சித்த மருத்துவப் பல்லைக்கழகத்தின் துணை வேந்தராக முதல்வரே இருப்பார் என்று சென்னையில் அறிவித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின், மதுரை வந்தார். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதியம் பெறுகின்ற மற்றும் நிரந்தரமற்ற பணியாளர்கள் (CPCLR) 136 பேர் சின்னகுயில் குடி சந்திப்பில் கையில் மனுவோடு எதிர்கொண்டனர். காமராஜர் பல்கலைக் கழகத்தில், புதிய துணைவேந்தர் பதவியேற்ற அன்றே எடுத்த நடவடிக்கைதான் CPCLR  தொழிலாளர்களின் வேலையைப் பறித்தது! மனுவை 'படித்து பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன்'என்று முதல்வர் சொன்னதாகத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.

ஒரு பக்கம் துணைவேந்தரை அரசே நியமிக்கும் என்று தமிழக அரசு நிலையெடுக்க, நானே அனைத்தையும் செய்வேன் என்று மாநில ஆளுநர் கம்பு சுத்த அதிமுக எதிர் திமுக மோதலைக் காட்டிலும் திடீர் திருப்பங்கள் நிறைந் ததாக ஆளுநர் முதல்வர் மோதல் இருக்கிறது.

பிரச்சனையின் ஆழத்தைக் கண்டுகொள்ள நாம் அரசியல் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவர் அம்பேத்கர் சொன்னதிலிருந்து துவங்குவோம்:

''அரசியல் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று கோட்பாட்டாளவில் நாம் விரும்பு கிறோமோ, அவ்வாறே அரசியல் சட்டம் இருக்க வேண்டும் என்றால், மாநிலத்தின் ஆளுநர், வேறு எப்படியும் அல்லாமல், சுத்தமான அரசியல் சட்ட ஆளுநராக இருக்க வேண்டும்; மாநிலத்தின் நிர்வாக விவகாரங்களில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது.’

அம்பேத்கரின் இந்த கரிசனம் இன்று நம்முன் யதார்த்தமாகியிருக்கிறது. காங்கிரஸ் மத்திய ஆட்சியிலிருந்தபோது மாநில ஆளுநர்களின் தலையீடு இருந்தது. ஆனால், அவை ஆட்சிக் கலைப்புக்கு பரிந்துரை என்ற அளவிலிருந்தன. பாஜக ஆட்சிக்கு வந்தபின்னரே, அரசியல் சட்டத்தையே மறுக்கும் காவி அரசியலின் கையாளாக ஆளுநர் செயல்படுவது திட்டமிட்ட வகையில் நடைபெறுகிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை சிதைக்கும் முயற்சிகளின் ஒன்றாக இருக்கிறது

அதிமுக ஆட்சி காலத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் மாவட்டங்களுக்கு பயணம் போவதும் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து அறிக்கை பெற்றுப் பரிசீலிப்பதும் செய்ய ஆரம்பித்தார். அதாவது, மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசின் முதல்வருக்கு அளிக்கப் பட்ட அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார்.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரைத் தேர்வு செய்யும் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதுதான் பல்கலைக்கழக சட்டங்களின் படி ஆளுநரின் வேலை. ஆனால், அதனையும் தாண்டி தலையீடு செய்வதை, தானே முடிவெடுப்பதைத் தமிழ்நாடு மாநிலத்தின் முந்தைய ஆளுநர் செய்து வந்தார், தற்போதிருக்கும் ஆளுநரும் செய்து வருகின்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முந்தைய துணை வேந்தர் காலத்தில் பல்லைக்கழக வளாகத்துக்குள் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. அதற்கு முந்தைய துணை வேந்தர் செல்லத்துரையின் (இவர் மீது SAVE MKU பேராசிரியர் சீனிவாசனைத் தாக்கிய கிரிமினல் குற்றம் ஒன்று நாகமலை புதுக் கோட்டை காவல்நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது) காலத்தில் பல்கலைக்கழகத்துக்குள் நிர்மலா பிரச்சனை என்று அறியப்பட்ட பாலியல் குற்ற பிரச்சனை எழுந்தது. இப்பிரச்சனையில் மாநில ஆளுநரின் பெயரும் அடிபட்டது

