டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்த சந்திப்பு மன நிறைவைத் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார் முதல்வர். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், அது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை வேண்டும் என்றும் நியூட்ரினோ திட்டம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் அது கைவிடப்பட வேண்டும் என்றும் கூடங்குளம் அணுஉலையில் உருவாகும் அணுக் கழிவை அங்கு சேமித்து வைக்காமல் ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்ப வேண்டும், தமிழகத்தின் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சர்களிடம் முன் வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேவேளை, நீட் தேர்வு ரத்து பற்றி தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, நீட் தேர்வுக்கான பயிற்சி, நீட் தேர்வுக்கான விண்ணப்பம் கோருதல் போன்றவையும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது மாணவர்களின் மனங்களை மறைமுகமாக நீட் தேர்வை நோக்கிய பயணத்திற்கு நகர்த்துவதாகிவிடாதா-? மார்ச் 28,29 தேதிகளில் இந்தியா முழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள் மிகப் பிரம்மாண்டமான இரண்டு நாள்கள் வேலை நிறுத்தத்தை நடத்திக் காட்டினார்கள். அதில் ஒரு முக்கியமான கோரிக்கை 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது. அது பற்றி தமிழக முதல்வர் அவர்கள் கோரிக்கையை பிரதமரிடம் முன் வைக்கவில்லை. ஏன்? இலங்கையில் நிலவும் பஞ்சம், அதனால் அங்குள்ள தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளதை வரவேற்போம். அதேவேளை தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், ரயில்வே துறையில், மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் பெருமளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முதல்வர் அவர்கள் வைத்திருக்கலாமே. தெலுங்கானா, கர்நாடகாவைப் போல 80% இடங்களைத் தமிழர்களுக்கே வழங்கிடப் பொருத்தமான சட்டத்தை தமிழ்நாட்டிலும் இயற்றிடலாமே. நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் சென்னை முதல் குமரி வரை ஆறு வழிச்சாலை அமைக்கவும் பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படாமல் உள்ளது அதை நிறைவேற்றும்படியும் கோரியுள்ளார் முதல்வர். ஆனால், எட்டுவழிச் சாலை அமைக்கப்படக் கூடாது என்று தமிழ்நாட்டு விவசாயிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கையையும் முதல்வர் அவர்கள் முன் வைத்திருக்கலாமே. டெல்லி பயணம் மேற்கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஸ்டாலின் அவர்கள் அமேசான் அலுவலகத்தை திறந்து வைத்து, அதுவும் தனக்கு மன நிறைவு அளிக்கிறது என்று சொன்னார்கள். அமேசான் வந்தால் தமிழ்நாட்டில் உள்ள சிறு வணிகர்கள் பலர் காணாமல் போவார்கள் என்பது எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும்போது அமேசான் போன்ற நிறுவனங்களை அனுமதிப்பதும் இயற்கை வளங்களை அழிக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்களை அமல்படுத்தக் கோருவதும் அரசாங்க வேலைகளுக்குப் பதிலாக தனியார் நிறுவனங்களைக் கொண்டு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துவதும் பாஜகவின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகச் சொல்லும் அதேவேளை இல்லம் தேடிக் கல்வி என்று அதன் வழியே செயல்படுவதும் ஒரு மக்கள் நல அரசின் செயலாகக் கருத முடியுமா?