வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பொறுப்புகளில் இருந்து நழுவிச் செல்லும், பிரதமரின் பொய்யுரைகள்
நிதிநிலை அறிக்கை மீதான நாடாளுமன்றக் கூட்டத்தின் முடிவில் உரையாற்றிய பிரதமர், முன்னெப்போதும் இல்லாத அளவிலுள்ள வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், கோவிட் தொற்றில் பல உயிர்கள் பலியான மிக மோசமான பொறுப்பற்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட, அனைத்து தளங்களிலும் அவருடைய அரசாங்கத்தின் செயல்பாடு பற்றிய விமர்சனங் களுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. நிதிநிலை அறிக்கையில், "அமுத காலம்", "பாரதம்@100" என்ற இலக்கு போன்ற வெற்றுச் சொல்லாடல்களைத் தவிர, குறிப்பான அர்ப்ப ணிப்புமிக்க செயல்பாட்டைக் கோரும் கேள்விகளுக்கு எந்தவித பதில் வினையும் ஆற்ற வில்லை. மாறாக, அனைத்து சிக்கல்களுக்கும் எதிர்க் கட்சிகளை குற்றம் சாட்டுவது, அப்பட்டமான பொய்களை கட்டவிழ்த்து விடுவது என்ற முன்கூட்டியே கணிக்கக்கூடிய, தற்போது அனைவருக்கும் தெரிந்து விட்ட, அவருடைய தந்திரங்களிலேயே ஈடுபடுகிறார்.
2015இல், பிரதமமந்திரியும், 2015 இன் நிதிநிலை அறிக்கையும், இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு நிறைவைக் குறிக்கும் "அமுத ஆண்டு" 2022 க்கான, பல்வேறு தொடர் வாக்குறுதிகளை அறிவித்திருந்தனர். அவை, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவது, கடன் வழங்குவதை எளிதாக்க நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களை சிறுகடன் வங்கிகளாக மாற்றுவது, அனைவ ருக்கும் நல்ல குடிநீர், கழிப்பிட வசதி, ஒரு குடியிருப்பு, 24/7 மின்சார வசதி, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சாலைத் தொடர்புகள் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஆகும். 2022 இல், பிரதம மந்திரியும் 2022க்கான நிதிநிலை அறிக்கையும், மேற்குறிப்பிட்ட இந்த வாக்கு றுதிகளை செயல்படுத்துவதிருந்து தவறி விட்டதைப் பற்றி ஒட்டுமொத்தமாக மௌனம் சாதிக்கின்றனர். மாறாக, அதே வாக்குறுதிகள் புதிய அறிவிப்புகளாக திரும்ப ஒப்புவிக்கப்பட் டுள்ளன அல்லது மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரே வேறுபாடு என்னவென்றால், 2015இல், இந்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் போது, 2022 ஆம் ஆண்டு "அமுத ஆண்டாகும்" (இறவாப் புகழ் கொண்ட) என சொல்லப் பட்டது; ஆனால் 2022 இன் நிதிநிலை அறிக்கை நாம் "அமுத சகாப்தத்திற்குள்" நுழைந்திருக் கிறோம் என அறிவித்திருக்கிறது. ஆக, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பாரதம்@100 -- அது இந்தியா விடுதலைப் பெற்ற நூறாவது ஆண்டில் நிறைவேற்றப்படும் என நமக்கு உறுதி அளித்திருக்கிறது! மோடி அரசாங்கத்தின் உண்மையான முன்னேற்றம், செயல்பாடு குறித்து எந்தவித பொறுப்பேற்பும் இல்லை: மாறாக, இலக்கிற்கு ஒரு புதிய "கவர்ச்சி"கரமான பெயர் வைக்கப்பட்டு, 25 வருடங்களுக்குத் தள்ளிவைக் கப்பட்டு விட்டது!
நிதிநிலை அறிக்கை 2022, 60 லட்சம் வேலைகளை உருவாக்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறது: எங்கிருந்து இந்த வேலைகள் வரப்போகின்றன என்பதற்கான எந்தவொரு விரிவான விளக்கமும் இல்லை! அரசாங்க பணிகளில் உள்ள மாபெரும் எண்ணிக்கை யிலுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான எந்தவித திட்டங்களும் அதில் இல்லை - படித்த, வேலையற்ற இளைஞர்கள் இந்தக் கோரிக்கைக் காக பல்லாண்டுகளாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்; ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ காவல்துறையினரின் தடியடி மட்டுமே. இந்த நிதிநிலை அறிக்கையில் உணவுக்கான மானியங்கள், மகாதேஊவேஉச (விழிஸிநிணிகி), பொது மருத்துவம், பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களை உளவு பார்க்க அரசாங்கக் கருவூலத்திலிருந்து வாங்கப்பட்ட பெகாசஸ் மென்பொருளுக்கு எவ்வளவு செலவானது என்பதைப் பற்றி எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லை. ஆனால், இந்த பிரச்சனை சம்பந்தமாக யார், என்ன கேள்வி எழுப்பினாலும், அப்படி கேள்வி எழுப்பியவர்களை தேசவிரோதிகள் என குற்றம் சுமத்துவதே பிரதம மந்திரியின் எதிர்வினையாக உள்ளது.
