மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மெகா மேளாக்களைத் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பிரதமருக்கு இருக்கக் கூடிய வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு 'சாலைக் காட்சிகளை' (Road Shows) நடத்தினார். கர்நாடகத்தில் இருந்த பூக்களையெல்லாம் தன் மீது அள்ளி வீசச் சொல்லி ஷோ காட்டினார். ஆனால், அந்த ஷோவுக்கெல்லாம் கர்நாடக மக்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டுள்ளார்கள். மோடி ஆட்சிக்கு வந்ததும் எல்லாருக்கும் வங்கிக் கணக்கு, ஏழைகளுக்கும் வங்கிக் கணக்கு என்று சொல்லி காசில்லாமல் வங்கிக் கணக்கை துவக்கச் சொன்னார். அதில் நான் பணம் போடுவேன் என்றார். உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள், உங்கள் எரிவாயு எண்ணையும் அதோடு இணைத்திடுங்கள், எரிவாயு சிலிண்டருக்கான மானியப் பணத்தை நான் உங்கள் வங்கிக் கணக்கில் போட்டு விடுகிறேன் என்றார். கொஞ்ச நாட்கள் பணம் போட்டார்கள். அடுத்து வங்கியில் குறைந்தபட்சம் தொகை கணக்கில் இருக்க வேண்டும் என்றார்கள். பின்னர் நம் பணத்தை கொள்ளை அடிக்க ஆரம்பித்தார்கள். இப்போது சிலிண்டருக்கான மானியப் பணமும் போடப்படவில்லை. சிலிண்டர் விலையும் இமாலய சிகரம் தொட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. அதேபோல் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று சொன்னார். ஆனால், இருந்த கொஞ்ச நஞ்ச வேலைகளையும் பறித்தார். இப்போது ரோஜ்கார் மேளாவாம். அதாவது ஒன்றிய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை இதன் மூலம் நிரப்புகிறார்களாம். மே 16 அன்று நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரஸ் மூலம் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை மோடி வழங்கியுள்ளார். இந்த 71 ஆயிரம் பேருக்கும் அது நிரந்தர வேலைதானா என்பது கேள்விக்குறி. இது ஒரு புறம் இருக்க, ஒன்றிய அரசுத் துறைகளில் சுமார் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதுவரை இவற்றை நிரப்புவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை. மாறாக, இருக்கின்ற வேலைகளையும் பறிக்கின்ற நடவடிக்கையையே மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அரசுத் துறைகளையெல்லாம் தனியார் கையிலே தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டி ருக்கிறது. அரசுத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் திட்டமான ரோஜ்கர் மேளாவில், தான் வால்மார்ட், ஆப்பிள், பாக்ஸ்கான், சிஸ்கோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன் என்றும் நாட்டில் தொழில் மற்றும் முதலீடு எப்போதும் இல்லாத வகையில் நேர்மறையான சூழல் காணப்படுகிறது என்று பேசுகிறார். அரசுப் பணியிடங்கள் எத்தனை காலியாக உள்ளன. அவற்றினை நிரப்புவதற்கு தன்னுடைய அரசு என்ன செய்துள்ளது, இதுவரை எவ்வளவு பேருக்கு அரசுத் துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது என்று எதுவும் பேசவில்லை. மாறாக முன்னணி தனியார் நிறுவனங்களைப் பற்றிப் பேசுகிறார். அந்நிய நேரடி முதலீடும் ஏற்றுமதியும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது என்கிறார். ஆட்சேர்ப்பு முறையில் தன்னுடைய அரசு கொண்டு வந்த மாற்றங்கள் காரணமாக ஊழல் மற்றும் உறவினர்களுக்குச் சலுகை வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்கிறார். அரசுத் துறைக்கு ஆட்கள் சேர்ப்பு நடத்தாமல் இருப்பதுதான் மோடி கொண்டுவந்துள்ள மாற்றம். ஊழல் மற்றும் உறவினர்களுக்கு சலுகை பற்றி மோடி பேசுவதுதான் விந்தை முரண். கர்நாடகாவில் இதற்காகத்தான் பாஜக ஆட்சி தூக்கியெறிப்பட்டுள்ளது. இப்படிப் பொய் மேளாக்களை நடத்துவதுதான் மோடி கொண்டு வந்துள்ள மாற்றங்கள். அதற்கும் மக்கள் 2024ல் பதிலடி கொடுப்பார்கள்.