தலையங்கம்
பாசாங்கு செய்யவேண்டாம்... மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை வேண்டும்
உக்ரைன் போர் உக்கிரமடைந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் செத்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் எல்லைக்கு வருவதற்காக கிளம்பி வந்தபோது குண்டு விழுந்து மரணமடைந்துள்ளார். பல மாணவர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியே வர வழியின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை நடந்தாவது எல்லைக்கு வந்துவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், எம் தலைவர் மோடி, ஆப்கானிலே, ஐரோப்பாவிலே, லிபியாவிலே, சிரியாவிலே மக்களைக் காப்பாற்றியதுபோல், உக்ரைனில் இருந்து மாணவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டார் என்று, 250 மாணவர்களை மட்டும் மீட்டு வந்துவிட்டு, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள். ஆனால், பல ஆயிரக்கணக்கில் மாணவர்கள் உக்ரைனில் உணவின்றி, தண்ணீரின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய தூதரக அதிகாரிகள் கொடுத்த தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டால், கட் செய்து விடுகிறார்கள் என்று கூறுகிறார்கள் அங்குள்ள மாணவர்கள். எல்லைக்கு எப்படியாவது வரச் சொல்லும் இந்திய அரசு, உக்ரைன், ரஷ்ய அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும் இந்திய தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டால் பாதுகாப்பாக வந்துவிடலாம் என்றும், பாகிஸ்தான் மாணவர்கள் கூட இந்தியக் கொடியை பிடித்துக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்றும் சமூக வலைத் தளங்களில் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் எல்லைக்கு வந்தவர்களைக்கூட அழைத்து வருவதற்கு மத்திய அரசிடம் ஒரு விமானச் சேவைகூட கிடையாது. இருந்த ஒரே விமானச் சேவை ஏர் இந்தியாவையும் விற்றுவிட்டார்கள். இந்திய இராணுவப் படை விமானங்கள் போர் நடக்கும் இடங்களுக்குள் இஷ்டத்திற்கு எல்லாம் செல்ல முடியாது. கார்கிவ் நகருக்கும் எல்லைக்கும் 800 கி.மீ. தூரம் வரை இருக்கும் என்று காணொலியில் மாணவர்கள் தங்கள் கவலைகளைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சங்கிக் கூட்டமோ அகப்படும் மாணவர்கள் கையில் பாஜக கொடியைக் கொடுத்து, தங்களைக் காப்பாற்றிய மோடிக்கு நன்றி எனச் சொல்ல வைக்கிறார்கள். மோடியோ, “எதற்காக நீங்கள் வெளிநாடு போய் படிக்க வேண்டும். இந்தியாவிலேயே படித்தால் இந்தப் பிரச்சினை வராதே. இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகள் துவங்க தனியாருக்கு மாநில அரசுகள் நிலம் ஒதுக்கித் தர வேண்டும்” என்கிறார். இந்தியாவில் படியுங்கள், அரசே உங்களுக்கு மருத்துவம் படிபதற்கு ஏற்பாடு செய்யும் என்று சொல்லவில்லை. தனியார் முதலாளிகள் மருத்துவக் கல்லூரி துவங்குவார்களாம். அதில் படிக்க வேண்டுமாம். 50 லட்சம் ஒரு கோடி ரூபாய் செலவு என்பதால்தான் இந்திய மாணவர்கள் வெளிநாடு செல்கிறார்கள். கர்நாடகா மாநில மாணவர் நவீன் பியுசி தேர்வில் 97% மதிப்பெண் எடுத்தும் அவருக்கு நீட் தேர்வால்தான் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் உக்ரைன் சென்று இப்போது மரணமடைவிட்டார். குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள்தான் இப்படி வெளிநாடு போய் பின் தவிக்கிறார்கள் என்று வாய்கூசாமல் பேசுகிறார்கள் சங்கி அமைச்சர்கள். உருப்படியாக எதையும் செய்யாத மோடி, உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கக் காரணம், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளே என்று உத்தரபிரதேச பிரச்சாரத்தில் உரையாற்றுகிறார். இப்படி பொய்யான, பாசாங்கு நடவடிக்கைகளை விட்டுவிட்டு, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர உரிய நடவடிக்கையே இப்போது வேண்டும். போர் வேண்டாம். அமைதி வேண்டும். கல்வி வேண்டும். சுகாதாரம் வேண்டும்.
Thanks Manjultoons