2020 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மாகாகட்பந்தன் கூட்டணியில் இகக (மாலெ), இகக, இகக (மா), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. 19 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 12 தொகுதிகளில் வெற்றிபெற்று முதன்மையான இடது கட்சியாக முன்வந்திருக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதற்குமுன் பலமுறை வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் இந்தமுறை அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் சென்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதளம்-&பாஜக கூட்டணி வேட்பாளர்களை அதிக இடங்களில் தோற்கடித்து இகக (மாலெ) பெரும்பாலான வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி நாடுமுழுவதுமுள்ள இடதுசாரி ஆர்வலர்களை புத்துணர்ச்சி பெற வைத்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில இடதுசாரி கட்சிகளிலிருந்து இகக(மாலெ) வை நோக்கி திரும்புவதும் அதிகரித்திருக்கிறது.

அமர்ஜீத் குஷ்வாஹா, சத்ய த்யோ ராம், கோபால் ரவிதாஸ், சந்தீப் சௌரவ், மனோஜ் மன்ஸில், சுதாமா பிரசாத், அஜித் குமார் சிங், அருண்சிங், மஹாநந்த் சிங், ராம்பாலி சிங் யாதவ், மகபூப் ஆலம், பிரேந்திர பிரசாத் குப்தா ஆகிய 12 சட்டப்பேரவை உறுப்பினர்களுள் பெரும்பாலானோர் தலித், மிகவும்  பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினரை சேர்ந்தவர்கள். வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அனைவருமே மக்கள் போராட்டங்களில் ஊறித்திளைத்தவர்கள். பலரும் இளைஞர்கள். சட்டப்பேரவை கட்சித்தலைவரான மகபூப் ஆலம் 5வதுமுறையாக வெற்றிபெற்றவர். ஜிரேதி தொகுதியின் அமர்ஜித் குஷ்வாஹா சிறையிலிருந்தே போட்டியிட்டு வென்றவர்.

பீகார் சட்டப்பேரவை அமைக்கப்பட்டு ஓராண்டு ஆறுமாதங்களாகியுள்ள நிலையில் இகக (மாலெ) சட்டப்பேரவை உறுப்பினர்களது செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ள, சமீபத்தில் புவனேசுவரில் நடைபெற்ற அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்க தேசிய செயற்குழுக் கூட்டத்தின் போது, அய்ந்தாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ள சத்ய த்யோ ராம், முதல் முறை சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ள பிரேந்திர பிரசாத் குப்தா இருவரிடமும் தீப்பொறி சார்பாக உரையாடினோம். உரையாடலின் சுருக்கத்தை வாசகர்களுக்கு தருகிறோம்:

 

தீப்பொறி: இம்முறை அதிக எண்ணிக்கை யில் பீகார் சட்டப்பேரவைக்குள் சென்றிருக் கிறீர்கள். அனுபவம் எப்படி?

ஆனாலும் அரசியல் காட்சிகள் இன்னமும் மேலாதிக்கமுள்ள அரசியல், வர்க்க சக்திகளின் காட்சிகளாகவே உள்ளன. நாங்கள், வறியவர்கள், அடித்தட்டு மக்களின் பிரதிநிதிகளாகவே செயல்படுகிறோம். நாங்கள் சட்டப்பேரவைக்கு வெளியே தலித்துகள், பெண்கள், சிறுபான்மை மக்களது உரிமைகளுக்காக போராடுகிறோம். காவல்துறை அத்துமீறலுக்கெதிராக போராடு கிறோம். அதே பிரச்சனைகளுக்காக சட்டப் பேரவைக்குள்ளும் குரலெழுப்புகிறோம்.

பீகார் ஆளும் அரசாங்கம், மிக மோசமான மசோதா ஒன்றை கொண்டு வந்தது. பிகார் சிறப்பு ஆயுத காவல்துறை மசோதா, 2021 என்று பெயரிடப்பட்ட இந்த மசோதா, குடிமக்கள் எவரொருவரையும் பிடிஆணை இல்லாமல் கைது செய்வதற்கான அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கும் மிகக் கொடூரமான மசோதா அது. இந்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் எங்களது கடும் எதிர்ப்பைக் காட்டினோம். அதேசமயம் இந்த மசோதாவை எதிர்த்து சட்டப்பேரவைக்கு வெளியிலும் எதிர்க்கட்சி களோடு சேர்ந்து போராட்டம் நடத்தினோம். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 அன்று (2021) மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி நடத்திய இந்தப் போராட்டத்தில் காவல்துறை நகை முரணாக மிருகத்தனமான வன்முறையை ஏவியது. பீகார் முழுவதுமுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் எமது போராட்டத்துக்கு ஆதரவளித்தன.

மதுபனியைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஹரிபூஷன் தாக்குர் பச்சூல், இஸ்லாமியர்களது வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். அவரது பேச்சை கண்டித்து சட்டப் பேரவையில் பிரச்சனையை எழுப்பினோம். கடும் அமளி நிகழ்ந்தது. மார்ச் 2022ல் எழுப்பப்பட்ட இந்த பிரச்சனையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இடதுசாரி உறுப்பினர்களும் எம்முடன் சேர்ந்து கொண்டனர். இறுதியாக அந்த குறிப்பிட்ட உறுப்பினர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டி வந்தது.

தீப்பொறி: வேறு குறிப்பான போராட்டங்கள் பற்றி கூற முடியுமா?

பிகாரில் மணல் மாபியாவின் கொட்டம் மிகமோசமானது. சோன் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடத்தும் இந்த கும்பலுக்கு காவல்துறை, ஆட்சியாளர் மத்தியில் பெரும் செல்வாக்கு உண்டு. இந்த மணல் மாபியாவுக்கு எதிராக மக்கள் ஒருமுறை போராட்டம் நடத்தினர். அப்போது, இந்த மாபியா கும்பல் போராடிய பெண்கள் உட்பட மக்களை கட்டிப் போட்டுவிட்டு மணல் கொள்ளை அடித்தன. காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தது. உடனடியாக நாங்கள் சட்டப்பேரவையில் இந்த பிரச்சனையை எழுப்பினோம். அரசு செயல்பட்டாக வேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி காவல்துறை, கடடிப் போடப் பட்ட மக்களை விடுவித்ததோடு மணல் மாபியாக்களையும் கைது செய்தது. இந்தப் பிரச்சனையை மா லெ சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே எழுப்பினோம் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவிதமான ஒடுக்குமுறையென்றாலும் உடனடியாக நாங்கள் அதை சட்டப்பேரவையில் எழுப்பத்தவறுவதில்லை. அதேசமயம் சட்டப்பேரவைக்கு  வெளியிலும் இந்த பிரச்சனைகள் மீது போராடவும் தவறுவதில்லை.

தீப்பொறி: நிதிஷ் குமார் 19 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தாரே? அதை நிறை வேற்றினாரா

ஜேடியு-&பாஜக அரசாங்கம் இந்த வாக்குறு தியை நிறைவேற்றவில்லை. பின்வாங்கி விட்டது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் போர்க்குணமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த பிரச்சனையை நாங்கள் சட்டப்பேரவை யிலும் வலுவாக எழுப்பினோம். அரசாங்கம் பதில் கூற முடியாமல் திணறியது. அதேசமயம் சட்டப் பேரவையை முற்றுகையிடும் போராட்டத் தையும் நமது இளைஞர், மாணவர் அமைப்புகள் நடத்தின. நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போர்க்குணமிக்க அந்த போராட்டத்தை இளைஞர், மாணவர் அமைப்பின் தலைவர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களுமான மனோஜ் மன்சில், சந்திப் சவுரவ் ஆகியோர் தலைமை யேற்று நடத்தினர். வேலையில்லா திண்டாட் டத்துக்கு எதிராக பீகாரில் நடந்துவரும் போராட் டத்துக்கு நமது முன்முயற்சி முதன்மைக் காரண மாகும். இது உபியிலும் கூட எதிரொலித்தது.

இதுபோலவே, கிராமப்புறத் தொழிலாளர் பிரச்சனையிலும் சட்டப்பேரவைக்குள்ளும் வெளியிலும் போரட்டம் நடத்தி வருகிறோம். பீகாரில் குறைந்தபட்ச சட்டக்கூலி ரூ 319 என சொல்கிறது. ஆனால் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலையில் வெறும் ரூ 210 மட்டுமே தரப்படுகிறது. சட்டக்கூலி முழுமையாக தரப்படவேண்டும், நூறு நாட்களுக்கு குறை யாமல் வேலை தர வேண்டும், கிராமப்புர தொழிலாளர் அனைவருக்கும் வீட்டுமனை, வீடு வழங்கவேண்டுமென்றும் அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கமும் தேசிய ஊரக வேலைத்திட்டசங்கமும் போராட்டம் நடத்தி வருகின்றன. மார்ச் 31 தோழர் சந்திரசேகர் நினைவுநாளன்று, மிகப்பெரிய சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்தினோம். அதேசமயம் சட்டப்பேரவையிலும் இந்த பிரச்சனையை எழுப்பினோம். இது மிகப்பெரிய அளவில் கிராமப்புர தொழிலாளர் பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக எழுப்புவதற்கு காரணமாக இருந்தது.