மருத்துவப் படிப்புகளில் சேர கட்டாய மாக்கப்பட்டுள்ள நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா உள்பட தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்துகிறார்பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ஆளுநர்தனிப்பட்ட கண்ணோட்டத்தில்செயல்பட முடியாது என்று ஆர்.என்.ரவியின் தலையில் குட்டியுள்ளது. எந்தவொரு அரசியல் சட்ட அலுவலரும், அரசியல் சட்டத்தின் படியான தன் கடமைகளை நிறைவேற்ற முடியுமே தவிர ஆர்எஸ்எஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி போலச் செயல்பட முடியாது.

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான சுதா சேஷையனின் பதவிக் காலம் சென்ற டிசம்பருடன் முடிந்துவிட்டது. புதிய துணை வேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகளின்படி தேடுதல் குழு அமைக்கப் பட்டு அது விருப்பமுள்ளவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்று மூன்று பேரைத் தேர்ந்தெ டுத்து ஆளுநரிடம் அளித்துவிட்டது. அதன்பின் ஆளுநர் ஆர் என் ரவி செய்திருக்க வேண்டியது அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதுதான். ஆனால், ஆளுநர் தன் மனம் போன போக்கில் மூவர் பட்டியலைத் தள்ளுபடி செய்துவிட்டு, சுதா சேஷையனின் பதவிக் காலத்தை நீட்டித்துள்ளார். இது நடப்பில் உள்ள பல்கலைக் கழக சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான செயலாகும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்எழுந்து வரும் புதிய உலகத்தில் இந்தியாவின் பாத்திரம்என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு ஒன்றை நடத்தினார். மாநிலத்தின் 13 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக் கின்றனர். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பதவியைப் பயன்படுத்தி, இதுவரை ஆளுநர்கள் யாரும் செய்யாத வேலையைச் செய்துள்ளார். பாரதீய ஜனதா அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான பிரச்சாரம் செய்ய துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டியுள்ளார்.

ஊட்டியில் மாநாடு துவங்கிய முதல் நாள் அன்றுதான் தமிழக பல்லைக்கழகங்களின் வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு, வேந்தருக்கு அல்ல என்ற மசோதாவை ஸ்டாலின் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். மாநில பல்கலைக்கழகங்களின் மீது மாநில உரிமையைக் காக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. அரசியல் சட்டத்தைத் தகர்த்து ஒற்றை இந்தியா என்ற பாசிச இந்தியாவை கட்டமைக்கும் பாஜகவின் முயற்சியை நாடாளுமன்ற அரசியல் அரங்குக்குள் எதிர்த்து நிற்கும் போக்காக இதனை பார்க்க வேண்டும். அதிமுக போன்ற கட்சிகளின் காவி ஆதரவு நிலைக்கு மாற்றாக, இருக்கும் அரசியல் சட்ட அமைப்புக்குள் சட்ட- அரசியல் போராட்டம் நடத்துவதாக திமுக அரசின் முயற்சி இருக்கிறது.

மக்கள் தங்களின் வாழ்வை தீர்மானித்துக் கொள்வதே ஜனநாயகம். தங்களை தாங்களே நிர்வாகம் செய்து கொள்வதற்கான உள்ளாட்சி, பிரதேச அளவிலான அரசியல் பொருளாதார நிர்வாகத்துக்கு மாநில அரசு, இவற்றின் கூட்டமைப்பாக, ஒட்டு மொத்த நாட்டுக்குப் பொதுவான அம்சங்களை நிர்வகிக்கும் நிறுவனமாக ஒன்றிய அரசு என்பதே இந்திய அரசியல் சட்டத்தின் வரையறை. இந்த வரை யறையைச் சிதைத்து வேறுபாடுகள் இல்லாத ஒன்றே போன்ற கற்பனை இந்தியாவை உருவாக்கும் முயற்சியின் ஒரு அங்கம்தான் ஒரே நாடு - ஒரே அரசு என்ற போக்கு. இது இந்தியா வின் பன்முகத்தன்மையில் நிலவும் ஒற்றுமையைச் சிதைத்து, இந்தியாவை அழித்துவிடும்