பிரதமர் அவருடைய உரையில், எதிர்க்கட்சி யினரை "நகர்ப்புற நக்சல்கள்", "பிரிவினை வாதிகள்" - அனைத்து விமர்சகர்களும் நாட்டின் துரோகிகள் என்னும் அர்த்தத்தில், அவருடைய ஊடக பரப்புரையாளர்கள் இந்த வார்த்தைகளை முன்வைத்தனர் - என்று குறிப் பிட்டார். இதை யெல்லாம் விட மோசமானது, கோவிட் தொற்றில் அரசாங்கத்தின் செயல் பாடுகள் பற்றி அப்பட்டமான பொய்களை அவிழ்த்து விட்டார். பொது முடக்கத்தில் ஆங்காங்கே மாட்டிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களைத் திரும்ப அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்க, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த, மகாராஷ்டி ராவின் காங்கிரஸ் அரசாங்கமும் டெல்லியின் ஆம் ஆத்மி அரசாங்கமுமே தொற்று பரவுவதற் கான காரணகர்த்தாக்கள் என குற்றம் சுமத்தினார். உத்தரபிரதேசத்தின் முதலமைச்சர் அவருடைய மாநிலத்திலுள்ள வாக்காளர்களிடம், முடக்கத்தி னால் தவித்துக் கொண்டிருந்த தொழிலாளர் களுக்கு இந்த பேருந்துகளை ஆரம்பத்திலேயே ஏற்பாடு செய்தது அவர் மட்டுமே, வேறு யாருமல்ல என்று பொய்யாக உரிமை கொண்டா டியதற்குப் பிறகும், கொஞ்சம்கூட வெட்கமின்றி பிரதம மந்திரி இதைச் சொன்னார்! அதேபோன்று பிஜேபி தான், "புலம்பெயர் தொழிலாளர்களைப் பத்திரமாக வீடுகளுக்கு திரும்ப அழைத்து வந்தது" என பீகார் தேர்தலின்போது வாக்காளர் களிடம் பாஜக பீற்றிக்கொண்டது.
ஊடகங்களின் ஆதிக்கம் செலுத்துகிற பிரிவு பிரதம மந்திரியின் பொய்களைப் பற்றி பீற்றிக் கொள்ளலாம். ஆனால், இங்கு ஏழைகளுக்கு குடியிருக்க வீடுகள், குடிப்பதற்கான தண்ணீர், கழிப்பிட வசதிகள், சாலைகள், வேலைகள், கடன்கள், மின்சார வசதி எதுவுமில்லை என்பதை யார் வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்; விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகவில்லை; உண்மையில், வேலையில்லா திண்டாட்டம், பசி, விவசாயிகளின் துயரங்கள் எப்போதையும் விட இப்போது மிகவும் மோசமாகி விட்டது. பெருந்தொற்று சமயத்தின் போது, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப, அவர்கள் செல்லும் வழியில் தாக்குதல் கள், நோய், இறப்பு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு, நீண்ட தொலைவு நடந்தே பயணம் செய்யவேண்டியிருந்ததை ஒவ்வொரு வரும் நினைவில் கொள்ளலாம். கோவிட் தொற்றை பரப்பியது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்ல; கும்பமேளாவும், பிரதமர் நடத்தியே தீரவேண்டுமென்று வலியுறுத்திய வங்காள தேர்தல் பேரணிகளும் தான், இந்தியாவில் மிகப் பெரிய அளவிற்கு மனிதர்களைப் பலி கொண்ட, கொடிய கோவிட் இரண்டாவது அலைக்கான காரணங்கள் என்பதை ஒவ்வொருவரும் நினை வில் கொள்ள முடியும். மேலும், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ மனையில் படுக்கை வசதிகளின் கொடிய பற்றாக்குறையே மிகப் பெரும்பாலான இறப்புகளுக்கு காரணம் என்பதையும் நினைவில் கொள்ளலாம்.
பிரதமரின் பொய்யுரைகளையும் நிதிநிலை அறிக்கையில் துரோகத்தையும் கணக்கில் கொண்டு, இந்தியாவின் மக்கள் தேர்தல்களில் வாக்களிப்பார்கள், தெருக்களில் போராடுவார்கள்.
எம்எல் அப்டேட் - தலையங்கம்
8-14 பிப் 2022
தமிழாக்கம் - செந்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)