காக்சிச் சீருடையா- அல்லது சிவப்புத் துண்டா?

                                                                                                     ரஞ்சனி

பொய் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு  காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்பட்ட தன் கணவனைத் தேடி அலைந்த ஆதிவாசிப் பெண்ணுடைய உண்மைக் கதையை அடிப்படை யாகக் கொண்டு உருவாக்கப்பட்டஜெய் பீம்திரைப்படம் சாதிய ஒடுக்கு முறையின், காவல்துறையினரின் மிருகத்தனத்தின், எளிய மனிதர்களுக்கு எட்டாத சட்ட நிறுவனங்களின் அசிங்கமான முகத்தை அம்பலப்படுத்தி நம் மனதை உலுக்குகிறது. தங்கள் குடும்பத்தினர் சிறையில் இருந்து வெளியே வரும்போது அழைத்துச் செல்வதற்காகக் காத்திருக்கும் ஏழை மக்கள்தான் முதல் காட்சியே. அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, சிறையில் இருந்து வெளியே வரும் ஒடுக்கப்பட்டவர்கள் கீழ் சாதி  அடிப்படையில் பிரிக்கப்பட்டு, உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாததால், வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் பல்வேறு காவல்நிலையங்களுக்கு பொய் வழக்கு போடு வதற்காக பிரித்து அனுப்பப்படுகிறார்கள். 12 பேர் மீது பொய் வழக்கு போடுகிறது போலீஸ். அதில் ஒருவரின் குடும்பம் கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரின் உதவியால் வழக்கறிஞர் சந்துருவாக நடித்துள்ள சூர்யாவின் மூலம் நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஏதும் அறியாதவர்களின் அறியாமையை நிரூபிக்க, புனையப்பட்ட பொய் வழக்குகளையும் அதில் தொடர்புடைய அதிகாரியையும் அம்பலப்படுத்த என அவரின் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.

வழக்கறிஞர் சந்துரு, ஒரு கலகக்காரர், ஒரு கம்யூனிஸ்ட், பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுகிறார். போராட் டங்களை தலைமை ஏற்று நடத்துகிறார். மனித உரிமைப் பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறார். செங்கேணியாக வரும் லிஜிமோல் ஜோஸ், காணாமல் போன தன் கணவனைக் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டிமுதியோர் கல்வித் திட்ட ஆசிரியரின் உதவியுடன் அவரைச் சந்திக்கிறார். திரைப்படம் நீதிமன்ற நடவடிக்கை களையும் அந்த நடவடிக்கைகள் மூலம் செங்கேணியின் கணவர் ராஜாக்கண்ணுவாக வரும் கே.மணிகண்டன் காணாமல் போனதில் உள்ள மர்மம் வெளிக்கொணரப்படுவதையும் ராஜாக்கண்ணு காவல்நிலையச் சித்தவதையால் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்பதையும் திறம்படக் காட்டியுள்ளது.

ஒரு பக்கம் அடிப்படை உரிமைகள், வாய்ப்புகள், வசதிகள் மறுக்கப்பட்ட ஆதிவாசிகளின் அவல நிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது திரைப்படம். சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள அவர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படை குறைந்தபட்ச உரிமைகள் கூட உத்தரவாதமில்லை. அவர்களை மோசமாக நடத்தவும் பாகுபாடு காட்டவும் சுரண்டவும் கேள்வி கேட்க முடியாத அதிகாரம் உள்ளவர்களாக ஒவ்வொருவரும் உள்ளனர். பரம்பரை பரம்பரையாக எலி பிடித்தலும் பாம்பு பிடித்தலையும் பாம்புக் கடிக்கு சிகிச்சை அளிப்பதையும் செய்து வரும் எளிய, நாடோடி சமூகத்தினர் வேலை பார்க்கும் இடங்களில், அக்கம் பக்கத்தில், அரசு அலுவலகங்களில் கொடூரமாக வஞ்சிக்கப்படுகிறார்கள்.

