இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கள்ளக்குரிச்சி மாவட்ட 4வது மாநாடு, 20-08-2022 அன்று, கெடிலத்திலுள்ள தோழர் சம்மனசுமேரி அரங்கம் (கோவிந்தராசு திருமணமண்டபத்தில்) நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. கனியாமூர் பள்ளி மாணவியின் மர்ம மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் எவரும் தப்பிக்கவிடப்படக் கூடாது, கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அந்த குடும்பத்துக்கு பள்ளி நிர்வாகம் ஒரு கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும். 2003 முதல் இப்பள்ளியில் நடைபெற்ற 7 சம்பவங்கள் குறித்தும் முழுவதுமாக விசாரித்து தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு, தனிஅதிகாரியை நியமித்து பள்ளியை ஏற்று நடத்திட வேண்டும். 17ம் தேதி வன்முறையை காரணம் காட்டி, குற்றமற்ற தலித் இளைஞர்களும் ஏழைகளும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர். உண்மைக்குற்றவாளிகள் வெளியில் உலவி்க் கொண்டிருக்க, குற்றமற்றவர் சிறையில் வைக்கப்படுவது கண்டனத்துக்குரியது. குற்றமற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதோடு, அவர்களது கல்வி, வேலைவாய்ப்பு இழப்புக்கு அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கண்மூடித்தனமான கைதுகள், சித்திரவதைக்கு காரணமான காவல் அதிகாரி்கள்,காவலர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள தனியார்,சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் அரசே ஏற்று நடத்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 13 அன்று கள்ளக்குரிச்சியில் பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டது.
2. தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன், மோடி அரசு திட்டத்திற்கான நிதியைக் குறைத்து வேலைநாட்களை சுருக்கி, வேலை செய்வோரது எண்ணிக்கையையும் குறைத்து வருகிறது. மோடி அரசின் இந்த தொழிலாளர் விரோத செயலை மாநாடு கண்டிக்கிறது. 200 நாள் வேலை, நாள்கூலி 500. குடும்பத்துக்கு பெண், ஆண் இருவருக்கு வேலை வழங்கப்படுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். விவசாயத்துக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதோடு பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். தொழிலாளரை போட்டோ எடுக்கும் முறையை கைவிட வேண்டும்.
திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிப்படி கூடுதலாக 50 நாட்கள் வேலை உடனடியாக வழங்கிட வேண்டும். ஒன்றிய அரசிடமிருந்து நிதியை வலியுறுத்திப்பெற்று தாமதமின்றி உடனுக்குடன் கூலியை வழங்கிட வேண்டும்.
3. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறுகிற வகையில் மோடி அரசு மின்சாரத்துறையை தனியாருக்கு விற்கும் மின்சார மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறது. இதனால், இலவச மின்சாரம் பெறும் பல லட்சக் கணக்கான விவசாயிகள், குடிசைவாசிகள், நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த மின்சார மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்துவதோடு இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடும் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்களுடன் இணைந்து போராடவும் முடிவுசெய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு, வீடுகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மீட்டர் கணக்கெடுப்பு நடத்துவதை கைவிட்டு மாதம் ஒரு முறையாக மாற்றிட வேண்டும்.
4. மாவட்டத்தில் லட்சக்கணக்கான தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழைமக்கள் வீட்டுமனை, வீடு இன்றி தவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) நீண்ட காலமாக போராடி சமீபத்தில், திருநாவலூர் ஒன்றியம் கூட்டடியில், குளத்து, தோப்பு புறம்போக்கு ஆக்கிரமிப்பை அரசாங்க அதிகாரிகளைக் கொண்டு அகற்றி, வீட்டுமனை வழங்கும் உறுதியைப் பெற்றிருக்கிறது. இதுபோல மாவட்டம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தலித்துகள், ஏழைகளுக்கு வீட்டுமனை, வீடு குறித்த காலகெடுவுக்குள் வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசை, மாவட்ட நிர்வாகத்தை மாநாடு வலியுறுத்துகிறது.
5. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அனைத்து வேலைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். இதுவரை நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பு, மாற்று இருப்பிடம் வழங்காமல் புதிய விரிவாக்கம் செய்யக்கூடாது என ஒன்றிய அரசை மாநாடு வற்புறுத்துகிறது. இந்த நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நிறுவனத்தையே முழுப்பொறுப்பாக்கிட வேண்டும்.
6. சேந்தநாடு, விவசாய கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்துள்ள பல கோடி ஊழல் முறைகேடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), அகில இந்திய விவசாயிகள் மகாசபை போராடி வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. தாமதப்படுத்தாமல், விசாரணை முடிவுகளை அறிவித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கும் சுயஉதவிக்குழுவினருக்கும் அவர்களது பணம், நகைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மாவட்டம் முழுவதுமுள்ள இந்த வங்கிகளில் ஆய்வுசெய்து முறைகேடுகளைக் களைந்து உண்மை விவசாயிகளுக்கு கடன் வழங்கி விவசாயம் செழிக்க வழிசெய்ய வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.
7. நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அதிகாரிகள், வியாபாரிகளின் முறைகேடுகளை ஒழித்துக்கட்டி விவசாயிகளின் விளபொருள்களுக்கு நியாயமான விலை, விரைந்து கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
8. விவசாய நலிவும் வேலையின்மையும் தீவிரமாக உள்ள கள்ளக்குரிச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திடும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத விவசாயம் சார்ந்த தொழில்களை ஏற்படுத்திட வேண்டும்.
9. கல்வராயன் மலைப்பகுதிகளில் உள்ள மலைவாழ்மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் தீட்டி பாதுகாத்திட வேண்டும். அவர்கள் மீதான காவல்துறையினர், அதிகாரிகளின் ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
10. தனியார் நுண்கடன் நிறுவனங்கள் கிராமப்புர, நகர்ப்புர ஏழைகளிடம் அநியாய வட்டிவாங்கி கசக்கிப் பிழிந்து வருகின்றனர். பெண்களது தன்மானத்தைக் குலைக்கிற வகையில் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களை கந்துவட்டி தடைச்சட்டத்தின்கீழ் தண்டித்திட வேண்டும். ஏழைகளுக்கு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கி பொருளாதார மேம்பாட்டுக்கு வழி செய்திட வேண்டும்.
11. மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது இந்து மதவெறியர்கள், கர்ப்பிணியான பில்கீஸ்பானு இஸ்லாமியப்பெண்ணை கூட்டு வல்லுறவு செய்து அவரது குழந்தையை தரையலடித்துக்கொன்று அவரது குடும்பத்தினரையும் கொன்று குவித்தனர். நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. நான்காண்டுகள் மட்டுமே சிறையில் கழித்த அந்த 11 குற்றவாளிகளின் தண்டனையைக் குறைத்து சுதந்திர நாளன்று, குஜராத் பாஜக அரசு விடுவித்துள்ளது. மோடி-அமித்ஷாவின் குஜராத்தில் நடைபெற்றுள்ள இந்த அருவருப்பான செயலையே இந்தியப் பெண்களுக்கான சுதந்திரநாள் பரிசாக அறிவித்துள்ளனர் பாஜக தலைவர்களும் ஆட்சிகளும். மேலும் சங்க்பரிவார் அமைப்பான விசுவ ஹிந்த் பரிஷத் அமைப்பு அவர்களுக்கு மாலையிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறது. நாடுமுழுவதுமிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் குஜராத் அரசின் இந்த அநீதியான செயலை திரும்பப் பெறுமாறு மோடியும் அமித்ஷாவின் உள்துறை அமைச்சகமும் குஜராத் அரசுக்கு அறிவுறுத்திட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகி்றது.
12. உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவு ரயில் வண்டிகள் நின்றுசெல்வதற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் மக்களவை உறுப்பினரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதுபோலவே, முக்கிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையை அனைத்து நவீன வசதிகளும் கொண்ட, தேவையான மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்களை நியமித்து, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும். உளுந்தூர்பேட்டையில் அரசுகலைக்கல்லூரி கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.
13. சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் திறந்த வெளிகழிப்பறைக்குச் சென்ற 7 இளம் மாணவிகள் ஆற்றிலுள்ள சேற்றில் மூழ்கி இறந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற துயரச்சம்பவங்கள் நடக்காமலிருக்க இம் மாவட்டத்தில் 100 % தனிநபர் கழிப்பறையும் கிராமம் தோறும் பொதுசுகாதார வளாகங்களையும் மாவட்ட நிர்வாகம் விரைந்து ஏற்படுத்திட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.
மாநாட்டில், டி.கலியமூர்த்தி, கந்தசாமி, ஆறுமுகம், கொளஞ்சிநாதன், கல்யாணி, லோகநாதன், தணிகாசலம், ஏழுமலை, கோலமுத்து, தட்சிணாமூர்த்தி, கலாமணி ஆகிய 11 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் கலியமூர்த்தி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சியின் மாநில செயலாளர் தோழர் N.K நடராஜன், மாநாட்டின் பார்வையாளர் மாநில குழு உறுப்பினர் தோழர் தனவேல், மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநில செயலாளர் தோழர் ராஜசங்கர் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தோழர்கள் ஜெயந்தி, அம்ச வள்ளி, கொளஞ்சிநாதன் உள்ளிட்டோர் அடங்கிய தலைமைக்குழு மாநாட்டை வழிநடத்தியது. கட்சி காங்கிரஸ், தீப்பொறி நிதி மாநில செயலாளர் இடம் மாவட்ட செயலாளர் வழங்கினார். முன்னதாக கட்சி கொடியேற்றப்பட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)