ஒற்றை இந்தியாவை உருவாக்க முயற்சி செய்யும் தீவிர வலதுசாரி பாசிச அரசியலின் கையில் உள்ள இந்தியா மேலும் மேலும் மாநில அதிகாரங்களைப் பறித்து வருகிறது. இதற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டம் என்ற வகையில் புதிய சட்டம் இயற்றும் திமுக தலைமையிலான மாநில அரசின் முயற்சி பாராட்டுக்குரியது.

ஆனாலும், தமிழ்நாட்டின் உயர் கல்விப் பிரச்சனைகள் இன்னமும் தீவிரமானவை. மத்திய அரசின் கையாளாக ஆளுநர் இருந்துகொண்டு செய்யும் சில்லறை அரசியலை எதிர்ப்பதற்கு அப்பால் இன்னும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.

உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்று தமிழக முதல்வர் மகிழ்ச்சி கொள்கிறார். ஆனால், உயர்கல்வி படிக்கத் தயாராக உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர் கல்வி நிறுவனங்கள் இல்லை என்ற பிரச்சனை நீடிக்கிறது. அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் குறைவாக இருக்கின்றன. கல்வி பெருமளவு தனியாரின் கையில் இருக்கிறது. தற்போதைய உயர் கல்வி அமைச்சரே ஒரு கல்வி நிறுவனத்தின் அதிபர் என்பதே சொல்ல வேண்டிய செய்திகளை சொல்லும்.

இருக்கும் உயர் கல்வி நிறுவனங்களில் சுயநிதி நிறுவனங்களின் செல்வாக்கு கூடுதலாக இருக்கிறது. அரசு நிர்ணயம் செய்ததை விடக் கூடுதல் கொள்ளை கட்டணத்தைத் தனியார் சுயநிதி கல்லூரிகள் வசூலிக்கின்றன. சமூகத்தின் மேல்தட்டு பிரிவினருக்கு கலை-அறிவியல் பாடங்களை அளிப்பதாக இவை இருக்கின்றன. அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகளின் உதவியோடு, அரசின் பாராமுகத் தோடு சுயநிதி நிறுவனங்களின் கட்டணத்தை விடச் சற்று குறைவான கட்டணத்தை வசூலிக் கின்றன. விளைவாக, ஏழை மாணவர்களுக்கான படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.   மதுரையில் நடைபெற்று வரும் எஸ்விஎன் கல்லூரியின் கட்டணக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் இந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

அரசு கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், அரசு உதவிப் பெறும் நிறுவனங்களில் பல கோடிகள் புரளும் ஊழல் தொழில்துறையாக ஆசிரியர்கள் நியமனம் உள்ளது. திமுக அல்லது அதிமுக புள்ளிகளின் சொடுக்குக்கு ஏற்றால் போல ஒரு வேலைக்கான லஞ்சப் பணம் அமைகிறது. உயர் கல்வித்துறை அதிகாரிகள், திமுக-&அதிமுகவின் உயர் கல்வித்துறை மந்திரிகளின் சொத்துக் கணக்குகளை சரிபார்த்தால் உயர் கல்வி ஆகப்பெரும் ஊழல் கல்வித் துறையாக இருப்பது தெரியவரும்.