தீப்பொறி: சமீபத்தில் மாலெ சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டனரே?

ஆம். நாங்கள் அனைவரும் அவைக்காவலர் களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டோம். இது ஜனநாயகத்தின் மீதான மிகப் பெரிய தாக்குதல்! நிதிஷ்குமார்&-பாஜக கூட்டணி ஆட்சியில் வளர்ந்து வரும் குற்றநடவடிக்கைகள், ஊழல், பெண்கள், தலித், சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறை, மதவெறி அரசியல் பற்றி அவை விவாதிக்க வேண்டுமென்று கோரி ஒரு ஒத்திவைப்பு தீரமானத்தைக் கொண்டுவர முயற்சித்தோம். அவையின் ஜனநாயக முறை களுக்குட்பட்டு நாங்கள் அந்த தீர்மானத்தைக் கோரினோம். ஆனால், சபாநாயகரோ அப்பட்டமான முறையில் எங்களது கோரிக் கையை நிராகரித்துவிட்டார். ஆனால், நாங்கள் எங்களது கோரிக்கையை விடாமல் எழுப்பிக் கொண்டிருந்தோம். மாநிலத்தின் மிக முக்கிய மான பிரச்சனையில் ஒரு அவை விவாதத்தை அனுமதிப்பதற்குப் பதிலாக எங்கள் அனை வரையும் அவைக்காவலரை வைத்து வெளியேற் றுமாறு உத்தரவிட்டார். நாங்கள் அனைவரும் மிகமோசமான முறையில் தர தரவென்று இழுத்துவந்து வெளியில் தள்ளப்பட்டோம். ஆனால் அவைக்கு வெளியிலும் எங்கள் கோரிக்கையை தொடர்ந்து எழுப்பினோம். ஆளும் அய்க்கிய ஜனதாதளம்&-பாஜக அரசாங்கம் சர்வாதிகார முறையில் எங்களை அவையிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற்றிருந்தாலும் பீகார் முழுவதும் இந்தப் பிரச்சனையை ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையாக எழுப்புவதில் நாங்கள் வெற்றிபெற்றோம். மாநிலத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் எங்களது குரலுக்கு சட்டப்பேரவைக்கு வெளியே வலுசேர்த்தன என்பது மிக முக்கியமானது.

தீப்பொறி: மகாகட்பந்தனில் உள்ள கட்சிகள் உங்களது போராட்டத்தில் என்ன நிலை எடுக்கிறார்கள்?

சில பிரச்சனைகளில் ஆர்ஜேடி, பிற இடது கட்சிகள் எங்களுடன் சேர்ந்து நிற்கிறார்கள். பாஜக கட்சியை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா சபாநாயகர். அண்மையில் இவர் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கான டிக்கட்டுளை சட்டப்பேரவைக்குள்ளேயே பலருக்கும் வழங்கினார். சபாநாயகரது இந்த அத்துமீறிய அடாவடி செயலை நாங்கள் மிக வன்மையாக எழுப்பினோம். இந்த பிரச்சனையில் ஆர்ஜேடி, இகக, இகக(மா) கட்சி உறுப்பினர்கள் எங்களு டன் சேர்ந்து குரலெழுப்பினர்.

ஆனால், வளர்ந்துவரும் குற்ற நடவடிக் கைகள், மதவெறி குறித்து நாங்கள் பிரச்சனை எழுப்பி வெளியேற்றப்பட்டபோது அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். எங்களது போராட்டம் தொடர்கிறது. இகக(மாலெ) சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்ற பொதுமக்கள் எண்ணம் எங்களுக்கு கூடுதல் ஊக்கமளிப்பதாக உள்ளது.

எங்களது போராட்டம் தொடரும் என்று கூறி நம்பிக்கையுடன் நேர்காணலை நிறைவு செய்தார்கள்.