 26 (குடியரசு தினத்தன்று) தவறுதலாக வழி நடத்திய ஊடக பிரச்சாரம், ஒடுக்குமுறைக்கு பிறகு மேற்கு உத்தரபிரதேச விவசாயிகள், இயக்கத்திற்கு புதிய காற்றையும் வலிமையையும் கொடுத்தார்கள். லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்குப் பிறகு மொத்த நாடும் ஒன்றுபட்டு எழுந்தது.
அரசாங்கமும் சங்படையும் ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டு, சதித்திட்டங்கள் தீட்டி, போராடும் விவசாயிகளை அரக்கர்களாக காட்டி இயக்கத்தை நசுக்க எந்த அளவு முயற்சித்தார்களோ அந்த அளவு விவசாயிகளின் ஒற்றுமையும் நெஞ்சுரமும் எஃகு போல் புடம் போடப்பட்டது. விடாப்பிடியான, தீர்மான கரமான விவசாயிகளின் போராட்டங்கள், மற்ற உழைக்கும் மக்கள் பிரிவினரின் பெருகி வரும் அனுதாபத்தைப் பெற்றது. நவம்பர் 2 ,அன்று அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் மக்களின் கோபாவேசம் தேர்தல் களத்திற்கு சென்று விட்டதை தெள்ளத்தெளிவாக காட்டியது. எதிர்க்கட்சிகள் பிளவு பட்டும் வலுவிழந்தும் இருந்த நேரத்தில் விவசாயிகளின் ஒன்றுபட்ட இயக்கம் களத்தில் வளர்ந்துவரும் எதிரணியாக எழுந்து வந்தது. எதிரணி அரசியல் கட்சிகளி லிருந்து சுதந்திரமாக தன்னை இருத்திக் கொண்ட அதேவேளை, விவசாயிகளின் ஒன்றுபட்ட மேடை, பாஜகவுக்கு எதிரான துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்தது. பாஜகவின் தேர்தல் தோல்வியை உத்தரவாதம் செய்ய எல்லா இடங்களிலும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. பரந்த ஒற்றுமை மற்றும் துணிச்சலான அரசியல் குரல் என்ற விவசாயிகள் இயக்கத்தின் இந்த இரண்டின் சேர்க்கை வேறுவழியில்லாமல் ஒட்டுமொத்தமாக சட்டங்களை நீக்க வேண்டிய நிலைக்கு மோடி அரசாங்கத்தை தள்ளியது.
இந்தப் போராட்ட காலகட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழக்க நேரிட்டது குறித்து விவசாயிகளிடம் மோடி மன்னிப்பு கோரவில்லை.சிலர் நேரடியாக மோடியின் கட்சி, அதன் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறை காரணமாகவும் மற்றும் சிலர் திறந்த வெளியில் மோசமான தட்பவெப்ப நிலையில் நீண்ட நாட்கள் இருக்கும்படி தள்ளப்பட்டதன் காரணமாகவும் உயிரிழந்திருக் கின்றனர். விவசாயிகள் மீதும் விவசாயிகள் இயக்கத்தின் மீதும் அவருடைய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் வசைபாடியதற் காகவோ அல்லது விவசாயிகளை ஆதரிக்கும் செயல் வீரர்களை குறிவைத்து நாடாளுமன்றத் தில் அவமதிப்புக்குறிய 'அந்தோலன் ஜீவி' என்ற சொல்லாடலை தான் குறிப்பிட்டது பற்றியோ அவர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. மாறாக, அவர் வேளாண் சட்டம் வழங்கப் போவதாக இருந்த பயன்கள் பற்றி ஒரு பிரிவு விவசாயிகளை தன்னால் இணங்க வைக்க முடியவில்லை என்பதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். டீசல் மற்றும் உர விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதாக வும் சாகுபடிக்கான விலை உயர ஏறி வருவதை குறைப்பது குறித்தும் அவர் எதுவும் பேச வில்லை. அதற்கு மாறாக, அவர் பூஜ்ஜிய பட்ஜெட்டில் விவசாயம் செய்வது குறித்தும் புதிய சட்டங்களை வடிவமைக்க புதிய குழு உருவாக்கப்படுவது குறித்தும் பேசியுள்ளார்.
சட்டங்கள் உண்மையிலேயே திரும்பப் பெறப்படும் வரையும் எல்லா விளை பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம், மின்சார மசோதாவை திரும்பப் பெறுதல் உட்பட இயக்கத்தின் மற்ற கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வரையிலும் போராட்டத்தைத் தொடர்வது என விவசாயிகள் சரியாகவே முடிவு செய்துள்ளார்கள். மோடியின் புதிய நெத்தியடி நடவடிக்கை, பெருந்தன்மை குறித்து அவரது செல்ல ஊடகங்கள் மாயைகளை பரப்பட்டும். பெரும் தொற்று காலத்திற்கு நடுவே சக்தி வாய்ந்த இயக்கத்தை கட்டி எழுப்பி தொடர்ந்து எடுத்துச் சென்றதற்கும் பாசிச ஆட்சியின் அராஜகம், ஒடுக்குமுறையை சந்தித்து போராட்டத்தை வெற்றிக்கு இட்டுச் சென்றதற்கும் இந்தியா விவசாயிகளுக்கு வணக்கம் செலுத்தும். நடைபெறும் ஒவ்வொரு மக்கள் இயக்கமும் விவசாயிகளிடமிருந்து உத்வேகத்தையும் துணிவையும் பெற்றுக் கொண்டு மோடி&ஷா&- யோகி ஆட்சியின் பாசிச திட்டத்தை முறியடிக்க சக்திவாய்ந்த எதிர் தாக்குதலை தொடுக்க வேண்டிய நேரம் இது.
‘லிபரேஷன்’ டிசம்பர் 2021
தமிழாக்கம் - தேசிகன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)