திமுக, அதிமுக என்று எந்த வேறுபாடும் இல்லாமல், நியமனம் செய்யப்பட்ட துணை வேந்தர்கள் பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு புறம்பாகப் பல்கலைக்கழகங்களை நடத்து கின்றனர். கொள்ளையடிக்கின்றனர். மதுரை பல்கலைக்கழகத்தில் மட்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் ஆட்சேபனைக்குரிய செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கை சொல்கிறது. பல்கலைக்கழகத்தின் காப்பு நிதியாக (நிரந்தர வைப்பு நிதியாக) கொடுக்கப்பட்ட 200 கோடியில் 14 லட்சம் மட்டுமே பாக்கியுள்ளது.

மத்திய அரசின் கல்வி தாராளமயமாக்கம் உயர்கல்வியை வணிகக் கல்வியாக மாற்றுவதை நோக்கிச் செல்கிறது. உயர் கல்வியில் சேர்வதற்கு நீட் போன்ற கியூட் தேர்வை திணிக்கிறது. கல்வியின் தரத்தைச் சீரழிக்கிறது. ஆய்வுகளை தனியாருக்கு அளித்துவிடுவதாக இருக்கிறது.

இந்த சூழலில், தமிழ்நாட்டுக்கான தனி கல்விக்கொள்கையை உருவாக்குவோம் என்று சவால் விட்டுச் செயல்படும் திமுக அரசு, மாநிலத்திற்கான தனித் தன்மை வாய்ந்த கல்விக்கொள்கையை உருவாக்கிடுமா? அல்லது நவ தாராளவாத மத்திய கல்விக்கொள்கையின் தமிழக- முற்போக்கு திராவிட பதிப்பை வெளியிடுமா?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிதிநிலை மோசமாகியுள்ளது. ஊழலுக்கும், திறமையற்ற நிர்வாகத்திற்கும் பெயர்பெற்ற நிறுவனமாக இப்பல்லைக்கழகம் மாறியுள்ளது. பல்கலைக்கழகத்தின் செலவில் 500 கோடிக்கு மேல் முறையற்ற செலவுகள் என்று தணிக்கை அறிக்கை சொல்வதை மேலே சொன்னோம். இப்போது, செலவை சுருக்குவதற்காக 136 தற்காலிக பணியாளர்களை வாய்மொழி வேலை நீக்கம் செய்துள்ளார் புதிய துணைவேந்தர். 136 தொழிலாளர்களின் ஆண்டு சம்பளமே மொத்தமாக சுமார் 1.5 கோடிதான். 500 கோடி அளவுக்கான முறையற்ற செலவுகளை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டிய பல்கலைக்கழகம் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கடைநிலை ஊழியர்களைப் பட்டினியில் தள்ளியுள்ளது.

இதற்கு எதிராக மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு (SAVE MKU) குரல் கொடுத்து பிரச்சனையை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது. பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்கச் செய்யப்பட வேண்டியவை பற்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளது. திராவிட கட்சிகள் நியமித்த துணைவேந்தர்களின் காலத்தில் அடிக்கப்பட்ட கொள்ளையை எதிர்த்தும், சீரழிவுகளைக் கண்டித்தும் குரல் கொடுத்த கல்விச் சமூகப் பிரதிநிதிகளின் அமைப்பாக ஷிணீஸ்மீ விரிஹி உள்ளது. இதுபோன்ற அமைப்புகளை அரசு ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும்.   

பல்கலைக்கழகங்களில் காவிகளின்/ஒன்றிய அரசின் குறுக்கீடுகளை தடுக்க மாநில அரசு விரைந்து சட்டம் கொண்டுவந்தது போலஉயர் கல்விப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கொள்கை/ நிர்வாக முடிவுகளைத் தமிழக அரசு எடுக்குமா? அல்லது மத்திய கல்விக்கொள்கையின் தமிழக பதிப்பாகச் சுருங்குமா?

மாணவர் இயக்கங்களும், ஆசிரியர்- ஊழியர் அமைப்புகளும், கல்வியை பாதுகாப்பதற்கான பரந்துபட்ட இயக்கங்களும், இடது சாரி கட்சிகளும் எந்த அளவுக்கு திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே தமிழக கல்வியின் எதிர்காலம் அமையும்.