இன்னொரு பக்கம் வழக்கின் ஊடேயேபல்வேறு பிரச்சினைகளில் ஒதுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் அவர்களுக்காக யாரும் இல்லாததையும் அந்த சமூகத்தினருக்கு நீதி மறுக்கப்படுவதையும் படிப்படியாக விவரிக்கிறது திரைப்படம். செங்கேணியின் அதிர்ச்சியளிக்கும், இடைவிடாத போராட்டத்தின் வாயிலாக, ஒட்டுமொத்த பழங்குடியின மக்கள் மீதும் பொய்க் குற்றம் சுமத்தும் அருவருக்கத்தக்க குற்ற நடவடிக் கையை கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது. தாங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்வதற்கு காவல் நிலையங்களில் நடக்கும் மூன்றாம் தர சித்தரவதைகளையும் அதனைத் தொடர்ந்து அவர்கள் தண்டிக்கப்படுவதையும் திரைப்படம் சமரசமின்றி வெளிப்படுத்தியுள்ளது. தாங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுப்பவர்கள் கொடூரமான சித்தரவதைக் குள்ளாக்கப்பட்டு இறுதியில் இறந்து போகிறார் கள் ராஜாக்கண்ணுவைப் போல. காவல் நிலையத்தில் இருந்து தப்பிவிட்டார்கள் என்ற பின்னணியில் ஒட்டு மொத்த சமூகத்தினரும் பயமுறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக  பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கும் மற்றொரு யுத்தியும் கையாளப்படுகிறது.

காவல்துறையின் அத்துமீறல்கள் என்பது  ராஜாகண்ணு வழக்கில் மட்டுமில்லை ஆதிவாசி மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவது என்பது ஒரு தொடர் செயல் என்பதை ஆரம்பத்தில் இருந்தே திரைப்படம் கண் முன்னே காட்டுகிறது. கிராமத்தில் நடக்கும் கூட்டத்தில் .ஜி. பெருமாள்சாமியிடம் போலீஸ் கொடுமையால் தாங்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதைச் சொல்கிறார்கள். ஒரு பெண், தன் கணவர் பொய்க் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைப்பதற்காக தான் எந்தளவிற்கு பாலியல் வன்முறையை அனுபவித்தேன் என்று கூறுவதைக் கேட்கும் போது  நமக்குப் பதறு கிறது. ராஜாக்கண்ணுவின் அக்கா பச்சையம்மா, காவல் நிலையத்தில் ஆடை அவிழ்க்கப்பட்டு, தன் சகோதரன் மற்றும் உறவினர்கள் முன்பு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார். காவல் துறையினர் ஆபாச வார்த்தைகளால் செங்கேயையும் பச்சையம்மாவை திட்டுகிறார்கள். மேலும் காவல்துறை சட்ட விதிகளையயெல்லாம் காற்றி பறக்கவிட்டுவிட்டு, செங்கேணியை ஒரு பெண்ணை, அதுவும் நிறைமாதக் கர்ப்பிணியை இரவில் அடித்து இழுத்து கைது செய்கிறது. படம் காவல்துறையின் ஆணாதிக்கப் போக்கை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

சாட்சிகள் அடிப்படையிலான சட்ட விசாரணையை, நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் இப்படம் மிகச் சிறப்பாகவே இதுவரை இல்லாத வகையில் காட்டியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் சாட்சிகள் வேண்டும் அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவும் வேண்டும். காவல்நிலையப் படுகொலைகளில், பொய் வழக்குகளில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே குற்றவாளிகளாக இருக்கும் போது, அதிகாரிகளும் அரசு எந்திரமும் அவர்கள் பின்னால் இருக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அவ்வளவு எளிதாக  அவர்களை எதிர்த்துப் போரிட்டு விட முடியுமா? சந்துரு போன்ற ஒரு பிரபலமான வழக்கறிஞர், மக்களுக்காகப் பாடுபடக்கூடியவரே பல இன்னல்களைச் சந்தித்து, கடும் முயற்சிகள் மேற்கொண்டு ராஜாக்கண்ணுவின் மரணத்தை நிரூபித்து செங்கேணிக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டியுள்ளது. .ஜி. பெருமாள்சாமியின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த வழக்கு என்னவாகியிருக்கும்? அந்த வகையில், காவல் துறையின் அத்துமீறல்களையும் ஊழலையும் அம்பலப்படுத்தும் அதேவேளை அதே நிறுவ னங்கள் மீது ஒருவித நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்தத் திரைப்படம். அரசியலமைப்புச் சட்டத்தின் வழியிலான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றபோதும் அது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை இயக்குநர் ஞானவேல் எடுத்துரைத் துள்ளார். ஆதிவாசிகளுக்கும் எளிய மக்களுக்கும் இந்த அரசியலமைப்புச் சட்ட வழிகள் எல்லாம்  எட்டாக் கனிதான். எத்தனைபேர் நீதிமன்றத்தை நாட முடிகிறது? எத்தனை பேருக்கு சந்துரு போன்ற வழக்கறிஞர் கிடைக்கிறார்? எத்தனை பேர் இந்த நீண்ட நெடிய போராட்டத்தை வலியுடன் எதிர்கொள்வார்கள்-? பெரிய கேள்வி தான். ஜனரஞ்சக சினிமாவின் எல்லைக்குள் இருந்து கொண்டே கம்யூனிஸ்ட் கட்சி, மனுக் கள் கொடுப்பதை, போராட்டங்கள் நடத்துவதை, கம்யூனிஸ்ட் வழக்கறிஞரை, வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களைக் கொண்டு வருவதை, அதன் மூலம் வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதையெல்லாம், நீதியைப் பெறும் நெடும் பயணத்தில் வழக்கறிஞர் சந்துருவை பிரதானமாகக் காட்டியபோதும், படம் பிடித்துக் காட்டியுள்ளது.

