பாலியல் வன்முறை உள்ளிட்ட தொடர் குற்றங்களுக்கு காரணமான சக்தி இன்டர்நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியை உடனடியாக மூடவேண்டும்!.
மாணவி, மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத மெட்ரிக், சிபிஎஸ்ஈ தனியார் பள்ளிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
பத்மசேஷாத்ரி, சுஷில் ஹரி, பரணி பார்க் பள்ளிகள், வேல்ஸ் பல்கலைக் கழக கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசிய காவல்துறை தலைவர் பதவி விலக வேண்டும்.
கள்ளக்குரிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகிலுள்ள சக்தி மெட்ரிக் பள்ளியின் +2 மாணவியின் மரணம் மாநிலம் முழுவதும் மீண்டுமொரு அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கிறது. பள்ளி நிர்வாகம் கூறுவது போல் இது தற்கொலை என்று நம்புவதற்கு துளி ஆதாரமும் இல்லை. ஏற்கனவே பாலியல் வன்முறை உள்ளிட்ட பல குற்றக் கறைகள் படிந்துள்ள நிர்வாகம் கூறுவதை ஏற்கமுடியாது. மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு உறவினர்களும் பொதுமக்களும் கள்ளக்குரிச்சியில் போராடிக் கொண்டிருக்கும் போது "போராட்டக் காரர்கள்" பள்ளிக்குள் புகுந்து கடும் சேதம் ஏற்படுத்தி விட்டதாக நீதிகோருவோர் மீது பழிசுமத்தும் செயல் பள்ளி நிர்வாகத்தின் மீது வலுமிக்க சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் போலீஸ் எவரும் இல்லாத காட்சிகள், காவல்துறை தனது பணியிலிருந்து ஒதுங்கி நின்று பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மற்றொருபுறத்தில், ஏராளமான இளைஞர்களின் கோபமும் இந்த பள்ளியின் மீது திரும்பியுள்ளது. இதிலிருந்து இந்த நிறுவனம் எந்த அளவு கெட்டபெயர் சம்பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் இதுபோன்ற கொடுமைகளால் ஏற்பட்டுள்ள கோபமும் இந்த தாக்குதல் சம்பவத்தில் வெளிப்பட்டுள்ளது என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
இந்த பள்ளியின் நிர்வாகி பாஜக தலைவர் என்பதோடு அந்த பள்ளியில் "பண்பு பயிற்சி என்ற பேரால் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி பயிற்சிகள் நடத்தியுள்ள இந்த பள்ளியின் பண்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மதம், சாதி, அரசியல் செல்வாக்குடன் விளங்கும் இத்தகைய பள்ளிகள் பெரும்பாலும் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவு வலதுசாரி சக்திகளின் செல்வாக்கிலிருக்கும் பண்பு தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இது போன்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி நடந்துள்ளதும் இதையே காட்டுகிறது. பள்ளிமீது தாக்குதலை கண்டிப்பது என்ற பெயரால் மெட்ரிக் குலேசன், சிபிஎஸ்ஈ தனியார் பள்ளிகளை மூடப்போவதாக அறிவித்துள்ளதன் மூலம், மாணவிகளின் உயிர்களைவிட தங்களின் தடைபடாத கொள்ளைகள், வன்முறைகளே மிகமுக்கியம் என்று காட்டவே இந்த பள்ளிகள் விரும்புகின்றன.
வழக்கம் போல் சில கைதுகள், வழக்குகள் பிறகு குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடுவது என்ற வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மர்மமரணத்துக்குள்ளான மாணவியின் குடும்பத்துக்கு பள்ளி நிர்வாகம் ரூ ஒரு கோடி இழப்பீடு வழங்கிட அரசு உத்தரவிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-CPIML
அகில இந்திய மாணவர் கழகம்-AISA
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்-AIPWA
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)