சந்துரு ஒரு கம்யூனிஸ்ட் என்பதை இப்படம்  அடையாளப்படுத்துவதை யாரும் பார்க்காமல் கடந்து போய்விட முடியாது. செங்கொடியோடு மக்களுடன் நின்று போராடுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது, அரிவாள் சுத்தியல் போட்ட துண்டறிக்கைகள் கொடுப்பது, சிவப்புத் துண்டு போட்டவர்களுடன் உரையாடுவது, கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உட்கார்ந்து பேசுவது, மெரினா கடற்கரையில் தொழிலாளர் சிலை முன்பு போராட்டம் நடத்துவது என்று சந்துரு ஒரு கம்யூனிஸ்ட் என்பதை படம் தெளிவாகவே காட்டியுள்ளது. அவர் அலுவலகத்தில் கார்ல் மார்க்ஸ், அம்பேத்கார், பெரியார் படங்கள். செங்கேணியுடன் அவர் பேசும்போதெல்லாம் கார்ல் மார்க்ஸின் படம் அவர் பின்னால் தெரிகிறது. அதுபோல் படத்தின் இறுதிக் காட்சியில் லெனின் சிலை காட்டப்படுகிறது. இந்தப்படம் மக்களுக்காக எந்த அளவிற்கு கம்யூனிஸ்ட்டுகள் அர்ப்பணிப்புடன் செயல்படு கிறார்கள் என்பதை நேர்மறையாகக் காட்டி யுள்ளது இப்படம். சந்துரு பாத்திரம்தான் பிரதானமானது என்றாலும் கூட, படம் தனி மனித துதி பாடலுக்கு எதிராகப் பேசுகிறது. மலர் மாலையும் துண்டுடனும் வருபவர்களிடம் இங்கு யாரும் கடவுள் இல்லை, மாலையும் துண்டும் வேண்டாம் என்று அவர் வீட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. சந்துருவின் வாழ்க்கை முறை ஒரு கம்யூனிஸ்ட் வாழ்க்கை முறை. எளிமையான வீடு. தானே சமைக்கிறார். இரயிலிலும் மோட்டார் பைக்கிலும் பயணம். சிறிய கடைகளில் சாப்பாடு, டீ. செங்கேணி யையும் அவர் குழந்தையையும் தன் வீட்டிலேயே தங்க வைத்து பாராமரிப்பது. இவையெல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் வாழ்க்கை முறை. அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பது வெளிப்படையாகவேத் தெரிகிறதுசூர்யா போன்ற நட்சத்திர நடிகர்கள் இது போன்ற பாத்திரங்களில் நடிப்பது என்பது மய்ய நீரோட்டச் சினிமாவில் எளிதில் காணமுடியாதது.

காவல்நிலையப் படுகொலையை மட்டு மின்றி, ஆதிவாசி மக்கள் பிரச்சினைகளான மனைப்பட்டா, கொத்தடிமைத் தொழில், குறைவான சம்பளம், கல்வியின்மை, கௌரவ மின்மை, வாக்குரிமையின்மை போன்றவற்றையும் இத்திரைப்படம் பேசுகிறது. அதுபோல மற்ற வழக்குகள், சம்பளம் கூடக் கேட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆவின் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள்  ஆகியவற்றைக் காட்டி யிருப்பதன் மூலம் படம் தொழிலாளர் சார்பு, அரசு நிறுவன எதிர்ப்பு நிலையையும் எடுத்துள்ளது. இப்படம் பல இடங்களில் காக்கிச் சட்டை எதிர் சிவப்புத் துண்டு என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது. உண்மையில் மார்க்ஸையும் அம்பேத்காரையும் போற்றுகிறது. ஒட்டு மொத்தத்தில் செங்கேணியின் கஷ்டமான வாழ்க்கையில், பயந்து வாழும் ஆதிவாசி மக்களிடத்தில் ஒரு சிறு சிவப்பு நம்பிக்கை ஒளியைக் காணமுடிகிறது.

                                                                                    தமிழாக்கம் -சங்கரந்தம்பி